வாழைப்பழ அரசியல் (பகுதி-3)

இதுவரை மரணமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை வெளிவரவில்லை. UFCO (United Fruit Company இன் கட்டளைப்படி இயங்கிய கொலம்பிய துணை இராணுவ கொலைப் படைப் பிரிவு இப் படுகொலையைச் செய்தது.2018 இல் கொலம்பிய அரசுக்கும் விடுதலைப்படையான FARC க்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தபோது, UFCO இன் தலையீடு பற்றி உரையாடப்பட்டது.

UFCO ஆனது 2004 இல் கொலம்பிய துணை இராணுவக் கொலைப் படைக்கு நிதியுதவி செய்ததான குற்றச்சாட்டு எழுந்தது. இந்த உதாரணமானது எந்தளவுக்கு UFCO கொலம்பியாவில் அரசியல் தலையீடு செய்தது என்பதையும் அமெரிக்க கொள்கை வகுப்பில் எந்தளவு தாக்கம் செலுத்தியது என்பதையும் காட்டுகிறது.ஆபிரிக்க நாடுகளை பொறுத்தவரை கொங்கோவில்தான் உலகிலேயே அதிக வகையின வாழைப்பழங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் அவை உள்ளுர்த் தேவைகளுக்கே பாவிக்கப்படுகிறது. மேற்கு ஆபிரிக்க நாடுகளில் கடந்த 20 வருட காலப்பகுதியில் வாழைப்பழ உற்பத்தி பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.

உலக வாழைப்பழ வியாபாரத்தில் 5 வீதமான உற்பத்தியை இப்போ எட்டியுள்ளன. ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிற இந்த வாழைப்பழங்களின் பெரும் பகுதி பிரான்ஸ் க்கும் பிரித்தானியாவுக்கும் போய்ச் சேர்கின்றன. 1975 இலிருந்து ஆபிரிக்க மற்றும் கரீபியன் நாடுகள் எவ்வளவு வேண்டுமானாலும் ஐரோப்பிய சந்தைக்கு வாழைப்பழத்தை ஏற்றுமதி செய்ய முடியும். வளர்முக நாடுகளான ஆபிரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளின் பொருளாதாரமானது வெளியாரின் தலையீடு இன்றி சுதந்திரமாக வளர தமது தாராள இறக்குமதி ஆதாரமாக இருக்கும் என்பது ஐரோப்பிய நாடுகளின் வியாக்கியானமாக இருந்தது.

இந்த வியாக்கியானத்தை சில பொருளாதார நிபுணர்கள் கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள். உண்மையில் நீங்கள் ஆபிரிக்கப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ விரும்பினால், முதலில் ஆபிரிக்க விவசாய உற்பத்திப் பொருட்களை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு போடப்பட்டிருக்கும் தடைகளை அகற்ற வேண்டும். உதாரணமாக பதப்படுத்தப்படாத கோப்பிக்கு 30 வீத வரியும் பதப்படுத்தப்பட்ட கோப்பிக்கு 60 வீத வரியும் நிர்ணயிப்பதை குறிப்பிடுகின்றனர். இந்த இறக்குமதிக் கட்டுப்பாட்டை முதலில் கேள்விக்கு உள்ளாக்க வேண்டும் என்கின்றனர்.

ஆனால் ஆபிரிக்காவிலிருந்து வாழைப்பழங்களை எந்தக் வரிக் கட்டுப்பாடுமின்றி ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். ஏனெனில், ஆபிரிக்காவில் விளையும் வாழைப்பம் மற்றும் அன்னாசிப் பழங்களின் உற்பத்தியை UFCO போன்ற அமெரிக்கக் கம்பனிகள்தான் கையில் வைத்திருக்கின்றன. ஆக, ஆபிரிக்காவின் மற்றைய விவசாய உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை வைத்துக்கொண்டு, ஆபிரிக்க பொருளாதார அபிவிருத்தி குறித்த வியாக்கியானத்தை சொல்வது இன்னொரு ஐரோப்பியப் பொய் ஆகும்.

(தொடரும்)