வாழ விடு வாறை(War) விடு (பகுதி 3)

இதைத்தான் மேற்கு ஆபிரிக்காவிற்கு எதிராகவும் அண்மையில் இதே கூட்டமைப்பு செயற்படுத்தியது.

உக்ரேனை விட இஸ்ரேல் முழுமையாக தேவை என்பதாக அமெரிக்காவின் ஏற்கனவே முடிந்த முடிவான நிலைப்பாட்டிற்கு தற்போது ஒரு அவசர ஆபத்து சூழல் இஸ்ரேலுக்கு உருவானால் அமெரிக்காவும் அதன் கூட்டமைப்புகளும் உக்ரேனை கைவிடுவதற்கு தயங்காது.
இவற்றை நோக்கித்தான் இஸ்ரேலின் ஹமாஸ், ஹிஸ்புல்லா மீதான தாக்குதல் என்பதன் அடிப்படையில் காஸா, லெபனான் மீதான தாக்குதல்களில் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் உக்ரேன் அளவிற்கு இணைவார்களா இல்லையா என்பது அமையப் போகின்றது.

இந்த ‘தாமத’ நிலமை இருக்கும் வரை பாலஸ்தீனம், லெபனான் நாடுகளில் அமெரிக்க நாடுகளால் ஏற்படும் அழிவுகளில் இருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.

தற்போது எல்லாம் யுத்தத்தை தவிர்த்து சமானத்தை நோக்கிய பயணம் என்பதை கருத்தில் கொள்ளாது கப்பலை அனுப்பி யுத்தக் கப்பல்களை ஆயுதங்களை அனுப்பி அழிவுகளை ஏற்படுத்தல் என்பது முனைப்பு பெற்றிருப்பது.. உலகம் எங்கு போய் கொண்டிருக்கின்றது என்ற கேள்விகளை மக்களிடம் எழுப்பி இருக்கின்றது.

செயற்கையாக உருவாக்கப்பட்ட நாடு என்பதாகவே இஸ்ரேலை நாம் பார்க்க முடியும். 1948 இல் ஆரம்பத்தில் பலஸ்தீனங்கள் (முஸ்லீம்கள் கத்தோலிகர்கள் யூதர்கள்) தம்மிடம் 45 வீத நிலத்தை வைத்துக் கொண்டு 55 வீத நிலத்தை இஸ்ரேல் உருவாக்கத்திற்கு வழங்கினர். இது ஒரு வகை நிர்பந்தங்களின் காரணமாகவே ஏற்பட்டது. கூடவே பாலஸ்தீனர்களின் நிலங்களை அதிக விலைக்கு வாங்கி அவர்களை அதே நிலத்தில் சிறுபான்மையினராக்கும் கைங்கரியங்களை யும் திட்டமிட்டு செய்தனர் இஸ்ரேலியர்கள் என்ற பார்வையும் உண்டு.

இதற்கு வலுச் சேர்க்கும் (பூகோள)வரைபடங்களே 1948 தொடக்கம் இன்று வரை அந்தப் பிரதேச மக்கள் பரம்பல்கள் தகவல்கள் நிறுவி நிற்கின்றன.
இது ஒரு வகையில் இலங்கையில் தமிழர்கள் தமது பாரம்பரிய பிரதேசங்களை படிப்படியாக இழந்து வருவதற்கு ஒத்ததாகும்
அன்று அரேபியர்களாக யூதர்களுக்கு இருக்க இடம் வழங்கிய பலஸ்தீனர்கள் இன்று இஸ்ரேலிடம் தமக்கான இருப்பிடத்திற்கு நிலத்தை விட்டு விடுங்கள் வழங்குகள் என்பதாக 1948 இற்கு பின்னரான இந்த 70 ஆண்டுகளில் நிலமை மாறியுள்ளது.

ஹிட்லர் ஆல் ஜேர்மனியில் 2ம் உலகப் போர் காலத்தில் நடாத்தப்பட்ட இனி அழிப்பில் கிடைத்த உலகளாவிய அனுதாபத்தை யூதர்கள் தமது பூர்விகத்தை அடிப்படையாகச் சொல்லி உகண்டா, அவுஸ்திரேலியாவின் ஒரு பகுதியில் பிரித்தானியாவினால் வழங்கப்பட்ட இடங்களை தவிர்த்து பலஸ்தீனத்தின் ஒரு பகுதியில் தமது தாயகமாக எடுத்துக் கொண்டனர் என்ற வரலாற்றுக் குறிப்புகள் கூறி நின்றாலும்….

மத்திய கிழக்கு நாடுகளின் வளங்களை பங்கு போடும் தேவைகள் அமெரிக்காவிற்கும் ஏனைய ஐரோப்பிய பிரித்தானியாவிற்கும் மத்திய கிழக்கில் இஸரேலின் உருவாக்கம் இருப்பு தேவையாக இருந்தது.
இந்த இஸ்ரேலின் உருவாக்கம் தமக்கு எதிர் காலத்தில் நிச்சயம் உதவும் என்பதான பிரதான நோக்கமே மத்திய கிழக்கில் இஸ்ரேலின் உருவாக்கத்தின் முக்கிய பூகோள அரசியலாக பார்க்கவே வைக்கின்றது.

மகாத்மா காந்தி, நேரு, இந்திரா காந்தி, வாஜ்பாயி வரை பாலதீனமக்கள் பக்கம் உரிமை வேண்டி நிற்கும் பாதிக்கப்படும் மக்கள் பக்கம் இந்தியா நின்றிருக்ன்றது.

ஆனால் இன்று மோடி இஸ்ரேல் பக்கத்தில் நிற்பது அவர்களது வலதுசாரி சிந்தனையின் வெளிப்பாடின்றி வேறு ஏதும் இல்லை.

இஸ்ரேலின் ஆளும் வர்க்கத்தின் முஸ்லீம்கள் மீதான வெறுப்பு வாதம், யூத சியோனிசத்திற்கும் பாஜக வின் முஸ்லீம் மீதான வெறுப்பு வாதமும் இந்துத்துவ கொள்கையும் இவர்கள் இருவர்கள் இடையேயும் நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

சியோனிசமும் இந்துவத்துவாவும் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்.
1948 உருவாக்கபட்ட இஸ்ரேல் நாட்டை உடனடியாக அமெரிக்க சார்பு 40 நாடுகள் வரையும் அங்கீகரித்த செயற்பாடும் தொடர்ந்து பலஸ்தீனத்தை மறுதலித்ததுமான செயற்பாடுகளும் கூடவே பலஸ்தீனம் மீதான ஆக்கிரமிப்பும் அது சார்ந்த பலஸ்தீன மக்கள் மீதான தாக்குதலும் பலஸ்தீனியர்கள் தமக்கான நிலத்தை காப்பாற்றும் போராட்டமாக….ஆயுதப் போராட்டத்தை தோற்றுவித்தது.

அது அங்கு பல விடுதலை அமைப்புகளை உருவாகுவதற்கும் காரணமாயிற்று. உரிமை மறுக்கப்படும் எந்த மனிதக் குழுவும் இனமும் தேசமும் போராடவே செய்யும்.

பலஸ்தீன மக்கள் மத்தியில் உருவான விடுதலை அமைப்புகள் மத்தியில் உருவான பலமான ஒரு குடையின் கீழான யாசீர் அரபாத் தலமையில் ஐக்கிய முன்னணி பி.எல்.ஓ(PLO) பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை ஒரு பலமான திசை வழியில் நகர்த்திய 1980 களின் கால கட்டத்தை உருவாக்கியது.

அது உலகில் உரிமையிற்காக போராடிய பல உலக விடுதலை அமைப்புகளுக்கு சிறப்பாக ஈழ விடுதலை அமைப்புகளுக்கும் தோழமையாக செயற்பட்டும் வந்தது. இதனை நாம் தமிழ் நாட்டில் வாழ்ந்த காலங்களில் நேரடியாக காணுற கூடியதாக இருந்தது.

ஈழவிடுதலை அமைப்புகளில் இடதுசாரிச் செயற்பாட்டாளர்களே இது மாதிரியான சர்வதேச விடுதலை அமைப்புகளின் ஆதரவுகளை பெற்றவர்களாக திகழ்ந்தனர் என்பது இங்கு முக்கியமாகின்றது.

எமது விடுதலைக்காக அன்றும் இன்றும் கரம் கொடுக்கும் பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக அவர்கள் மேல் அழிவுகளை மேற்கொள்பவர்களின் செயற்பாட்டிற்கு எதிராக அறம் சார்ந்து செயற்படுவதே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும்.

(புகைப்படத்தில் இந்தியத் தலைவர்களுடன் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசீர் அரபாத்)

(தொடரும்…)