இந்திய பொருளாதாரம் 2023 – துள்ளிக் குதிக்கும் மீன்வளத் துறை

மீன் பிடிப்பதில் இந்தியா உலகளவில் 2வது இடம் வகிக்கிறது. உலக மீன் உற்பத்தியில் நமது பங்கு 7.56% ஆகும். 2019-20-ல் மீன் ஏற்றுமதியின் மதிப்பு மத்திய மீன்வளத் துறை மதிப்பீட்டின்படி ரூ. 46,662.85 கோடி.

மீன் ஏற்றுமதியை இரட்டிப்பாக்கும் சாத்தியம் உள்ளது. இதனை முன்னெடுக்கும் விதமாக, 2020 செப் 10 அன்று, பிரதமரின் “மத்ஸ்யசம்பதா திட்டம்” தொடங்கப்பட்டது. இந்த திட்டத்துக்காக, 2025வரை ரூ. 20,050 கோடி முதலீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதில், மத்திய அரசின் பங்கு ரூ.9,407 கோடி; மாநில அரசுகளின் பங்கு ரூ.4,880 கோடி; பயனாளிகளின் பங்கு ரூ.5,763 கோடி.

2015-16-ல் 5 ஆண்டுகளுக்கு ரூ.3,000 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட ‘நீலப் புரட்சி’ மார்ச் 2020-ல் நிறைவு பெற்றது. மத்திய அரசு, 2025-ல் மீன் ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது.

நம்நாட்டில் 7,500 கி.மீ நீளத்துக்கு கடற்கரை இருக்கிறது. இத்துடன், 1,91,024 கி.மீ. நீள கால்வாய்கள், ஆறுகள்; 1.2 மில்லியன் ஹெக்டேர் பரப்பில் ஏரிகள்; 2.36 மில்லியன் ஹெக்டேர் அளவுக்குக் குட்டைகள்; 3.54 மில்லியன் ஹெக்டேர் பரப்பில் நீர்த்தேக்கங்கள் உள்ளன. ஆனால் நாம் அவற்றை கண்டு கொள்வதில்லை.

கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு இந்தத் திசையில் கவனத்தைத் திருப்பியுள்ளது. அதன் விளைவாக உள்நாட்டு மீன் உற்பத்தி 8.5 மில்லியன் டன்னாகப் பெருகியுள்ளது. இதனை 13.5 மில்லியன் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, 2,983 ஹெக்டேர் அளவில் குளங்களில் மீன் பிடிப்பு; 676 பயோபிளாக் மற்றும் மறுசுழற்சி மீன்வளர்ப்பு முறைகள், உவர் நீர் மீன் வளர்ப்புத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தன. ஆனால், இன்னமும் உள்நாட்டு மீன்பிடிப்பில் முழுத் திறனும் எட்டப்படவில்லை.

மீன்பிடித் தடைக் காலத்தில் 6,58,462 மீனவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்; தற்சார்பு இந்தியா நிதியுதவி திட்டத்தின் கீழ் மீனவர் உட்பட 2.5 கோடி விவசாயிகளுக்கு 2 லட்சம் கோடி ரூபாயில் கடன் சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

அடுத்த மூன்று ஆண்டுகளில், 70 லட்சம் டன் கூடுதல் மீன் உற்பத்தி, மீன் ஏற்றுமதியை ரூ.46,589கோடியில் இருந்து ஒரு லட்சம் கோடியாக உயர்த்துதல், மீனவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், 55 லட்சம் கூடுதல் வேலைவாய்ப்புகள், மீனவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் போன்ற இலக்குகள் எல்லாம் நிறைவேறினால் இந்தியப் பொருளாதாரம் மிக நல்ல முன்னேற்றம் காணும்.

மீன் உற்பத்தி 13.5 மில்லியன் டன் என்கிற இலக்கை எட்டுவதற்கு, சந்தைப் போக்கு, மீன்பிடிப்பு முறைகள், மீன் பதப்படுத்துதல் வசதி, சந்தை ஆய்வுகள் உள்ளிட்டவற்றுக்கு போதிய நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.

உலக மீன் சந்தையில் மதிப்புக்கூட்டு பொருட்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. இந்தியாவில், பதப்படுத்தப்பட்ட மீன்களில் காட்டப்படும் வேகம், மற்றதில் இல்லை. மீன் சார்ந்த மதிப்புக் கூட்டுப் பொருட்களின் உற்பத்தியிலும் நாம் வெகுவாகப் பின்தங்கி உள்ளோம். இது குறித்த விழிப்புணர்வு, தெளிவான செயல் திட்டம் தற்போதைய உடனடித் தேவை.

மீன்வளத்தைப் பெருக்குவதில், தனியார் நிறுவன முதலீடுகளை வரவேற்பதாக, 2022 ஜனவரியில் மீன்வளத் துறை நடத்திய கருத்தரங்கில், இணைச் செயலாளர் (உள்நாட்டு மீன்வளம்) கூறினார். இது தவிர்க்கப் படலாம். தனியார் முதலீடுகள், நமது மீன்வளப் பெருக்கத்தில் சுரண்டலுக்கு வழிகோலும். அரசின் மூலதனத்தில் மீன்வளத்தைப் பெருக்குதலே மிக நல்லது.

வரும் ஆண்டில் இதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து,நிர்ணயிக்கப்பட்ட இலக்கு நோக்கி நகர்ந்தால், நாட்டில் பொருளாதாரம் வளரும்; மீனவர் வாழ்வாதாரம் உயரும்.