கலைவாதி கலீல் மறைவுக்கு அஞ்சலி!

கலீலின் சொந்த இடம் மன்னாராகும். கலீலுக்கும் எனக்கும் இடையிலான உறவு 1960 களின் பிற்பகுதியில் ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தில் எமது புரட்சிகர இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி வேலைகளுக்காக நான் மன்னாருக்குச் செல்வதுண்டு. அங்கு சிகையலங்கார நிலையம் நடத்தி வந்த தோழர் பங்கிராஸ் என்பவர் (பொன்னையா அண்ணை) மூலம் கலீலின் தொடர்பு ஏற்பட்டது. கலீல் மூலம் அவரது இணையரான சகோதரருடனும் ஏனைய மன்னார் வாழ் முஸ்லீம் இளைஞர்களுடனும் தொடர்புகள் ஏற்பட்டன. அவர் மூலம் 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மன்னாரில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட விடத்தல் தீவைச் சேர்ந்த என்.எஸ்.ஏ.காதர் என்ற முற்போக்கு இளைஞடனும் தொடர்பு ஏற்பட்டது.

கலீலும் ஏனைய தோழர்களும் இணைந்து மன்னாரில் ‘மக்கள் முன்னேற்றக் கழகம்’ எனும் ஒரு அமைப்பை உருவாக்கி முற்போக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்கள். அந்த அமைப்புக்கு மன்னார் நகரில் அலுவலகம் ஒன்றும் இருந்தது. நான் மன்னாருக்குச் செல்லும் போது அந்த அலுவலகத்தில் சில வேளைகளில் தங்கியிருக்கிறேன். அன்றைய காலகட்டத்தில் மன்னார் வாழ் முஸ்லீம் இளைஞர்கள் மத்தியில் முற்போக்கு சிந்தனைகளை ஊட்டியதில் கலீலுக்கு அளப்பரிய பங்கு உண்டு.

கலீல் ஒரு சிறந்த ஓவியரும் கூட. நாம் ஒருமுறை சீனாவிலிருந்து வெளியிடப்பட்ட, ‘சீனாவில் ஏன் பணவீக்கம் இல்லை?’ (Why China has no inflation?) என்ற நூலை தமிழில் வெளியிட முற்பட்ட வேளை அதற்கான படங்களை அந்தப் புத்தகத்தில் இருந்தவாறு அப்படியே தத்ரூபமாக வரைந்து தந்தார்.

யாழ்ப்பாணம் வரும் சமயங்களில் எமது யாழ் புத்தக நிலையம் வந்து எம்மைச் சந்தித்து அளவளாமல் போகமாட்டார். அவரை நான் இறுதியாகச் சந்தித்தது 2000 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நான் கொழும்பில் ‘தினகரன்’ பத்திரிகையில் வேலை செய்த காலத்தில் ஆகும். அங்கு எம்முடன் வேலை செய்த தோழர் சம்ஸ் அவர்களைச் சந்திக்க வந்தவர் என்னையும் கண்டு அளவளாவிவிட்டுச் சென்றார்.

கலீலின் இழப்பு முஸ்லீம் சமூகத்துக்கு மட்டுமின்றி, அனைத்து முற்போக்கு சக்திகளுக்கும் இழப்பாகும். அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், தோழர் கலீலுக்கு எமது அஞ்சலியையும் செலுத்துகின்றோம்.