சிவாஜி நடிப்புக்காகவே வாழ்ந்த மகத்தான மனிதர்!” – சோ

“அரசியல்வாதி ரோலுக்கு உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எல்லாம் சேர்த்துக்கோ” என்று சிவாஜி சொல்லிவிட்டார். டைரக்டர் மாதவனிடம் சொல்லிவிட்டார்.

அதில் வருகிற கான்ஸ்டபிள் பாத்திரத்தை நான் புரிந்து கொண்டு நடிப்பதற்காக தங்கப் பதக்கம் நாடகத்தில் நடித்தவர்களை எல்லாம் வரச்சொன்னார் சிவாஜி.

அதில் கான்ஸ்டபிள் பாத்திரம் வரக்கூடிய காட்சிகளை எல்லாம் ஸ்டூடியோவில் எனக்காக அவரும் சேர்ந்து நடித்துக் காண்பித்தார். “இது நாடகத்தில் வந்தது. இதுக்கு மேலே நீ எப்படிப் பண்றீயோ பண்ணிக்க” என்று சொன்னார்.

அவர்கூட நடிக்கும்போது மற்றவர்கள் நன்றாகப் பண்ணினால் அவர்களை மேலும் உற்சாகப்படுத்துவார். அதே சமயத்தில் குறிப்பிட்ட ஸீனைக் கெடுக்கிற மாதிரி யாரும் பண்ணிவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருப்பார்.

மேக்கப் சென்ஸ் அவரிடம் அதிகம். அந்தந்த பாத்திரங்களுக்கு ஏற்றபடி மேக்கப் பண்ணிக் கொள்வதில் அதிக சிரத்தையுடன் இருப்பார். பார்வைக்கு அந்தப் பாத்திரமாகவே மாறிவிட நினைப்பார்.

கேமராவை அவருக்கு முன் வைத்தால் அவரை மிஞ்சுவதற்கு ஆள் கிடையாது. நடிப்பில் இவரை மாதிரி ‘வெரைட்டியான’ கதாபாத்திரங்களைப் பண்ணினவரும் கிடையாது. ஆனால் கேமராவை எடுத்துவிட்டால் அவருக்கு நடிக்கத் தெரியாது.

நிறைய பெர்சனல் விஷயங்களை எல்லாம் என்னைக் கூப்பிட்டு ‘டிஸ்கஸ்’ பண்ணியிருக்கிறார். அந்த அளவுக்கு என்னை அவருக்குப் பிடிக்கும்.

ஒருதடவை ஏதோ ஒரு நிகழ்ச்சியில் நான், சிவாஜி, ஏ.வி.எம்.சரவணன் மூவரும் உட்கார்ந்திருந்தோம். வழக்கம் போல என்னை காய்ச்சி எடுத்துக் கொண்டிருந்தார்.

“ஏன்… சோவை மட்டும் இப்படி கரம் வைச்சு கிண்டல் அடிக்கிறீங்களேர்களே?” என்று சரவணன் சிவாஜியிடம் கேட்டபோது அவர் சொன்னார்.

அதுக்குக் காரணம் இருக்கு.. வேற யாரையும் இப்படிப் பண்ணமாட்டேன். காரணம், எனக்கு அவனைத் தெரியும் அவனுக்கு என்னைத் தெரியும்.”

அந்த அளவுக்கு என் மீது அவருக்கு நம்பிக்கை.

அரசியல் ரீதியாக அவர் இறங்கியதை நான் ஒத்துக் கொள்ளவில்லை. நான் ஒத்துக்கொள்ளவில்லை என்பதை அவர் ஒத்துக்கொள்ளவில்லை. அதில் நாங்கள் மாறுபட்டு நின்றோம்.

நான் துக்ளக் பத்திரிகை ஆரம்பிக்கும் போது என்னை பயங்கரமாகக் கிண்டல் பண்ணினார். “ஏற்கனவே உன்னுடைய கிறுக்குத் தனத்தைப் பற்றிக் கேட்க வேண்டாம். பத்திரிகை வேற ஆரம்பிக்கப் போற… ஒரு குரங்கு கள்ளைக் குடிச்சு, அதற்கு தேளும் கொட்டி, அதன் கண்களில் மிளகாய்ப் பொடியையும் தூவிக்கிட்டால் என்ன ஆகுமோ அப்படி இருக்கப் போகுது உன் பத்திரிகை… நடத்து..”

எப்படிப்பட்ட ஆசீர்வாதம் பாருங்க!

இப்படிச் சொன்னாலும் துக்ளக்கைத் தொடர்ந்து படிப்பார். அதைப் பற்றி மற்றவர்களிடம் பெருமையாகச் சொல்வார். என்னுடைய அரசியல் சார்புகளை விமர்சிப்பார். கிண்டல் பண்ணுவார்.

என்னுடைய நாடகங்கள் பலவற்றிற்கு வந்திருக்கிறார். “ஏதோ உனக்காக வந்திருக்கேன்னு நினைக்காதே.. அம்பி (என்னுடைய தம்பி) நடிப்பு எனக்குப் பிடிக்கும். அதுக்காகத்தான் வந்திருக்கேன்..” என்று சொல்வார்.

நானும் ஒவ்வொரு நாடகத்திற்கும் அவர் வரும்போது முன்னாடியே அவரிடம், “நீங்க எனக்காக வரலை.. அம்பிக்காகத்தான் வந்திருக்கீங்கன்னு தெரியும்” என்று சொல்வேன்.

நாடகத்தில் அவருக்கு இருக்கிற ஈடுபாட்டுக்கு ஒரு உதாரணம். அவருடைய நாடகக் குழுவில் இருந்த நடிகர் செந்தாமரையை ஒருநாள் எங்களுடைய நாடகத்தில் குறிப்பிட்ட பாத்திரத்தில் நடிக்கச் சொன்னோம். பாரதியார் வேடம்.

சரி என்று ஒப்புக்கொண்டு செந்தாமரை நாடகத்தில் நடிக்க வந்துவிட்டார். செந்தாமரை நடிக்க வருவது தெரிந்ததும் சிவாஜியும் நாடகத்துக்கு வந்துவிட்டார். வந்தவர் பார்வையாளர் வரிசையில் உட்காராமல் – நாடக மேடையின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு நாடக ஸ்கிரிப்ட்டைக் கையில் வைத்துக்கொண்டு செந்தாமரைக்கு ‘பிராம்ட்’ பண்ணினார், அவ்வளவு பெரிய நடிகர்.

தன்னுடைய குழுவில் இருக்கிற நடிகருக்காக அவர் எந்த அளவுக்கு ஒன்றியிருக்கிறார் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். நடிப்பில் அந்த அளவுக்கு ஆர்வம். பிறகு “நானே அந்த ரோலைப் பண்ணியிருக்கலாம்டா” என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்.

என்னுடைய கதை வசனத்தில் ஒரு படத்தில் அவர் நடித்திருந்தார். அதில் ஓரிடத்தில் நீளமான வசனம் ஒன்றை எழுதியிருந்தேன். நான் டைரக்டர் முக்தா சீனிவாசனிடம் “அதை ஒரே ஷாட்டா எடுத்தா நல்லா இருக்குமே சார்” என்று சொன்னேன்.

“நல்லா எழுதியிருக்கான் சோ… அவன் ஆசைப்பட்ற மாதிரியே ஒரே ஷாட்டில் எடுத்துறலாம்” என்று ஒரே ஷாட்டில் நடித்து முடித்தார் சிவாஜி.

தங்கப்பதக்கம் படத்தில் அவர் நடிப்பில் இருந்த மிடுக்கை நேரடியாக அருகிலிருந்து பார்த்து வியந்திருக்கிறேன். அதே மாதிரி கலாட்டா கல்யாணம் படத்தில் காமெடி பாத்திரத்தை சர்வசாதாரணமாகப் பண்ணியிருப்பார். தைராய்டு பற்றாக்குறை உள்ளவன் நான். 1950-லேயே இந்தக் குறைபாடு ஆரம்பித்துவிட்டது. அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டு மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டிருப்பேன்.

சிவாஜியுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது என்னைக் கூப்பிட்டார். அவருக்கு தெரியும் தைராய்டு சிகிச்சைக்காக நான் மாத்திரைகள் சாப்பிடுகிற விஷயம்.

“என்னடா.. மாத்திரை சாப்பிடுவியே… அது சாப்பிடலையா…?” “ஆமா… ஒரு வாரமா சாப்பிடலை.. கொஞ்சம் விட்டுப் பார்த்திருக்கிறேன்..”

“ஏண்டா.. இப்படிப்பண்ற..? உன் வாயெல்லாம் குழறுது… தடிச்சுப் போறது.. வழக்கமாகப் பேசுற மாதிரி இல்லை.. மாத்திரையை ஒழுங்காச் சாப்பிடு. அப்படி மாத்திரை சாப்பிட்டா எத்தனை நாட்களில் சரியாகும்?”

“ஒரு வாரம் ஆகலாம்” – சொன்னேன்.

“அப்படினா… ஷூட்டிங்கை ஒரு வாரம் தள்ளி வச்சுக்கலாம்”

அந்த அளவிற்கு உடன் நடிக்கிறவர்களின் சின்ன தடுமாற்றங்களைக் கூட கூர்ந்து கவனித்து, அதற்கேற்றபடி படப்பிடிப்பைக் கூட தள்ளிவைக்கிற அளவுக்கு அவர் அக்கறை காட்டியது எல்லாம் இப்போது நினைக்கும்போது கூட ஆச்சரியப்படுத்துகிறது.

‘யாருக்கும் வெட்கமில்லை’ என்ற எங்களுடைய நாடகத்தைப் பார்க்க வந்திருந்தார் சிவாஜி. மறுநாள் என்னை அழைத்திருந்தார். போனேன். மேக்கப் ரூமில் இருந்தார்.

“ரொம்ப பிரமாதம்டா இந்த நாடகம்… ஒவ்வொரு சீனும் அவ்வளவு அருமையா வந்திருக்குடா… நல்லா இருக்கு…” என்று சொல்லச் சொல்ல எனக்குத் தலை கால் புரியவில்லை.

மேக்கப் போட்டுக் கொண்டே அந்த அளவுக்குப் புகழ்ந்துவிட்டு “நீங்க எல்லாம் மேடையில் வந்து வசனம் பேசறப்பவே நாடகம் இவ்வளவு நல்லா இருக்கே.. இன்னும் கொஞ்சம் நடிக்க ஆரம்பிச்சிங்கன்னா எவ்வளவு நல்லாயிருக்கும்?” என்று கிண்டலாகச் சொன்னபோது, “இதுக்காகவா சார்… கூப்பிட்டு அனுப்புச்சீங்க?” என்று சொல்லிவிட்டு வந்தேன்.

அவருக்காக ஒரு நாடகம் எழுதவில்லையே என்கிற குறை எனக்கு உண்டு. அதே குறை அவருக்கும் உண்டு.

“நல்ல நாடகம் எல்லாம் நீயே எழுதிக்க… எனக்குக் கொடுத்திறாதே.. என்று இடக்காக என்னிடம் சொல்வார்.

‘வந்தே மாதரம்’ என்ற தொடர் தொலைக்காட்சியில் வந்த போதும் பார்த்துவிட்டு இதையே தான் சொன்னார்.

‘தாதா சாஹிப்’ விருது அவருக்குக் கிடைத்தபோது அதற்கு முக்கியக் காரணம் என்று என்னைக் குறிப்பிட்டு சிவாஜி சொன்னதாக குமுதத்தில் அப்போது ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்கள். அதற்கான பின்னணி குறித்து அவருக்குத் தெரிந்தாலும் நேரடியாக என்னிடம் அது குறித்து அவர் பேசியது இல்லை. மற்றவர்களிடம் சொல்லி இருக்கிறார்.

அதே தாதா சாஹிப் விருதுக்காக கோயம்புத்தூரில் அவருக்குப் பாராட்டு விழா. நானும் போயிருந்தேன். அரங்கத்துக்குப் போகும் போது பெரும் கூட்டம். கூட்டம் “சிவாஜி வாழ்க” என்று மீண்டும் மீண்டும் விண்ணதிர கோஷங்களை எழுப்பியது.

சிவாஜி திடீரென்று இடையில் “சோ வாழ்க!, சோ வாழ்க!” என்று உரக்கக் கூவ, மற்றவர்கள் திகைத்து, மீண்டும் அவர் “சோ…” என்றார். கூட்டம் “வாழ்க…” என்றது.

“என்னடா! உனக்குக் கிடைக்கிற வரவேற்பைப் பார்த்தியா?” என்றார் சிவாஜி.

“எனக்கா சார் வரவேற்பு. உங்க டைரக்ஷன். அதுக்கு அவங்க நடிக்கிறாங்க!” – என்றேன் நான்.

இப்படி அன்பை காட்டக் கூடியவர் அவர்.

நடுவில் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போன சமயத்தில் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். வீட்டில் “கமலா” என்று கூப்பிட வாயைத் திறக்கிறாராம். கூப்பிட முடியவில்லை அவரால்.

“பேச்சு வரலைடா எனக்கு. உடனே எனக்கு என்ன தெரியுமா ஞாபகத்துக்கு வந்தது?” அவருடைய குரல் தளர்ந்தூ தடுமாறியது.

“என்ன சார்?”

“கட்டபொம்மன் டயலாக் ‘பேச்சு அதுதான் என் மூச்சு’ அது தாண்டா ஞாபகத்துக்கு வந்தது. இன்னும் கஷ்டமாப் போச்சு. நல்லவேளையா அது சரியாப் போச்சு…”

ஒரு பக்கம் ‘திரும்பிப் பார்’ படத்தில் காமாந்தகார வில்லன்; இன்னொரு பக்கம் அப்பர் (திருநாவுக்கரசர்), ‘சபாஷ் மீனா’ படத்தில் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாத ஹீரோ, ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் பொறுப்பில் இருந்து சற்றும் விலகாத ஹீரோ,

‘கட்டபொம்மன்’ படத்தில் வாயைத் திறந்தால் வீரம் தான் என்கிற ஹீரோ, மற்றொருபுறம் தேச நலனுக்கும் தான் ஒரு தூசு என்று செயல்பட்ட தியாகி ‘கப்பலோட்டிய தமிழன்’ – இப்படி அவர் தன்னுடைய நடிப்பில் காட்டாத பன்முகத்தன்மையை இல்லை.

அந்த அளவுக்கு வெவ்வேறு உணர்ச்சிகளைக் காட்டக்கூடிய கதாபாத்திரங்களை அவர் பண்ணியிருக்கிறார்.

அப்பேர்பட்ட நடிகர்!

சிவாஜி மாதிரி நடிப்புக்காகவே பிறந்து வாழ்ந்த மகத்தான ஒரு மனிதரை இனிமேல் பார்க்க முடியாது.

(தொடரும்…)