டோக்யோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கியை உச்சத்துக்குக் கொண்டு சென்ற சிங்கப் பெண்கள்

இந்திய பெண்கள் ஹாக்கி அணி வரலாற்றிலேயே முதல் முறையாக, டோக்யோ லிம்பிக் போட்டிகளில் அரை இறுதிப் போட்டி வரை முன்னேறியது. கடைசி வரை போராடியும் அர்ஜென்டினா உடனான அரை இறுதியில் தோல்வியைத் தழுவியது.

கடந்த ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற குரூப் போட்டியில் கூட பிரிட்டன் 4-க்கு 1 என்கிற கோல் கணக்கில் இந்தியாவை வெற்றி கொண்டது இங்கு நினைவுகூரத்தக்கது.

இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் இந்த பயணம் அத்தனை எளிதாக இல்லை. பெண்கள் மீதான பாலியல் ரீதியிலான விமர்சனங்கள், சமத்துவமற்ற ஆணாதிக்கவாத சிந்தனைகள், பொருளாதார சிக்கல்கள், பிற்போக்கான சமூக கட்டுப்பாடுகள் என மிகவும் கரடுமுரடான பாதையாகவே இருந்தது.

“ஹாக்கி விளையாடி என்ன செய்யப் போகிறாள், குட்டையான ஆடைகளை அணிந்து கொண்டு க்ரவுண்டை சுற்றி ஓடி சமூகத்துக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுப்பாள்” என அவரது பெற்றோரிடமோ குறை கூறி விமர்சிக்கப்பட்டவர் தான் இன்று இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் தலைவர் மற்றும் இந்தியாவின் ஃபார்வேர்ட் ராணி ராம்பால்.

பெண்தன்மை குறைவதால் இந்தியாவின் மற்றொரு முக்கிய ஃபார்வேர்ட் வீராங்கனையான வந்தனா கடாரியா ஹாக்கி விளையாட ஊக்குவிக்கப்படவில்லை.

மதுப்பழக்கத்துக்கு அடிமையான தந்தையால் துன்பப்பட்ட நேஹா கோயல் ஹாக்கியில் நிம்மதி கண்டார்.

2015ஆம் ஆண்டு பக்கவாத நோயால் நிஷா வர்ஸியின் தந்தை பாதிக்கப்பட்ட பின், குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைக்காக ஆலை ஒன்றில் கூலி வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார் அவரது தாயார்.

ஜார்கண்டில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் வளர்ந்த நிக்கி பிரதான் உடைந்த ஹாக்கி பேட்டை வைத்துக் கொண்டு, கரடு முரடான பரப்பில் ஹாக்கி விளையாடத் தொடங்கினார்.

இப்படி இந்திய மகளிர் ஹாக்கி அணியில் விளையாடிய பெண்கள் அனைவரும், ஏற்கனவே பல்வேறு தடைகளைத் தாண்டி வந்துள்ளனர், விமர்சனங்களை மோதி மிதித்து எறிந்துள்ளனர்.

இந்திய பெண்கள் ஹாக்கி அணி, பிரிட்டனுக்கு எதிராக இன்று வெண்கலத்தை வெல்லவில்லை எனினும், அவர்கள் ஓர் அணியாக டோக்யோ ஒலிம்பிக்கில் தொட்ட இந்த உயரம் நிச்சயம் கொண்டாடப்பட வேண்டியவையே.

விளையாட்டு வீரர்களை விமர்சித்தது ஒரு பக்கம் என்றால், இந்திய மகளிர் அணி குருப் ஆட்டங்களைக் கூட தாண்ட மாட்டார்கள் என சில விமர்சனங்கள் எழுந்தன.

தங்களின் ஆணித்தரமான வெற்றிகள் மூலம், அதை உடைத்துக்காட்டினர். காலிறுதியில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவையே தோற்கடித்தது இந்திய மகளிர் ஹாக்கி அணியின் மகத்தான வெற்றிகளில் ஒன்று.

இந்திய பெண்கள் அணி அப்படி ஒரு பிரமதமான திறனோடு, அசாத்திய வேகத்தோடும் விளையாடியது. அது ஓர் அற்புதத் தருணம்.

1980ஆம் ஆண்டு முதல் இந்திய பெண்கள் ஹாக்கி அணி, டோக்யோ உட்பட மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் தான் விளையாடியுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்திய பெண்கள் ஹாக்கி அணியில் பெரும்பாலான பெண்கள் மிகவும் எளிமையான பின்புலத்திலிருந்து வருகின்றனர். அரசு வேலை, ஒரு நிலையான மாத சம்பளம் வீராங்கனைகளின் கனவுகளை நிறைவு செய்துவிடுவதாக அமைந்துவிடுகின்றன.

2012ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் பெண்கள் ஹாக்கியை மேம்படுத்தும் வகையில் சில பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நீல் ஹாகுட் இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் பயிற்றுநராக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையின் கீழ் தான் 36 ஆண்டுகளில் முதல் முறையாக 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி கலந்து கொள்ள தகுதி பெற்றது.

ஆனால் பெண்கள் ஹாக்கி அணி ரியோவில் எதிர்பார்த்த அளவுக்கு பெரிதாக சாதிக்கவில்லை. இருப்பினும் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு ஒரு நல்ல அனுபவமும், நம்பிக்கையும் கிடைத்தது. அணிக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுத்தால், அவர்களால் சாதிக்க முடியும் என்பதையும் உணர்த்தியது.

தற்போது ஜோர்ட் மரின் (Sjoerd Marijne) என்கிற பயிற்றுநரின் கீழ், இந்திய அணி பெறும் பயிற்சியில் பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. உலக வீராங்கனைகளுக்கு நிகராக தற்போது இந்திய வீராங்கனைகளும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தான் ஹாக்கி விளையாட்டில் அறிவியல் பூர்வமான விஷயங்களால் இந்திய பெண்கள் ஹாக்கி அணி பலன் பெறத் தொடங்கியுள்ளது.

இந்த 16 பேரும் தங்கள் பயணங்களை, தங்களின் தடைகளைத் தாண்டி, ஒரு பொது இலக்கை அடைய வேண்டும் என போராடினர். இந்திய பெண்கள் ஹாக்கியை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இவர்கள் அனைவருமே தங்களின் அணிக்காகவும், தங்களின் போராட்ட குணத்துக்காகவும் நிச்சயம் நினைவுகூரப்பட வேண்டும்.

இந்திய பெண்களின் சார்பாக இறுதி வரை போரட்ட குணத்தோடு விளையாடி பெருமை சேர்த்த, இந்திய மகளிர் ஹாக்கியை அண்ணார்ந்து பார்க்க வைத்த அனைத்து வீராங்கனைகளுக்கும் வாழ்த்துக்கள்.