மதிப்புக்குரிய தர்மசிறி பண்டாரநாயக்க…!

அவர் ‘ஹன்ச விலக்’ (அன்னத் தடாகம்), ‘துன்வெனி யாமய’ (மூன்றாம் சாமம்) , ‘சுத்திலாகே கதாவக் (சுத்திலாவின் கதை) ’, ‘பவ துக்க’ ( பிறவித் துயர்), ‘பவ கர்ம’ ( பிறவிக் கர்மம் ) ஆகிய திரைப்படங்களின் நெறியாளராவார் ; ‘பலங்ஹற்றியோ’ (தத்துக் கிளிகள்) , ஹன்ச விலக் முதலிய (சில) திரைப்படங்களில் முக்கிய பாத்திரங் களில் நடித்துமிருக்கிறார்.

மேலும், நாடகங்கள் பலவற்றைத் தயாரித்து நெறியாள்கையும் செய்திருக் கிறார். ட்ரோஜன் காந்தாவோ (ட்ரோஜன் பெண்கள்), தவள பீஷண (வெள்ளைப் பயங்கரம்! – இவை இரண்டும் முக்கிய அரசியல் நாடகங்கள்), அவற்றில் சிலவாகும். சிறந்த நடிகராக நாடகங்களிலும் புகழ்பெற்றவர்.
2003 இல் ‘சினி யாத்ரா’ என்னும் பெயரில் திரைப்பட விழாவொன்றை யாழ்ப்பாணம் கைலாசபதி கலையரங்கில் ஒழுங்குசெய்து, நல்ல திரைப் படங்கள் பலவற்றை இலவசமாகவே காட்சிப்படுத்தியுள்ளார் ; வேறொரு முறையும் ஒரு திரைப்பட விழாவை இங்கு ஒழுங்குசெய்துள்ளார்.
மொழியாக்க நாடகங்களான ட்ரோஜன் காந்தாவோ, தவள பீஷண ஆகிய இரண்டு நாடகங்களையும் முன்னர் யாழ்ப்பாணத்தில் இலவசமாக மேடையேற்றினார்.

தான் ஒழுங்குசெய்த இக்கலை நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ் களை, இங்குள்ள கலை ஆர்வலர் பலரின் வீடுகளுக்கு முச்சக்கர வண்டியில் சென்று, தானே நேரில் கையளிக்கும் பெரும் எளிமைப் பண்புமிக்கவர் ; இத்தனைக்கும் இலங்கையில் மிகவும் மதிக்கப்படும் கலைஞரில் ஒருவர் அவர் ; அவரது திரைப்படங்கள் வெளிநாட்டுத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டுள்ளன!. மிகமுக்கிய திரைப்பட, இலக்கிய, அரசியல் விமர்சகரான றெஜி சிறிவர்த்தன, ‘ஹன்ச விலக்’ திரைப்படத்தை வியந்து பாராட்டி எழுதிய கட்டுரை – ‘லங்கா காடியன்’ ஆங்கில இதழில் முன்னர் வெளிவந்தமை நினைவுக்கு வருகிறது! ஈழத்தவரான செல்வம் ஆசிரியராகவிருந்து

கனடாவில் வெளியிடும் ‘காலம்’ சிற்றிதழில், தர்மசிறி பண்டார நாயக்கவின் நேர்காணல், முன்பு வெளியாகியுமுள்ளது.

திங்கள் மாலை, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து, இன்று புதன் முற்பகல் தொடருந்து வண்டியில் திரும்பிச்சென்றார். 1979 ஆம் ஆண்டளவில், எமது ‘யாழ் திரைப்பட வட்ட’ நிகழ்ச்சிக்காக, 16 மி. மீ. திரைப்படமொன்றைப் பெற்றுக்கொள்ள – கொழும்பிலுள்ள செக்கோ ஸ்லோவாக்கியத் தூதரகத் துக்குச் சென்றிருந்தபோது, திரைப்படங்களுக்குப் பொறுப்பாயிருந்த சிங்கள இளைஞர், அங்கு வந்திருந்த தர்மசிறி பண்டாரநாயக்கவை எனக்கு அறிமுகப் படுத்தினார் ; அவரிடம் உள்ள 16. மி. மீ. திரைப்படங்காட்டும் கருவியில் (புறொஜெக்ரரில்) வீட்டில் பார்ப்பதற்காகத் திரைப்படங்களைப் பெற்றுக்கொள்ள அடிக்கடி அங்கு வருவாராம். அப்போது மெல்லிய அறிமுகம்தான் ; ஆனால், மிகப் பிற்காலத்தில் இங்கும் கொழும்பிலும் அவருடன் பலமுறை பழகியுள் ளேன்.

இன்று காலை 10. 15 இற்கு அவர் பயணப்படவேண்டும். நான், கொழும்புத்துறையில் அவர் தங்கியிருந்த சிங்கள மொழி விரிவுரையாளர் சாமிநாதன் விமலின் வீட்டுக்குக் காலை 8. 15 இற்குச் சென்று, 9. 15 வரை கதைத்துக்கொண்டிருந்தேன். அண்மைக் காலங்களில் அவர் உடல்நலம் குன்றியிருக்கிறார் ; ரமேஷ், மணி ஆகிய மலையகத்தவர்களான இரண்டு தமிழர்தான் அவரைப் பராமரித்துவருகின்றனர் ; அவர்களும் இங்கு வந்திருந்தனர். அவரது உடல்நிலைபற்றி விசாரித்தேன் ; என்னைப்பற்றியும் விசாரித்தார்.

எனக்கு 77 வயது ; அவருக்கு 75. குறிப்பாக, என்ன புத்தக வேலைகளில் ஈடுப்பட்டுள் ளீர்கள் என்று கேட்டார். எனது ‘திரையும் அரங்கும் : கலை வெளியில் ஒரு பயணம்’ நூலின் வேலைகள் நடைபெற்றபோது (2013) , அதிலுள்ள 1௦ வரை யான சிங்களத் திரைப்படங்கள்பற்றிய கட்டுரைகளுக்குத் தேவைப்பட்ட ஒளிப்படங்களைச் சேகரித்து உதவியவர் அவர்! கலை இலக்கிய உரையாட லுடன், யாழ்ப்பாண நிலைமைகள் எப்படியெனவும் அக்கறையுடன் விசாரித் தார். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள்பற்றி எப்போதும் அக்கறை காட்டி வருபவர் அவர் ; பல விடயங்களை அவரிடம் பரிமாறினேன். கொழும்பு செல்லநேர்ந்தால் கட்டாயம் அவரைச் சந்திக்கவேண்டுமென்ற விருப்பு, ஏனைய பலரைப்போலவே எனக்கும் இருக்கிறது!
– 20. 12. 2023