மாப்பிள்ளைச் சொதி…. பொம்புளைச் சொதி ஆகுமா…?


புட்டுக்கு சொதி சேர்த்து முதலில் நான் உண்டது யாழ் இந்துவின் மாணவ விடுதியில்.
இதற்குள் ஒரு வறுமையும் உண்டு. மாப்பிள்ளைச் சொதி என்றாக செழிப்பும் உண்டு அதுதான் மாப்பிள்ளைச் சொதி என்று சிறப்புப் பெயரையும் கொண்டு வந்தது
சாதா சொதியுடன் ஆரம்பமான வாழ்க்கையே எம்மில் பலருக்கும் உண்டு
காலையில் வீட்டு இடிப்யப்பம் சம்பல் சொதி என்றாக தேய்காய்ப் பால் விட்ட சொதி என்றாகவும் பால் புளியாத தேங்காய் பூவில் செய்த சம்பல் என்றாகவும் எம்மைக் கட்டிப் போட்ட உணவு.
அம்மா, ஆச்சி, அக்கா, மச்சாள், மாமி என்று என்ற இனிய உறவுகள் எமக்கு சாப்பாட்டிற் ஊடாக பாசத்தையும் இனிய நினைவுகளையும் எமக்குள் ஊட்டிய உணவுகள் இவை
சிறு வயதில் என் மனதில் குடி கொண்டவளின் சொதிப் பரிமாற்றம் எனக்கு அதிகம் பிடிக்கும்.
சொதிவை விட அது பரிமாறும் கையின் வளையலின் கையில் பூசி இருக்கும் மருதாணியின் அழகை அவளுக்கு தெரியாமல் இரசித்தேன் அன்று.
இது பலருக்குமான இரசிப்புத்தான். இதனை கடந்து வராதவர்களும் உண்டோ….?
அந்த அழகான கரம் பரிமாற்றதால் அகப்பபையும் சட்டியும் அழகானதாக உணரும் தருணங்கள் அதனால் சொதியும் சுவையானது சுகந்தமானது.
அம்மாவின் பாசத்துடன் போட்டி போட்ட சுவை இது
இந்த சொதியிற்குள் இருந்த வறுமையும் இருப்பதற்குள் வாழும் வாழ்வும் இனிப்பாக… காதலாக…. போனது எம் இளமைக் காலம்
கல்யாணத்தின் பின்பு (புது)மாப்பளையை சிறப்பாக கவனிக்க ஈழத்தில் மாப்பிளை சொதி என்று மாப்பிள்ளை பெண் வீட்டிற்கு வருகின்றார் என்றாக சொதி படைத்தல் எம்மிடையே அதிக வழக்கத்தில் இல்லாவிட்டாலும்…..
எமது கலாசாரத்தின் தொப்புள் கொடி உறவாக தமிழ் நாட்டின் இதிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் இது மிகச் சமைக்கப்படுகின்றது.
மாப்பளைச் சொதி பல சங்கதிகளை சமாச்சாரங்களை காய் கறி என்பதாக உள்ளே இறக்கி தேய்காய்ப் பால்(அதுவும் முதல்பால்) விட்டு அதனை பக்குவமாக செய்வார்கள்( இதற்கான செயன் முறைகளை இணையங்களில் வாசித்து அறியவும்)
இதனை சிலர் குழம்பு என்று சொல்லும் அளவிற்கு கெட்டியாக தடிப்பாக இருக்கும்
மாசி மாதம் தமிழ் நாட்டுச் சுற்றுப் பயணத்தில் இந்த மாப்பிள்ளைச் சொதியுடனான இடியப்பம் திருநெல்வேலி நண்பர் வீட்டில் விருந்தாக அருந்தியது மறக்கமுடியாத சுவை அனுபவம்.
முன்பொரு காலத்தில் கேரளாவில் மட்டும் இடியப்பம் என்றாக இருந்த விடயம் தற்போது கேரளாவிற்கு அண்மையான கன்னியாகுமரி இராமநாதபுரம் என்பதை தாண்டி முழு தமிழ் நாட்டிலும் அதிகம் கிடைக்கும் அளவிற்கு விரிவடைந்து விட்டது இந்த இடியப்பம்.
ஏன்ன ஒரு மிகப் பெரிய குறை எங்கும் இது வெள்ளையாக அது ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் சேரல் சிவப்பு இடியப்பைதை மூழ்கடித்து மேலும் சக்கரை வியாதிகளின் அளவை கூட்டி வருகின்றது
கேரளத்து இடிப்பம் சொதி என்பது எம்மைப் போன்ற சுடு சொதிக்கு பதிலாக அடுப்பு காணாத தேய்காய் பாலாக மட்டும் இருக்கும். இதிலும் ஒரு ‘நயனம்’ உண்டுதான்
ஏன் பால்ய வயதில் பாடசாலைக்கு போகும் அவசரத்திற்கு அம்மா… அக்கா என் சிறுவயதில் சுடச்சுட அவித்த இடியப்பத்தையும் சொதி வைத்து முடிக்காத அவசரத்தில் துருவிய தேங்காய பூவையும் கொஞ்ச சீனியையும் இடியப்பத்துடன் தந்து சாப்பிட்டு விட்டு சுறுக்கா பள்ளிக்கு ஓடு….. பெல் அடிக்கப் போகுது என்ற போது…..
செம்பருத்தியுடன் ஒன்றாக போக வேண்டும் அவளின் கரம் பிடித்து நடக்க வேண்டும் என்பதற்காக மறுப்பு சொல்லாமல் இந்த சீனியுடன் தேங்காயைப் பூவை இடியப்பதிற்குள் பிசைந்து உண்ட தருங்கள் இந்த வயதிலும் இனிப்பாய் இருப்பது அம்மாவினாலா…?
செம்பருத்தியாலா…..? அல்லது சொதி ஆக்காத அந்த தேய்காய் பூவினாலா…
இவை எல்லாம் என்பேன் இன்றும்
ஈழத்தில் நின்ற வேளை எனக்கு ஒரு அழைப்பு ‘…சேர் வந்திருப்பதாக அறிந்தோம் சந்திக்க வேண்டும்….. ஒரு சாப்பாட்டுடன் சந்திப்போம்…..’ என்றனர்
மறுக்காமல் ஆம் என்றேன்.
கூடவே நாட்டுக் கோழி அது இது என்று ஏதும் செய்யாதீர்கள் எனக்கு இடியப்பம் சம்பல் சொதி போதும் என்றேன்.(இதனை என் நண்பர்களை கவனிக்கவும்)
‘…என்ன சேர் இவ்வளவுதானா…’ என்று கேட்க எனக்கு உங்களுடன் நிறையக் கதைக்க வேண்டும் அளவளாவ வேண்டும் இதற்கு இந்த இடியப்பம் சொதி சம்பல் மட்டும் போதும் என்றேன்
அங்கு போனால் இவை மூன்றுடன் இன்னும் பல கோழி மீன் என்பதாக பலது இருந்தாலும் அவர்கள் வைத்திருந்த அந்த வறுமையற்ற மாப்பிளைச் சொதிதான் என்னை அன்று மாப்பிள்ளையாக வரவேற்றது குதூகலிக்க வைத்தது
யாழ் இந்துக் கல்லூரியின் மாணவ விடுதியின் சிறந்த சாப்பாடு எது என்று என்னிடம் கேட்டால் அது… இடியப்பம் சம்பல் சொதி என்பேன்
எம் காலத்தில் 5 இடியப்பம் மட்டுமே அளவாக தருவார்கள்.
சாப்பாட்டை அதிகம் தேடும் வயது இந்த 5 இடியப்பம் உண்மையில் காணாது அளவு சாப்பாட்டால் இன்னும் இடியப்பம் வேணும் என்று தேடும் வயது ஆனால் கிடைக்க வழியில்லை.
ஆனால் எப்போதாவது சொதிக்குள் வரும் ஒரு பாதி பச்சை மிளகாயை கூட ஒதுக்காது சப்பிச் சாப்பிட்டு வயிற்றை நிரப்பும் சந்தோசங்கள் அவை.
மொக்கன் கடை வறுத்த மா குழல் புட்டிற்கு அவர்கள் இனாமாக தரும் கொதி கொதிக்க வரும் ஆணம் என்று அழைக்கப்படும் எலும்புகள் இட்டு உருவாக்கும் சொதி வகையான சுடு குழம்பை அடிக்க உலகில் வேறு எதும் இல்லை. எமக்கு இனிமேலும் இந்த முஸ்லீம் பகுதியில் அமைந்த மொக்கன் கடை புட்டும் ஆணமும் வேண்டும என்றான சுவை அது. (இந்த மொக்கன் கடையின் உண்மையான பெயர் ஹமீதியா கபே).
தாயத்து தமிழ் சாப்பாட்டுக் கடைகளில் இனாமாக இடியப்பத்துடன் கிடைக்கும் சம்பல் தொதியின் தேய்காய் பால்கள் வேறுவிடயத்திற்கு எடுத்த பின்பு சம்பலுக்கு மிளகாய் சிவப்பும் சொதிக்கு மஞ்சள் தூளும் சேர்தாக சம்பல் சொதியாக்கிய கடைச் சாப்பாட்டு வறுமைகள் வசதிகள் அற்ற சுகந்தங்கள் என்றாக கடந்த காலம் பல பல.
இந்தச் சாப்பாட்டிற்கான பிரத்தியேக கறி என்பதை மேலதிக காசு கொடுத்து எடுக்கும் அளவிற்கு பொருளாதாரம் இலங்கையில் நல்லாக இருந்த காலத்திலும் எமது பொக்கற் பொருளாதாரம் இடம் கொடுக்காத மாணவ வறுமைகள் அன்று.
அல்லது இந்தச் சில்லறைகளை சேமித்து… சேர்த்து திருட்டுச் சினிமாவிற்கு பாவித்த கோலங்கள் அன்று
புலம் பெயர் தேசத்து தமிழ் சாப்பாடு எடுப்புக் கடைகளில் 25 இடியப்ப பெட்டியுடன் சம்பல் சொதி இலவச இணைப்பாக தருவார்கள்.
இவற்றின் பால் இல்லாத தரத்தால் அவற்றை வேண்டாம் என்று அவர்கள் முன்னிலையில் இல்லாது கழிவுப் தொட்டிற்குள் இவற்றை வீசி வெறும் இடியப்பத்துடன் நடைகட்டுவதும் பொதுப் போக்கானது பெரும்பாலும்
இதில் எம் தமிழ் சாப்பாட்டு எடுப்புக் கடைகளின் விலைப் பட்டியலை எப்படியோ கேள்விப்பட்டு இடியப்பம் வாங்க வரும் வேற்று இனத்தவர் (அதிகம் வெள்ளை இனத்தவருக்கு) சொதியின் பெருமையாக எம் தேசத்து சூப் என்றாக சொல்லி கொடுத்து விற்றுவிட்டதாக பெருமை பேசும் வியாபாரப் புத்திகள் வேற்று இனத்தவர் இதன் தரத்தை உண்ணும் போது உணர்ந்து சொதியை ஒரு ஏற்புடைமையான பக்க இணைப்பாக உணவாக பார்க்காது நிராகரிக்கும் மனநிலைக்கு எமது பண்பாட்டில் உள்ள சொதியின் பெயர் கெட்டுப் போனதுமான வரலாறுகள் இந்த சொதியிற்கு உண்டு
ஆனால் இது மாப்பிளை சொதியாக இருந்திருந்தால் சொதிக்கான ஒரு ஏற்புடமையான வரலாறுதான் இருந்திருக்கும் வேற்று இனத்தவரிடமும்
மாற்று இனத்தவரையும் சுண்டி இழுக்கும் சூப்பாக…. குழம்பாக… சொரதியாக… மாப்பிளைகளை கௌரவிக்கும் ஒரு மறுக்க முடியாத ஈரலிப்பாக்கும் சொதியை மறப்போமா அந்த மாப்பிள்ளைச் சொதியை.
அது என்ன மாப்பிள்ளை சொதி இதற்குள் ஓர் ஆணாதிக்க சிந்தனை உண்டா…?
ஏன் புது மணத் தம்பதியினருக்கு…. ஆணுடன் பெண்ணுக்கும் பரிமாற ‘பொம்புளை சொதி’ என்றாக அல்லது ‘பொதுச் சொதி’யாக பெயரை வைத்தால் என்ன என்று இனி வரும் காலத்திலாவது நாம் தீர்மானிப்போம்
சோத்திலும்…. சொதியிலும்…. ‘மொட்டைக் கறுப்பன்’ ஐ மொட்டைக்கறுப்பி என்றாகவும் ‘மாப்பிள்ளை சொதி’ ஐ ‘பொம்புளைச் சொதி’ என்றாகவும் சமத்துவத்த சிந்தனையை உருவாக்குவோம்

அனைவருக்கும் சர்வ தேச மகளிர் தின வாழ்த்துகள் சொதியிலும் இந்த மாப்பளையை அகற்றி அது சகலருக்குமான சொதி என்றாக பெயரை வைப்போம்

சர்வ தேச மகளிர் தினம் பற்றி தகவல்களுக்கு மேலும் வாசியுங்கள்…..
சர்வதேச மகளிர் தினம்
சர்வதேச மகளிர் தினம், சுருக்கமாக ஐடபிள்யுடி(IWUD) என்றும் அழைக்கப்படுகிறது. இது தொழிலாளர் இயக்கத்திலிருந்து வளர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட வருடாந்திர நிகழ்வாக மாறியது.
1908 இல் 15000 பெண்கள் நியூயார்க் நகரத்தின் வழியாக குறுகிய வேலை நேரம் சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி அணிவகுத்துச் சென்றபோது அதன் விதைகள் வேரூன்றப்பட்டன. ஒரு வருடம் கழித்து, அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி முதல் தேசிய மகளிர் தினத்தை அறிவித்தது.
இந்த நாளை சர்வதேசமயமாக்க வேண்டும் என்ற எண்ணம் கம்யூனிஸ்ட் ஆர்வலர் மற்றும் பெண்கள் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கிளாரா ஜெட்கின் என்ற பெண்ணிடமிருந்து வந்தது.
1910இல் கோபன்ஹேகனில் நடந்த உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் அவர் இந்த யோசனையை அவர் பரிந்துரைத்தார். அங்கு 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் இருந்தனர். அவர்கள் அவரது ஆலோசனையை ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.
இது முதன்முதலில் 1911இல் ஆஸ்திரியா டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் கொண்டாடப்பட்டது. நூற்றாண்டு விழா 2011இல் கொண்டாடப்பட்டது.
எனவே இந்த ஆண்டு தொழில்நுட்ப அளவில் 111வது சர்வதேச மகளிர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம்.
1975இல் ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை கொண்டாடத் தொடங்கியபோது அனைத்தும் அதிகாரபூர்வமாக்கப்பட்டன. அதையொட்டி ஐ.நாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல் கருப்பொருள் (1996 இல்) “கடந்த காலத்தைக் கொண்டாடுதல், எதிர்காலத்திற்கான திட்டமிடல்” என்பதாகும்.
சர்வதேச மகளிர் தினம் சமூகத்திலும், அரசியலிலும், பொருளாதாரத்திலும் பெண்கள் எவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள் என்பதைக் கொண்டாடும் நாளாக மாறியுள்ளது.
அதே சமயம் அன்றைய அரசியல் வேர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் தொடர்ந்து சமத்துவமின்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்படுகின்றன.
மார்ச் 8 ஏன் தேர்வானது?
சர்வதேச மகளிர் தினத்துக்கான கிளாராவின் யோசனைக்கு நிலையான தேதி எதுவும் ஆரம்பத்தில் இருந்திருக்கவில்லை.
1917இல் ரஷ்ய பெண்கள் “உணவும் அமைதியும்” என்றபெயரில் புரட்சிப் போராட்டத்தைத் தொடங்கும்வரை இந்த தேதி இந்நாளில்தான் கொண்டாடப்பட வேண்டும் என்பது முறைப்படுத்தப்படவில்லை – அவர்களின் நான்கு நாட்கள் போராட்டம், ட்சார் பதவி விலகும் கட்டாயத்தை தூண்டியது. மேலும், தற்காலிக அரசாங்கம் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியது.
ரஷ்யாவில் அப்போது பயன்பாட்டில் இருந்த ஜூலியன் நாட்காட்டியில் பெண்கள் வேலைநிறுத்தம் தொடங்கிய தேதி பிப்ரவரி 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆக இருந்தது. கிரிகோரியன் நாட்காட்டியில் இந்த நாள் மார்ச் 8ஆம் தேதி ஆக இருந்தது. அதுவே மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஊதா நிறம் பெரும்பாலும் ஐடபிள்யூடி உடன் தொடர்புடையது. இந்த நிறம், ‘நீதி மற்றும் கண்ணியத்தை’ குறிக்கிறது.
மகளிர் தினத்தில் மக்கள் ஏன் ஊதா நிற ஆடையை அணிகிறார்கள்?
ஊதா, பச்சை, வெள்ளை ஆகியவை ஐடபிள்யூடி நிறங்கள் என்று சர்வதேச மகளிர் தின இணையதளம் தெரிவித்துள்ளது.
“ஊதா நீதி மற்றும் கண்ணியத்தை குறிக்கிறது. பச்சை நம்பிக்கையை குறிக்கிறது. வெள்ளை தூய்மையை பிரதிபலிக்கிறது.
ஒரு சர்ச்சைக்குரிய கருத்து என்றாலும் நிறங்கள் 1908இல் பிரிட்டனில் உள்ள பெண்கள் சமூக மற்றும் அரசியல் ஒன்றியத்தில் (டபிள்யூஎஸ்பியு) உருவானது,” என்று அவர்கள் கூறுகிறார்கள்.
சர்வதேச ஆண்கள் தினம் உள்ளதா?
உண்மையில், ஆண்களுக்கான தினம், நவம்பர் 19 என இருக்கவே செய்கிறது.
ஆனால் இது 1990களில் இருந்து மட்டுமே குறிக்கப்பட்டது. இந்த தினத்தை ஐ.நா அங்கீகரிக்கவில்லை. பிரிட்டன் உட்பட உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் மக்கள் இதை கொண்டாடுகிறார்கள்.
ஏற்பாட்டாளர்களின் கூற்றுப்படி, “ஆண்கள் அவர்களுடைய குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு கொண்டு வரும் நேர்மறையான மதிப்பை” இந்த தினம் கொண்டாடுகிறது. மேலும் நேர்மறையான முன்மாதிரிகளை முன்னிலைப்படுத்தவும் ஆண்களின் நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாலின உறவுகளை மேம்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
மகளிர் தினம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
சர்வதேச மகளிர் தினம் என்பது ரஷ்யா உட்பட பல நாடுகளில் தேசிய விடுமுறையாக உள்ளது. அங்கு மார்ச் 8ஆம் தேதி மூன்று அல்லது நான்கு நாட்களில் பூ விற்பனை இரட்டிப்பாகும்.
சீனாவில், மாநில கவுன்சில் அறிவுறுத்தியபடி, பல பெண்களுக்கு மார்ச் 8 அன்று அரை நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இத்தாலியில், சர்வதேச மகளிர் தினம், அல்லது லா ஃபெஸ்டா டெல்லா டோனா, மிமோசா மலர்களைக் கொடுப்பதன் மூலம் கொண்டாடப்படுகிறது. இந்த பாரம்பரியத்தின் தோற்றம் தெளிவாக இல்லை. ஆனால் இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரோமில் தொடங்கியதாக நம்பப்படுகிறது.
அமெரிக்காவில், மார்ச் மாதம் பெண்களின் வரலாற்று மாதமாகும். இந்த நாளில் நாட்டின் அதிபர் வெளியிடும் அறிவிப்பு அமெரிக்க பெண்களின் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
2024 மகளிர் தின கருப்பொருள் என்ன?
ஐக்கிய நாடுகள் சபையானது 2024 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளை ‘பெண்களில் முதலீடு செய்யுங்கள்: முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது, அதே சமயம் இந்த ஆண்டுக்கான பரப்புரைக் கருப்பொருள் ‘அனைவரையும் உள்ளடக்கும் பணியை ஊக்குவிக்கவும்’ என்பதாகும்.
சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் பன்முகத்தன்மை மற்றும் அதிகாரமளித்தலின் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. இந்த பரப்புரையின் மூலம், சமூகத்தின் பல்வேறு துறைகளில் பன்முகத்தன்மை மற்றும் அதிகாரமளிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது.
நமக்கு ஏன் அவசியம்?
கடந்த ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான், இரான், யுக்ரேன், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் உள்ள பெண்கள் அந்தந்த நாடுகளில் போர், வன்முறை மற்றும் கொள்கை மாற்றங்களுக்கு மத்தியில் தங்கள் உரிமைகளுக்காக போராடினர்.
ஆப்கானிஸ்தானில், தாலிபான்களின் மீள் எழுச்சி மனித உரிமைகள் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது. இப்போது பெண்களுக்கு உயர்கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு வெளியே பெரும்பாலான வேலைகளில் ஈடுபட கட்டுப்பாடு, ஆண் துணை இல்லாமல் நீண்ட தூரம் பயணம் செய்ய தடை மற்றும் பொது இடங்களில் முகத்தை மறைக்க கட்டாயப்படுத்தப்படுவது போன்ற நிலைமை உள்ளது.
இரானில், பெண்கள் தங்கள் தலைமுடியை ஹிஜாப்பால் மறைக்க வேண்டும் என்ற அந்நாட்டு ஆளுகையின் கடுமையான விதிகளை மீறியதாகக் கூறி 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி டெஹ்ரானில் அறநெறி போலீஸாரால் கைது செய்யப்பட்ட 22 வயது பெண் மாசா அமினியின் மரணம் எதிர்ப்புகளைத் தூண்டியது.
அப்போதிருந்து, பல இரானியர்கள், பெண்களுக்கான சிறந்த உரிமைகள் மற்றும் தற்போதைய அரசியல் தலைமையில் மாற்றத்துக்கு அழைப்பு விடுத்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
“பெண், வாழ்க்கை, சுதந்திரம்” என்பதே போராட்டங்களின் முழக்கமாகும். அதிகாரிகள் அவற்றை “கலவரங்கள்” என்று சித்தரித்து, வலிமையுடன் எதிர்வினையாற்றிய நடவடிக்கையில். 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
2022ஆம் தேதி பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்ய படைகள் யுக்ரேன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, போரால் தூண்டப்பட்ட விலைவாசி உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக யுக்ரேனிலும் உலகெங்கிலும் உணவுப் பாதுகாப்பின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, வறுமை மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை ஆகியவற்றில் பாலின இடைவெளிகள் மோசமடைந்துள்ளன என்று ஐ.நா தெரிவித்தது.
(வாசித்தில் இருந்து தொகுக்கப்பட்டது மூல ஆதாரம் பிபிசி)