மிதிவண்டிக் குறிப்புக்கள் – 17

இரண்டாயிரமாண்டுகளின் ஆரம்பத்தில் பேராசிரியைக்கு கரடி ஆய்வுகளின் நிமித்தம் ஆராய்ச்சி உதவியாளராக பணியாற்றக் கிடைத்தது. அந்த சமயத்தில் அவரின் இராஜகிரிய இல்லத்திற்கு சென்றிருக்கிறேன். அவருடைய தாய் யாழ்ப்பாண பெண். அவருடைய பெயர் லக்ஸ்மி. மிகவும் நன்றாக யாழ்ப்பாண சுத்த தமிழ் பேசுபவர். மலைநாட்டின் பெருந்தோட்டமொன்றில் தோட்ட முகாமையாளராக அப்போது கடமையாற்றிய திரு. ரத்னாயக்க என்ற சிங்கள வாலிபரை காதலித்து திருமணம் முடித்திருக்கிறார்.

கரடி ஆய்வுக்காக நிலப் பகுதிகளை 5 சதுர கிலோமீற்றர் சதுரங்களாக பிரித்து அந்தப் பகுதிகளில் கரடிகள் பற்றி தேடி அறிய வேண்டும். கரடி ஆராய்ச்சி உதவியாளராக இருக்கும்போது பல பகுதிகளுக்கு செல்ல வேண்டியேற்பட்டது. அந்த வகையில் அளிக்கம்பைக்கும் செல்ல வேண்டியேற்படுகின்றது. கரடி என்ணெய் பற்றி அறிவதே அங்கு சென்ற பிரதான நோக்கம். கரடி எண்ணெய் தோலில் உரோம வளர்ச்சியை அதிகரிக்கும் என்ற ஒரு நம்பிக்கை பரவலாக இருந்துவந்திருக்கின்றது.

அதற்காக கரடிகள் கொல்லப்படலாம் என்ற சந்தேகமும் இருந்தது. (அந்தப் பகுதிகளில் கரடி எண்ணெய் என்று சிறிய போத்தல்களில் அடைத்துவிற்கப்பட்டது, பன்றி எண்ணெயாக இருக்கலாம் என்று பின்னர் தெரிந்தது).

நாட்டின் அமைதியின்மை காலம் அது. இயக்கங்களும் பிரிந்து சண்டையிட்ட காலம். நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இனத்திற்கும் போக்குவரத்திற்கு சிக்கலான காலம். அளிக்கம்பையில் வனக்குறவர் வாழ்கிறார்கள். வீட்டு மொழியாக தெலுங்கும், கல்வி, மற்றும் வெளிஆக்களுடன் தொடர்பு மொழியாக தமிழையும் கொண்டிருக்கின்றார்கள். இதே போல இன்னொரு சாரார் வீட்டு மொழியாக தமிழையும், மற்றைய மொழியாக சிங்களத்தையும் கொண்டு அநுராதபுரம், தம்புத்தேகமையில் வாழ்கின்றார்கள். இவர்களுக்கு என்று ஒரு வரலாறு சொல்லப்பட்டு வருகின்றது.

அளிக்கம்பைக்கு செல்வதற்கு மூன்று பாதைகள் இருக்கின்றன. முதலாவது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, பனங்காடு வழியாக செல்வது. இரண்டாவது திருக்கோவில், சாகாமம் வழியாக செல்வது. மூன்றாவது அக்கரைப்பற்று – அம்பாறை பெருந்தெருவிற்கு சென்று, எட்டாம் கட்டைக்கூடாக நீத்தை என்ற கிராமத்தின் ஊடாக செல்வது. ஆனால்அந்தக் காலப் பகுதியில், மூன்று வழிகளும் மிக மோசமானவை. பாதைகள் குன்றும் குழியுமானவை. ஆபத்துக்கள் நிறைந்தவை. பல்வேறு ஆபத்துக்களையும் எதிர்கொண்டிருக்கின்றேன். ஒரு தரம் எனது மோட்டார் சைக்கிள் யாருமற்ற பாலைவனம் போன்ற பகுதியில் அதன் சங்கிலி அறுந்து இயங்க மறுத்தபோது, சைக்கிளை கைவிட்டு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதிஸ்டவசமாக மண் ஏற்றிவந்த ஒரு உழவு இயந்திரம் அக்கரைப்பற்று வரை ஏற்றி வந்து எனது சைக்கிளை காப்பாற்றியது.

சுமார் 6 மாத காலங்களுக்கு அதிகமாக அந்தப் பகுதிகளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கின்றேன். குறிப்பாக அளிக்கம்பை வனக்குறவர் சம்பந்தமாக நுால் எழுதுமளவிற்கு நிறைய தரவுகளைத் திரட்டியிருந்தேன். அவர்களின் வாழ்க்கை முறை, அவர்களுடைய செல்லப் பிராணிகள் (மலைப்பாம்பு, கண்ணடிாடிப் புடையன் பாம்பு, நாக பாம்புகள், மற்றைய விலங்குகள்), பாம்பாட்டுதல், விசப்பல்லு கழற்றுதல், பாம்புக் கடி மருத்துவம், வேட்டை முறைகள் (தங்கல் வேட்டை) இன்னும் நிறைய விடயங்களை அறிந்தும், பதிந்தும் கொண்டேன். நான் சென்றது உயிரியல் ஆய்வுக்கு. அதற்கு மேலதிகமாக இந்த அந்திரோபொலொஜி ஆய்வுகளில் ஈடுபட்டேன். கிழக்குப் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் யுவராஜ் தங்கராஜா இந்த ஆய்வுகளில் எனக்கு ஈடுபாடு வருவதற்கு பெரும் காரணமாக இருந்தார்.

அவருடைய பல ஆய்வுகளுக்கு நான் உதவியாளராக இருந்திருந்திருக்கின்றேன். அதே வேளை அவருடைய மனைவி கலாநிதி மீனா தர்மரெத்தினம் எனது விலங்கியல் பேராிசிரியை அவருக்கு பட்டப் படிப்பு, மற்றும் பின்படிப்பு மாணவனாகவும், உதவி ஆய்வாளராகவும் இருந்திருக்கின்றேன். ஒரே நேரத்தில் சமூக விஞ்ஞானத்திற்கும், இயற்கை விஞ்ஞானத்திற்கும் இடையில் நடமாடுவதும், ஆய்வாளராக இருப்பதும் கொடுப்பினை.

இந்தப் பயணங்களில் கண்ணகிபுரம், புட்டம்பை, மொட்டையாகல் மலை போன்ற பிரதேசங்கள் அடிக்கடி வந்து போகத் தொடங்குகின்றன…