சி.சுப்ரமணியம் என்பது முழுப் பெயர்

“சரி. போய் பார்க்கலாம்.கோபிச்செட்டிபாளையம் வரை போய் வரலாம்” என்று நான் சொன்னதும் இருவரும் காரில் ஏறி அமர்ந்தோம் ..
யாரைப் பார்க்கப் போகிறோம் என்பதை அவரும் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை.
சரவணம்பட்டி தாண்டியதும் “நாம் யாரைப் பார்க்கப் போகிறோம்?” என்று ராஜேஷ் கையில் இருந்த விலை உயர்ந்த காமிராவை அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டே கேட்டார்.
“”CS. என்று கூப்பிடுவார்கள். சி.சுப்ரமணியம் என்பது முழுப் பெயர்” என்றேன்..
” என்ன படித்து இருக்கிறார்?” என்று அசிரத்தையாய் கேட்டார் ராஜேஷ்.
“ICS” என்று நான் சொன்னதும் ராஜேஷ் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார்.
“என்ன சொன்னீர்கள்?” ராஜேஷின்குரலில் ஆச்சரியம் இருந்தது..
“ICS.INDIAN CIVIL SERVICE. இப்போதைய IASயை விட அதிக மதிப்புள்ள படிப்பு.நேதாஜி சுபாஸ் சந்திர போசும் ICS. படித்தவர் தான். அவர் இவருக்கு சில ஆண்டுகள் சீனியர்”
” கலெக்டராகவோ மத்திய – மாநில அரசுகளின் தலைமைச் செயலாளராகவோ வேலை பார்த்தவரா?” என்று ராஜேஷ் கேட்டார்.
” இல்லை. ICS.ல் கோல்டு மெடலிஸ்டு. தேர்வான உடனே லண்டனிலேயே பிரிட்டிஷ் அரசு சப்கலெக்டராக நியமித்து நியமன உத்தரவைக் கையில் கொடுத்தது.அந்த நியமன உத்தரவை அப்போதே கிழித்து எறிந்து விட்டார். இல்லாவிட்டால் மத்திய அரசின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி இருப்பார்” என்றேன்.
ராஜேஷ் ஆடிப் போய் விட்டார்.
” ஏன் கிழித்தார்?” என்றார்.
” கிழித்து எறிந்து விட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராகச் சேர்ந்து விட்டார்” என்று சொன்ன போது ராஜேஷ் திகைப்பின் உச்சத்திற்கே போய் விட்டார்.
” அவருக்கு இப்போ என்ன வயது?எந்த வகுப்பைச் சேர்ந்தவர்?” என்று கேட்டார் ராஜேஷ்.
” அவருக்கு வயது நூறு. பிராமண வகுப்பில் பிறந்தவர்” என்றேன்.
” ஏன் கோபியில் இருக்கிறார்?” என்றார் ராஜேஷ்.
” அவர் இந்தியா வந்த பின்பு கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராகப் பணியாற்றிய போது பிராமணரல்லாத ஒரு டாக்டரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். டாக்டரை தமிழக அரசு கோபிக்கு மாற்றிய பின்பு அவரும் கோபிக்கு வந்து விட்டார்.அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை.டாக்டர் இறந்த பின்பு அவர் நினைவாக அவர்கள் ஒன்றாக வாழ்ந்த அதே வீட்டில் குடி இருந்து வருகிறார். கேட்டால் இந்தத் தாஜ்மகாலை விட்டு விட்டு சென்னை போக பிடிக்கவில்லை என்று சொல்லி தானே சமைத்துச் சாப்பிட்டு வருகிறார் ” என்றேன்.
இந்த விசித்திரமான காதல் கதையைக் கேட்டதும் ராஜேஷ் ஜெர்க் ஆகி விட்டார்.
” நிறைய படிக்கும் பழக்கம் உள்ளவரா?” என்று கேட்டார் ராஜேஷ்.
” வேதங்கள் முதல் அண்மைக் கால மார்க்சிசம் வரை படித்துக் கரைத்துக் குடித்தவர். அவருடைய ஆங்கிலப் புலமை மிரட்டி விடும் ரகம்.பல நாடுகளின் கம்யூனிஸ்டு கட்சிகளினால் சிறந்த மார்க்சிய சிந்தனையாளர் என்று அங்கீகரிக்கப்பட்டவர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பணித்தபடி கட்சியின் வரலாறை எழுதுவதில் பெரும்பங்காற்றியவர். விசாலமான வரலாற்று அறிவும் ஆழ்ந்த மார்க்சிய ஞானமும் உள்ளவர்களிடம் தான் அந்தப் பணியை கட்சி ஒப்படைக்கும். அது போகவும் நிறைய ஆங்கில நூல்கள் எழுதி இருக்கிறார்” என்றேன்.
” புத்தகம் எழுதியதோடு நிறுத்திக் கொண்டாரா?” என்றார் ராஜேஷ்.
” இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியில் களப் பணியாளராகப் பணியாற்றி பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து இருக்கிறார்.பல ஆண்டுகள் பிரிட்டிஷ் போலீசின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு தலைமறைவு வாழ்க்கை நடத்தி இருக்கிறார். கம்யூனிஸ்டுகள் மேல் போடப்பட்ட சென்னை சதி வழக்கில் தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் தலைவர்களோடு சேர்த்து அவர் மீதும் ஆங்கிலேய அரசு வழக்கு போட்டு இருந்தது.இந்தியாவில் டாங்கே, ஜோதிபாசு, நம்பூதிரிபாடு, ராமமூர்த்தி போன்ற பெரிய தலைவர்களுக்கு இணையாக மதிக்கப்படுபவர். அவருடைய தியாக வாழ்க்கை மிகவும் சாகசமானது.நான்பெரும்பாலான தலைவர்களைப் பார்த்து இருக்கிறேன். ஆனால் CSயை நேரில் பார்த்தது இல்லை. நான் சொன்னதெல்லாம் பல தலைவர்களும் சொல்லக் கேட்டது தான்” என்றேன்.
அதற்குள் கோபி வந்து விட்டது..
ஒருகாலத்தில்
மருத்துவமனையாக இருந்த ஒரு மாடி வீடு. கீழ்தளத்தில் CS. குடி இருந்தார்.
அறிமுகத்திற்குப் பின்பு அந்த எளிமையான அறைக்குள் பிளாஸ்டிக் நாற்காலிகளில் உட்கார்ந்தோம்.
அறையில் ஏராளமான புத்தகங்கள் ஒழுங்காக அடுக்கப்பட்டு இருந்தன. சில புத்தகங்கள் படித்துக் கொண்டு இருப்பதை காட்டும் விதமாய் விரித்து வைக்கப்பட்டு இருந்தன.நிறைய தினசரி பத்திரிக்கைகள் இருந்தன.
அவர் ஒல்லியாக இருந்தார். சிவந்த மேனி. உயரமாக இருந்தார்.பனியனும் நாலு முழ வேட்டியும் அணிந்து இருந்தார்.
பேட்டி காண வந்து இருக்கிறோம் என்றதும் புன்னகையோடு அனுமதித்தார். அவருக்கு ராஜேஷையும் அடையாளம் தெரிய யில்லை.
பல கேள்விகளுக்குப் பின்பு ” ஏன் இந்தியாவில் கம்யூனிசம் தோற்றுப் போய் விட்டது?” என்று ராஜேஷ் கேட்டார்.
“கம்யூனிசம் தோற்றுப் போய் விட்டது என்று யார் உங்களிடம் சொன்னது? புரட்சி தள்ளிப் போய் இருக்கிறதே தவிர தோற்றுப் போகவில்லை. நாம் விரும்பும் சமயத்தில் புரட்சி நடக்க வேண்டும் என்று நினைப்பது மார்க்சியப் பார்வை இல்லை. பொது மக்களை ஈர்க்க தவறி இருக்கிறோம். அதற்கான காரணங்களை கண்டுபிடித்து களைய வேண்டுமே தவிர நம்பிக்கையை இழப்பது தவறு. ஒரு கம்யூனிஸ்டுக்கு புரட்சிகர பொறுமை வேண்டும் என்று லெனின் சொன்னார். அது மிகுந்த அர்த்தச் செறிவுள்ள அறிவுரை. அதன் அர்த்தம் தெரிந்தவர்களுக்கு கம்யூனிசத்தின் இறுதி வெற்றி மேல் அவநம்பிக்கையே வராது ” என்றார் CS.
” எப்போதாவதாவது ICS.மூலம் கிடைத்த வேலை வாய்ப்பையும் ஆடம்பர வாழ்க்கையையும் தேவையில்லாமல் இழந்து விட்டோம் என்ற ஆதங்கம் ஏற்பட்டு இருக்கிறதா? ” என்று ராஜேஷ் கேட்டார்.
“சகல உலகத் தத்துவங்களையும் படித்த பின்பு தான் மானுட விடுதலைக்கு மார்க்சியம்தான் ஒரே வழி என்று அறிவுபூர்வமாகவும் இதயபூர்வமாகவும் உணர்ந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தேன். அது அவசர கோலமாய் அறியாமையினால் உணர்ச்சிவயப்பட்டு எடுத்த முடிவல்ல. மறுபிறவி என்று ஒன்று இல்லை. இருந்தால் நான் இதே போல கம்யூனிஸ்டாகவே இருக்க விரும்புகிறேன்” என்றார் CS.
அவர் பேச்சிலோ நடையிலோ கருத்திலோ எந்தத் தள்ளாட்டமும் இல்லை..
” உங்களுக்கு பண உதவி தேவையெனில் நான் மாதாமாதம் பணம் அனுப்புகிறேன்” என்றார் ராஜேஷ்.
” நன்றி.பணம் தேவையில்லை. தனி மனிதனான எனக்குத் தேவையான எல்லா உதவிகளையும் கட்சி செய்கிறது. அதனால் பண உதவி தேவையில்லை. உங்களுக்கு பண உதவி செய்யும் அளவிற்கு வசதி இருந்தால் அதை கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக் கமிட்டியிடம் கொடுங்கள்” என்றார் CS.
பல கேள்விகளுக்குப் பின்பு புறப்படும் முன்பு புகைப்படங்களை எடுத்தபடியே “இப்போது உங்களுக்கு வயது நூறாயிற்றே. உங்களுக்கு இப்போதும் கடவுள் நம்பிக்கை இல்லையா?” என்று ராஜேஷ் கேட்டார்.
” ஏழை பணக்காரன் என்று படைத்தது கடவுள் என்று நம்பினால் அதை ஏற்றுக் கொண்டு வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை. அந்த வர்க்க பேதம் மனிதன் செய்தது என்பது தான் கம்யூனிசம். அதனால்அதை மாற்ற முடியும் என்று போராடுகிறோம். அதில் தெளிவுள்ள கம்யூனிஸ்டால் மக்களின் உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு சிறப்பாக செயல்பட முடியும். அதைத் தான் மார்க்சியத்தை இந்தியமயமாக்குவது என்று தமிழிலும் CONCRETIZATION. என்று ஆங்கிலத்திலும் சொல்கிறோம். அது புரியாதவர்களும் புரட்சிகர பொறுமை இல்லாதவர்களும் ஆன்மீகம்- கலாச்சாரம் என்று அங்குமிங்கும் விடை தேடுகிறோம் என்ற பெயரில் ஓடுவார்கள். பயன் இருக்காது. மார்க்சியம் கடவுளை மனிதன் படைத்தான் என்று விஞ்ஞானபூர்வமாக நிறுவி விட்டது. அதனால் இல்லாத கடவுள் மேல் எப்படி நம்பிக்கை .வரும். வேதங்களும் புராணங்ளிலும் சாஸ்திரங்களிலும் கீதையிலும் துருவித் துருவி தேடி விட்டேன். அவற்றில் கடவுள் நம்பிக்கை கொள்ள எதுவுமே இல்லை” என்று சொல்லியபடியே கை கூப்பி வணங்கி வாசல் வரை வந்து விடை கொடுத்தார்.
காரில் திரும்பும் போதுராஜேஷ் “நன்றி பாரதி. நான் இதை எதிர்பார்க்கவில்லை. அந்த பீஷ்ம பிதாமகனின் காலைத் தொட்டு வணங்கி ஆசி வாங்கத் தவறி விட்டோமே என்று சங்கடமாக இருக்கிறது” என்றார்.
2 ஆண்டுகள் கழித்து 102.வது வயதில் CS. சென்னையில் காலமான போது என்னுடைய முன்னுதாரணமான மனிதரை இழந்து விட்ட பரிதவிப்பு எனக்குஏற்பட்டது. அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ராஜேஷ் தன்னையும் CS.ன் மரணம் நிலை கொள்ள விடாமல் தவிக்க விட்டது என்று அலைபேசி மூலம் சொன்னார்….

  • சி. ஞானபாரதி முகநூல் பதிவு
    Via: தோழர் திருப்பதி சாய்