இது இன்னொரு பாட்டனாரின் கதை!

இந்தப் பதிவில் கஜேந்திரகுமாரின் தாய்வழிப் பாட்டனார் பற்றிய சில விபரங்களைத் தரலாம் என எண்ணுகிறேன்.

தாய்வழிப் பாட்டனாரின் பெயர் முருகேசம்பிள்ளை. யாழ்ப்பாண சைவ வேளாள மேட்டுக்குழாமினரின் ஒரு காலகட்டத்து பிரதிநிதிகளில் முக்கியமானவர்.

இவரை நான் முதலில் அறிந்த காலத்தில் எனது பிறந்த ஊரான இயக்கச்சி – முகாவில் கிராமம் அமைந்திருந்த பளைப் பிரதேசத்தின் (பச்சிலைப்பள்ளி) காரியாதிகாரியாக (DRO – District Revenue Officer – இன்றைய உதவி அரசாங்க அதிபர்) இருந்தவர். அதன் காரணமாக எமது கிராமத்தின் சில சமூக நிறுவனங்களில் பொறுப்பு வகித்த எனது தந்தையார் சண்முகம் அவர்களுடனும் பழகியவர். இவர் பளையில் காரியாதிகாரியாக இருந்த காலத்தில் பளையிலும், எமது இயக்கச்சி சந்தியிலும் பல காணிகளை வாங்கி விட்டுள்ளார். அவற்றைப் பின்னர் தனது மகளைத் திருமணம் செய்த கஜேந்திரகுமாரின் தந்தை குமார் பொன்னம்பலத்துக்கு சீதனமாகக் கொடுத்ததாகவும் ஒரு கேள்வி. (முருகேசம்பிள்ளைக்கு அனைத்துப் பிள்ளைகளும் பெண் பிள்ளைகள் என நினைக்கிறேன். அவர்களில் ஒரு பிள்ளைதான் குமார் பொன்னம்பலத்தின் மனைவி)

முருகேசம்பிள்ளைக்கு பளைப் பிரதேசத்தில் மட்டுமின்றி கிளிநொச்சிப் பிரதேசத்திலும் பல ஏக்கர் காணிகள் இருந்தது. இவருக்கு மட்டுமின்றி, அன்றைய காலகட்டத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த ‘கச்சேரி’ என அழைக்கப்படும் அரசாங்க செயலகத்தில் இருந்த அநேகமான தமிழ் உயர் அதிகாரிகளுக்கும் கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்ப்பாசனத்தின் கீழ் பல நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் வளமான காணிகள் இருந்தன. இந்தக் காணிகள் அனைத்தும் அரசாங்கத்துக்குச் சொந்தமான காணிகள். இவர்களால் அடாத்தாகப் பிடிக்கப்பட்டவை.

யாழ்ப்பாண சைவ வேளாள மேட்டுக்குடியின் தலைமகனாக ஒரு காலத்தில் இருந்த ஆங்கிலேயரின் விசுவாசமிக்க அடிவருடியான சேர்.பொன். இராமநாதனுக்கு இரணைமடு குளப் பகுதிக்கு அருகில் 1,000 (ஆயிரம்) ஏக்கர் நெற்பண்ணை இருந்தது. அதுவும் அரசியல் செல்வாக்கால் கபளீகரம் செய்யப்பட்ட ஒரு காணிதான். அவருடைய காணிக்கு நீர்ப்பாய்ச்சுவதற்காகத்தான் இரணைமடுக்குளம் கட்டப்பட்டதாக ஒரு ‘கதை’யும் உண்டு. இந்தக் கதையை கஜேந்திரகுமாரின் தாய் வழிப் பாட்டனாரான முருகேசம்பிள்ளை ஒரு தடவை திருவையாறு படித்த வாலிபர் திட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் திமிருடன் சொல்லியும் இருக்கிறார். இந்த இராமநாதனின் கமத்துக்கு கூலி வேலை செய்வதற்கு வசதியாகத்தான் ஆங்கிலேய அரசு யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு புகைவண்டியை பரந்தன் வரை இயக்கியதாகவும் ஒரு கதை இருக்கின்றது.

இவை ஒருபுறமிருக்க, ‘ஆசாரசீலரான’ முருகேசம்பிள்ளை யாழ்ப்பாண சைவ வேளாள மேட்டுக்குடியினரின் ‘ஞான குருவான’ ஆறுமுக நாவலருக்கு அடியாராக இருப்பதில் வியப்பில்லை அல்லவா? ஏனெனில், ஆறுமுக நாவலர் ‘சைவத்தையும் தமிழையும் வளர்க்கிறேன்’ என்ற பெயரில் சனாதனத்தை வளர்த்த, யாழ்ப்பாணத்தில் நிலப்பிரபுத்துவத்தின் ஒரு கொடும் வெளிப்பாடான சாதியமைப்பைக் கட்டிக் காத்தவர் அல்லவா?
எனவே முருகேசம்பிள்ளை என்ற வகையறாக்கள் ஆறுமுக நாவலரைத் தலையில் வைத்துக் கொண்டாடாமல் விடுவார்களா? எனவே, இந்த உயர்சாதி ஸ்ரீமான்கள் எல்லோரும் சேர்ந்து ‘ஆறுமுக நாவலர் அறங்காவல் சபை’ என்ற அமைப்பை உருவாக்கினார்கள். இந்த அமைப்பின் அங்கத்தவர்கள் யார் யார் என்பதை விரைவில் வெளியிடுவேன்) அவர்களில் இந்த முருகேசம்பிள்ளையும் ஒருவர்.

இவர்கள்தான் கொழும்பிலிருந்து ஆறுமுக நாவலரின் சிலையை யாழ்ப்பாணம் வரை ஊர்வலமாகக் கொண்டு வந்தவர்கள். ஆனால் வல்வெட்டித்துறை ஊடாக அந்தச் சிலையைக் கொண்டுவர அந்த ஊர் மக்கள் அனுமதிக்கவில்லை. அந்த எதிர்ப்புக்குத் தலைமை தாங்கியவர் அந்த ஊரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீஸ்கந்தராஜா. அதற்குக் காரணம், ஆறுமுக நாவலர் பல தாழ்த்தப்பட்ட சமூக மக்களை தனது நூல்களில் கேவலப்படுத்தியது போல, வல்வெட்டித்துறையில் வாழும் மீனவ சமூக மக்களை போன்றவர்களையும் கேவலப்படுத்தியிருந்ததுதான்.
இந்த அறங்காவல சபையினர் ஆறுமுக நாவலரின் சிலையை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் முன்னால் ஒரு மணிமண்டபம் கட்டி நிலைப்படுத்தினர். அந்தச் சிலைக்கு பூசை புனர்க்காரங்களும் நடந்தன.

(ஆனால் நல்லூர் கோயில் நிர்வாகத்துக்கு எதிராக கோயிலை அண்டிய பகுதியிலுள்ள ஒரு காணி சம்பந்தமாக ஆறுமுக நாவலர் தொடர்ந்த வழக்கு ஆறுமுகம் இறந்ததால் இன்றுவரை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது) ஆனால் புலிகளின் ஆதிக்கத்தில் யாழ்ப்பாணம் வந்த காலத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் அன்றைய விசேட ஆணையாளர் சீ.வி.கே. சிவஞானத்தின் (தமிழரசுக் கட்சியின் இன்றைய மூத்த தலைவர்களில் ஒருவர்) மூலம் ஆறுமுக நாவலரின் சிலை நல்லூரிலிருந்து அகற்றப்பட்டு, யாழ்மாநகர சபைக்குச் சொந்தமான ஒரு குப்பை ஏற்றும் டிராக்டரில் ஏற்றப்பட்டு நாவலர் வீதியில் உள்ள நாவலர் கலாச்சார மண்டபத்தில் போடப்பட்டது.

நான் நாவலர் வாழ்ந்த வீட்டின் அருகில் அவரது சொந்தக்காரர்களான ஒன்றுவிட்ட அக்கா வீட்டில் சில வருடங்கள் வாடகைக்கு குடியிருந்த காரணத்தால் இந்த விபரங்களை நேரடியாக அறிந்து கொண்டேன்.