தமிழ் கடல் வளம் சூறையாடப்படுகின்றதா…?

கடலட்டைகள் என்பன ஹோலோதுரைடியா Holothuroidea உயிரியல் வகுப்பின் கீழ் உள்ள “விலங்குகளில்” மிகவும் மாறுபட்டதான, சந்தைப் பெறுமதி மிக்கதும் அழகானதுமான உயிரினங்களாகும். இவை சக உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத உயிரிகள். வழமையாக சேற்று மணல் மற்றும் கடல் அறுகுகள் – கடற்புற்கள் விளைந்திருக்கும் கடலடித்தளங்களையே இவை தமது வாழ்விடமாக கொண்டுள்ளன.

அதேவேளை, மணல்களும் – கற்களும், முக்கியமாக பவளப் பாறைகளுக்கு மத்தியிலும் இவை ஆழ்கடலில் வாழ்கின்றன. இவற்றின் நீளம் சில மில்லி மீட்டரிலிருந்து 2 மீட்டருக்கு மேல் கூட இருக்கும். ஆயிரத்துக்கும் மேலான கடலட்டை வகைகள் உலகளாவிய கடல்களில் காணபடுகின்றன. அனைத்து வண்ணக் கலவைகளிலும் தமது உடலை கொண்டிருக்கும் இவை, வெள்ளை, கறுப்பு, பழுப்பு, சிவப்பு, இளஞ்சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள் மற்றும் ஊதா போன்ற நிறங்களில், அழகானவைகளாக உயிருடன் கடலடித் தளத்தில் இருக்கும்போது காண முடியும்.

பாரம்பரியமாக கிழக்காசியாவில் பெரும்பான்மையான நாடுகளின் உணவு கலாசாரத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கும் கடலுணவாக கடலட்டைகள் விளங்குகின்றன. கடந்த 50 வருடகாலத்தில், வெப்பமண்டல நாடுகளின் கடற்பரப்பில் இயற்கையாக கடலில் காணப்பட்ட கடலட்டை இனங்கள், அவைகளில் இயற்கையான மறு உற்பத்தி திறன் குறைவாலும், அதிகமாக பிடிக்கப்பட்டத்தினாலும் 80% வீதமானவை அழிவடைந்துவிட்டன. 2022 இல் வெளிவந்துள்ள ஆய்வுகளின்படி, மீதமாக உள்ள 20% அட்டைகளும் தொடரும் கட்டுப்படுத்தப்படாத பிடிபாடுகளினால் மிக விரைவில் அழிவைக் கண்டுவிடும் எனக் கூறப்படுகிறது. கடலட்டை வளம் இந்த நிலைக்கு வந்ததற்கு மிக முக்கியமான காரணிகளில் ஒன்று, தங்குதடையின்றி வளர்ந்து வரும் கடலட்டைக்கான சீனச் சந்தையின் கேள்வி அதிகரிப்புத் தான். (Growing Demand for Sea Cucumbers).

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடலட்டைகள்
டிஎன்ஏ-வை (DNA- Deoxyribonucleic Acid) உயிரினங்களுக்கு இடையே மாற்ற முடியும் என்று 1946 இல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். முதல் மரபணு மாற்றப்பட்ட செடி, அண்டிபயோட்டிக் (Antibiotic) – எதிர்ப்புக் கொண்ட புகையிலைச் செடி1983 இல் தயாரிக்கப்பட்டது. 1994 இல், டிரான்ஸ்ஜெனிக் Flavr Savr தக்காளி இனம் அமெரிக்காவில் சந்தைப்படுத்த அனுமதிக்கப்பட்டது. மரபணு மாற்றப்பட்ட உணவுகள் உயிரினங்கள் கடந்த 30 வருடங்களாக சந்தையில் பகிரங்கமாக அனுமதிக்கப்பட்டாலும், இவைகளின் கண்டுபிடிப்புகளும் உற்பத்தியும் பல தசாப்தங்களுக்கு முன்பேயே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.

சீனா 1970 களின் நடுப்பகுதியிலேயே உணவுப் பொருட்களை மரபணு மாற்றம் செய்யும் தொழில் நுட்பத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கியது. பெரும் சனத்தொகையைக் கொண்ட சீனா மக்களுக்கு உணவளிக்க ஏதுவான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவது ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல. சீனா, அரிசி – சோளம் உட்பட பல தானிய வகைகள், பழ மரங்களை மரபணு மாற்றம் செய்தது. சர்வதேச அளவில் பல நாடுகள் இதைச் செய்திருந்தாலும், மக்களின் பாவனைக்கு இவற்றைச் சந்தையில் விடுவது பற்றி முரண்பாடுகள் – சந்தேகங்கள் இருந்ததன் காரணமாக மக்களின் பாவனைக்கு விடுவதற்குத் தயங்கின. ஆனால், சீனா எந்தவித விவாதமும் இல்லாமல், மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப்பெருட்கள் மற்றும் தானியங்களை தனது சந்தையில் அனுமதித்தது. அதன், முக்கியமான நோக்கம் பசி, பிணியற்ற சீனாவை உருவாக்குவதே. அது வேறு எந்த நாடுகளிலும் தங்கியிராது உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டுமென்ற தேசிய சிந்தனைப் போக்கும் குறிப்பிடத்தக்க காரணியாகும்.

1990-களில் பலவகை கடல் உயிரினங்களையும் சீனா மரபணுவை மாற்றி, சந்தைக்காக உற்பத்தி செய்யும் (Mass Production for the Market) தொழிலில் ஈடுபட்டது. தனது வளர்ந்து வரும் உள் நாட்டுப் பொருளாதரமும் அதனால் மக்களிடையே வளர்ந்து வரும் கொள்வனவுத் திறன் (Growing Purchasing Power) அதிகரிப்பிற்கும் ஈடுகொடுக்க, உள் நாட்டின் கடலுணவு மற்றும் கடல்சார் பொருட்களின் உற்பத்தியை உயர்த்த மரபணு மாற்றும் தொழில் நுட்பம் அதற்குக் கைகொடுத்தது. இறால் வகைகள், பாலமீன், கொடுவாய், திலாப்பியா இன மீன்கள், நண்டு இனங்கள், மற்றும் கடலட்டை இனங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்டன.

மரபணு மாற்றம் என்பது பல நோக்கங்களில் செய்யப்படலாம். நோய் தாக்காமல் இருக்க, சீதோஷ்ண நிலையைத் தாங்கி கொள்ள மற்றும் விரைவான வளர்ச்சி போன்ற நோக்கங்கள் அதில் முக்கியமானவை. ஆரம்பத்தில் சீனாவின் முக்கியமான நோக்கம் விரைவான வளர்ச்சியடையும் மரபணு மாற்றப்பட்ட உயிரிகளை உருவாக்குவதாகும். 2001 இல், சீனாவில் பாரிய அளவிலான மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடலட்டை உற்பத்தி (Mass Production) ஆரம்பிக்கப்பட்டது. சீன மரபணு மாற்றத் தொழில் நுட்பத்தினை முன்னின்று செயற்படுத்திய The Institute of Oceanology, Chinese Academy of Sciences in Qingdao, கடலட்டை இனங்களில் சந்தை மதிப்பில் விலை கூடிய இனமான White Sea Cucumber / வெள்ளை இனக் கடலட்டைகளினை தாம் பெரும் உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக, மரபணு மாற்றம் செய்யும் முறைமையைக் கண்டடைந்ததாக 2015 இல் அறிவித்தது. 2018 இல், குழந்தை ஒன்றை மரபணு மாற்ற முறையில் உருவாக்கியதாக சீன விஞ்ஞானிகள் அறிவித்தனர் (The He Jiankui affair is a Scientific and Bioethical Controversy 2018). இன்று சீனா உலகத்தில் மரபணுத் தொழில் நுட்பத்தில் உச்சத்தில் உள்ள சில நாடுகளில் ஒன்றாகும்.

இவ்வளவு திறமை வாய்ந்த சீனாவின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடலட்டைகளின் உற்பத்தி 2005 ஆம் ஆண்டில் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. கட்டற்ற பெரும் உற்பத்தி (Uncontrolled Mass Production) காரணமாக உருவாகிய சுற்றுச் சூழல் மாசடைவும், அட்டை வளர்ப்புக் களங்களின் அடித்தள தாவரங்கள் அழுகி நிலம் சேறாகியமையும் கடலட்டைகள் இனம் தெரியாத நோய்வாய்ப்பட்டு அழுகிப்போகவும் காரணமாகின. இந்த நிலைமை சீனாவின் இலட்சக் கணக்கான ஏக்கர் அட்டை வளர்ப்புக் களங்களில் நிலவியது. கிட்டத்தட்ட சீனாவில் 45 – 55 வீதமான வளர்ப்புக் களங்கள் இதனால் இழுத்து மூடப்பட்டன.

தொடர்ச்சியாக ஏற்பட்ட இந்த வீழ்ச்சியைச் சரிக்கட்ட சீனஅரசு தனக்கு நெருக்கமான பொருளாதார- அரசியல் நட்பு நாடுகளில் புதிய களங்களைத் தேடியது. வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, மடகஸ்கார் வரிசையில் இலங்கையும், சீனத் தொழில் நுட்பத்தில் கடலட்டை வளர்க்கும் நாடுகளில் ஒன்றாகத் தன்னைச் சேர்த்துக் கொண்டது.
சீன மரபணுக் கடலட்டையால் ஏற்படும் விளைவுகளுக்கு யார் பொறுப்பு?

கடல் அட்டைக் குஞ்சை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் வடக்கில் யாழ்ப்பாணம் – அரியாலை மற்றும் மன்னார் – ஓலைத்தொடுவாய் ஆகிய இரு இடங்களில் தற்போது இயங்கி வருகின்றன. இதில் மன்னார்ப் பண்ணை சீனத் தொழில்நுட்ப அனுசரணையுடனான அரச பண்ணையாகவும், அரியாலைப் பண்ணை, குயி – லான் என்ற சீனர்களின் பண்ணையாகவும் உள்ளது. குயி – லான் பண்ணை 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2022 மார்ச் மாதம் வரையான 5 மாத காலத்திற்குள் மட்டும் 4 இலட்சம் குஞ்சுகளை உற்பத்தி செய்துள்ளமை உறுதிப்படுத்தப்படுகின்றது. இந்தக் குஞ்சுகள் மரபணு மாற்றம் செய்யபட்டவை. இன்றுவரை, இந்த அட்டைகளின் மரபணு பற்றிய பின்னணி – அவற்றின் தன்மைகள் பற்றிய எந்தத் தகவலும் இலங்கை அரசினாலோ அல்லது அரச ஆய்வு நிறுவனங்களினாலோ வெளியிடப்படவில்லை. அதேவேளை, சீனாவின் வளர்ப்பு அட்டைகள் மரபணு மாற்றப்பட்டவை என்பதை சீன ஆராய்ச்சி நிறுவனங்களே பகிரங்கமாக அறிவித்துள்ளன. இது பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல நூறு வெளியிட்டுள்ளன. சீன அட்டைகள் மரபணு மாற்றப்பட்டவை என்கின்ற அடிப்படையில் எழும் கேள்விகள் என்னவென்றால்,
கடலட்டை வளர்ப்பினால் அழிந்து போன சீனாவின் கடற்படுகைகள் மறுபடியும் பாவிக்க முடியாமலேயே உள்ளன. சீனாவின் கடல் வளங்கள் இந்த வகை கடலட்டைகள் அழிவை ஏற்படுத்தின என்பது வெளிப்படையான உண்மை. இலங்கைக் கடலில் கொட்டப்படும் சீன அட்டைகளில் நோய்கள் ஏற்பட்டு, கடலின் இயற்கையில் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு?

மரபணு மாற்றப்பட்ட அட்டைகள், இலங்கையின் இயற்கையான அட்டை இனங்களுடன் (Native Species) காலப்போக்கில் கலப்பு ஏற்படும் போது, இயற்கை சார்ந்த இனங்கள் இல்லாது ஒழிக்கப்படும். இந்த வகை இயற்கை அழிவு ஏற்படாமலிருக்க இலங்கையின் அரசு மற்றும் அதன் நிறுவனங்கள் செய்யும் நடவடிக்கைள் என்ன? உயிரியல் பன்மைத்துவத்தை (Biological Diversity) காப்பாற்ற அரசு செய்யும் நடவடிக்கைள் என்ன?

இந்தக் கேள்விகளுக்கு இலங்கையின் கடல்சார் சமூகத்துக்கும் மக்களுக்கும், அரசும் அதன் கட்டமைப்புகளும் பதில் கூறியே ஆகவேண்டும். மரபணு மாற்றப்பட்ட அட்டைகளினால் ஏற்படப்போகும் பாதிப்பு பல தசாப்தங்களுக்கு பரம்பரை பரம்பரையாக மக்களின் வாழ்வாதரத்தைப் பாதிக்கும். கடல் செத்துப்போகும். உயிரற்ற வெறும் நீல நீராக, கருங்கடலாக மாறும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழ ஆராய்ச்சியும் – அதன் சமூகப் பொறுப்பும்
மேற்படி இரு கேள்விகளையும் இந்தக் கட்டுரையாளர் இலங்கையின் அரச அதிகாரத்துவம் சார்ந்த நிறுவனங்களிடம் வினவியபோது, எந்த விதமான- வெளிப்படையான பதிலும் கிடைக்கவில்லை. பல நூறு ஆய்வறிக்கைகள் இலங்கையின் கடல் விவசாயம் பற்றி எழுதப்பட்டிருந்தாலும், கடல் விவசாயத்துக்கு உபயோகப்படுத்தப்படும் மீன் குஞ்சுகள், இறால் குஞ்சுகள், அட்டை இனங்கள் பற்றிய விஞ்ஞான – உயிரியல் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், பல அறிக்கைகளில் சீனத் தொழில் நுட்பங்களை உபயோகித்து கடல் விவசாயம் செய்வதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒரேயொரு ஆய்வறிக்கை மட்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 2014 இல் எழுதப்பட்டிருந்தது. அதில் விரிவாக விளக்கமாக கடலட்டையின் உயிரியல் தகவல்கள் பதியப்பட்டிருந்தன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடல் சார்ந்த கல்வி நிறுவனம் ஒன்று உள்ளது. இது வடக்கில் கடல் சார்ந்த ஆய்வுகளை செய்து, கடல் சார்ந்த தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்தி, கடலறிவைப் பெருக்குவதன் ஊடாக, கடற் பொருளாதரத்தை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிறுவனம் ‘ Sea Cucumbers, Status and culture potential in the Jaffna Lagoon, Sri Lanka ‘ என்ற தலைப்பில் கடலட்டை பற்றி ஆராய்ச்சி செய்து ஆங்கில மொழியிலாலான இந்த ஆராய்ச்சி அறிக்கையை 2014 இல் வெளியிட்டது. அந்த ஆராய்ச்சி அறிக்கை யாழ்ப்பாணக் குடாக் கடலிலும் தீவகத்தில் சில பகுதிகளும் கடலட்டை வளர்ப்பதற்கு உகந்த பிரதேசமாக சொல்லுகிறது. அட்டைப் பண்ணைகள் வைக்க உகந்த வகையில் கடலடித்தளம் எப்படி இருக்க வேண்டும், கடல் நீரின் வெப்பநிலை, உப்பு மற்றும் காரத்தின் அளவு எந்த மட்டத்தில் இருக்க வேண்டும் என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளது. அத்துடன், யாழ்ப்பாண குடாக்கடலில் வசிக்கும் 10 இன அட்டைகளைப் பற்றியும், அவற்றின் உயிரியல் தன்மைகள், மற்றும் அவைகளை எவ்வாறு பிடிப்பது, பதனிடுவது என பல தலைப்புகளில் விரிவாகப் பேசுகிறது அந்த ஆய்வறிக்கை.

ஆனால், சீனா செயற்கையாக உருவாக்கிய அட்டைக் குஞ்சுகளா அல்லது இயற்கையாகவே உருவாகிய குஞ்சுகளா அங்கு வளர்ப்புக்கு உகந்தவை என்பது பற்றி எதுவும் பேசவில்லை. சீனாவினால் செயற்கையாக உருவாக்கப்பட்ட மரபணு மாற்றப்பட்ட சீன அட்டைக்குஞ்சுகளைத் தான் அங்கு வளர்க்கப் போகிறார்கள் என்பதை ஏன் கூறவில்லை? இந்த ஆய்வறிக்கையை எழுதியவருக்குத் தெரிந்த புலமைசார் அறிவின் அடிப்படையில் சீன மரபணு மாற்றம் செய்யப்பட்ட அட்டை குஞ்சுகள் வளர்வதற்கான வெப்பநிலை, உப்பு மற்றும் காரத்தின் அளவுக்கும் – இயற்கையான இலங்கையின் வடகடல் அட்டை வளர்வதற்கான வெப்பநிலை, உப்பு மற்றும் காரத்தின் அளவுக்கும் சில மாறுபாடுகள் உள்ளன. 2010-2011 ஆம் ஆண்டு காலத்தில், கற்பிட்டியில் உள்ள சீன அட்டைக் குஞ்சுப் பண்ணையிலிருந்து கொண்டுவரப்பட்டு யாழ்ப்பாணம்- நாவாந்துறை, புங்குடுதீவு, காரைநகர் பகுதியிலும், கிளிநொச்சி கிராஞ்சியிலும் வளர்க்க முயற்சிக்கப்பட்ட சீன மரபணு மாற்றப்பட்ட அட்டைகள் வெகு விரைவாகவே அழிந்து போயின.

இது நடந்து சில வருடங்களுக்கு பின் 2014 லேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மேற்படி ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், இந்த அழிந்து போன சீன அட்டைகள் பற்றியோ அல்லது அந்த வளர்ப்பு முயற்சி ஏன் தோற்றுப்போனது என்பது பற்றியோ மூச்சு கூட விடவில்லை.

யாழ்ப்பாணத்தில் கடல் வள ஆய்வை மேற்கொள்ள உருவாக்கப்பட்டதென கூறப்படும் இந்த நிறுவனம், 2010 – 2011 காலத்தில் சீன அட்டைக் குஞ்சுகளை கொண்டு உருவாக்கப்பட்ட பண்ணைகளினால் எந்த வகைப் பாதிப்பு ஏற்பட்டது என்று ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மீன்பிடி ஆராய்ச்சி நிறுவனம் 2014 லேயே சரியான முறையில் தகவல்களை வெளியிட்டு, அதை மக்கள் மயப்படுத்தியிருந்தால் இன்று இலங்கையின் வட மேற்குக் கரைகள் எந்தவிதக் கரிசனைகளும் இல்லாமல் அட்டை வளர்ப்பு பண்ணைகளாக மாற்றப்படுவதை ஓரளவுக்கேனும் தடுத்திருக்க முடியும். தடுத்திருக்க முடியா விட்டாலும், அந்த விடயம் மக்களிடையே ஒரு விவாதத்திற்கு வந்திருக்கும். இந்த வளர்ப்பு முறையால் ஏற்படும் நன்மை தீமைகளையாவது அந்த மக்கள் அறிந்திருப்பர். அதன் அடிப்படையில் தம் வாழ்வியலை எதிர்கொள்ள முயன்றிருப்பர்.

மீனவ சமூகத்துடன் கள ஆய்வு
இலங்கையில் தெற்கில், விவசாயத்திற்கான உரத் தட்டுப்பாட்டில் ஆரம்பித்து எரிபொருள், எரிவாயு மற்றும் உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்ய டொலர் இல்லாமல் ஆட்சியாளர்கள் விழிபிதுங்கிய நேரம் அது. மஹிந்த- கோத்தாபயவின் ஆட்சிக்கெதிராக ‘அரகலய’ என்னும் – மக்கள் எழுச்சிப் போராட்டம் முகிழ் நிலையில் இருந்தது. அரகலய போராட்ட களமாக காலிமுகத்திடல் பரிணமித்துக் கொண்டிருந்தது. போராடும் மக்களுக்கு பயத்தில் ஆட்சி அதிகாரத்துக்கு நெருக்கமான அரசியல்வாதிகளும் மேல்தட்டு வர்க்கமும் வெளியில் தலைகாட்ட முடியாமல் ஒளித்திருக்க தொடங்கிய நிலை. இலங்கையின் அதிகார வர்க்கமும் பாதுகாப்பு படையினர் கூட போராடும் மக்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிய நேரம். ஆனால் வடக்கில் எந்தவித அசைவுகளோ மாற்றங்களோ நிகழ்வதை காண முடியவில்லை. தெற்கில் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் அப்படியே வடக்கில் இருந்த போதும், அங்கு வழமை போலவே அரச அதிகாரத்துக்கு நெருக்கமான அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் அதிகார மமதையில் மக்களை அணுகுவதில் எந்தத் தயக்கமும் காட்டவில்லை. ஏனெனில், பல தசாப்தங்களாக அடிபட்டு துன்பப்படும் மக்கள் கூட்டம் தமக்கு எதிராக எழுச்சியடைய மாட்டார்கள் என்று அவர்களுக்குத் தெரியும்.

வட இலங்கையில் தீவுப்பகுதியின் மீன்பிடிக் கிராமத்தினருக்கு அரச அலுவலக மண்டபத்திற்கு சமுகமளிக்கும் படி ‘ஆணை’ வந்தது. கூட்டத்துக்கு சமுகமளிக்க மறுப்பவர்களுக்கு இயந்திர படகுகளுக்கான எரிபொருள் நிறுத்தப்படுமென்று எச்சரிக்கை விடப்பட்டது. கூட்டம் கூடியது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்ததாகவும், கொழும்பில் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்றில் அவர் இருப்பதனால் அவரால் பங்கு கொள்ள முடியவில்லை என்றும் அமைச்சரிடம் சேவைசெய்யும் ஒருவர் அறிவித்தார். பின்பு, அமைச்சர் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு வாழ்வாதரம் வழங்கப்படப்போவதாக அறிவிக்கப்பட்டது. சில வலைத் துண்டுகளும், மிதவைகளும் சிலருக்கு வழங்கப்பட்டன. சிலருக்கு அட்டை வளர்ப்புப் பட்டி போடுவதற்கான முற்பணமாக, அரச அதிகாரிகளுடன் வந்திருந்த நிறுவனமொன்றின் பிரதிநிதி 200000 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். கூட்டத்தில் சலசலப்புக் கிளம்பியது. காசோலைகளைப் பெற்றுக் கொண்டவர்களுடைய கிராமத்தவர்கள் சிலர் கோபத்துடன் குரலெழுப்பினார்கள்.

protest against seacucumber farm
” நான் நினச்ச மாதிரியே நடந்து போச்சு. டேய், அட்டைப் பட்டிய எந்த கடலிலயடா போடப்போறியள்? “
” இத வேணாம் எண்டு நாங்கள் எத்தின வருசமா சொல்லுறம். எங்களுக்கு ஒரு நாய்க்கிருக்கிற மரியாத கூட நீங்கள் தரத் தயாரில்லை, என்ன? “
” 2014 லேயே உங்கட மந்திரியிட்ட சொல்லி போட்டம். இந்த அட்டை வளர்ப்பு எங்கட மீன்பிடி தொழிலை பாதிக்குமெண்டு. “
மீனவர்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்க, பயந்துபோன அதிகாரிகளும் மந்திரியின் சேவகர்களும் கூட்டம் முடிந்து விட்டதாக அறிவித்ததுடன், மண்டபத்தை விட்டு வெளியேறினார்கள். 2022 புரட்டாதி மாத நடுப்பகுதி. மஹிந்த பதவி இறங்கி, ரணில் விக்கிரமசிங்க பிரதமராகி, கோத்தபாய நாட்டை விட்டு ஓடி, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகி, ‘அரகலய’ ஒடுக்கப்பட்டு, போராடியவர்கள் கைது செய்யப்பட்டார்கள். நாட்டையே குலுக்கிப் போட்ட அரசியல் நிகழ்வுகள் பல நடந்தபோதும். குறுகிய காலத்தில் அரசும் அரச தலைவர்களும் மாறிய போதும் வடக்கே ஒரே நபரே மறுபடியும் மறுபடியும் மீன்பிடி மந்திரியானார்.

2022 ஆரம்பத்திலிருந்து புரட்டாதி மாத காலப் பகுதிக்குள் காளான்கள் போல மன்னாரிலிருந்து தீவுப்பகுதி வரையான கடல் களங்கள் முழுவதும் ஏக்கர் கணக்கான அட்டைப் பண்ணைகள் முளைத்திருந்தன. பெரும் மூலதனத்தைக் கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள் அந்த அட்டைப் பண்ணைகளின் உண்மையான உரிமையாளர்களாக இருக்கிறார்கள். ஆனால், கிராமங்களிலோ, இப்பண்ணைகள் ஊரைச் சேர்ந்தவர்களுக்கு உரித்தானதாகக் கூறப்பட்டது. சில மீன்பிடிக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பண்ணைகளை நடத்தும் நிறுவனங்களின் பினாமிகளாக செயற்படுகின்றார்கள் என்பதும் உண்மை. உதாரணமாக, அனலைதீவுக்கு உரித்தான பருத்தித்தீவுக் கடற்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரிய அட்டைப் பட்டிகளை தமக்கு உரித்தானதென்று எழுவைதீவில் வாழும் சில வறுமைப்பட்ட மீனவர்கள் கூறுகின்றனர். அவர்கள் உரிமைகோரும் அந்த அட்டைப்பட்டிகளை அமைப்பதற்கோ அல்லது அவற்றை நிர்வகிப்பதற்கோ பொருளாதாரப் பலம் அற்றவர்கள்கள் என்பதை வெளிப்படையாக யாவரும் அறிவர். மீன்பிடி அமைச்சரின் நேரடி அனுசரணையுடன், அவருக்கு நெருக்கமானவர்களுக்கான நிறுவனத்தினால் நடத்தப்படும் பட்டிகளுக்கு எழுவைதீவு மீனவர்கள் சிலர் வெறும் பினாமிகள் மட்டுமே! இதை நேரடியான எனது களப் பயணத்தில் அறிந்து கொள்ள முடிந்தது.

sea cucumber farm 02 (2)
sea cucumber farm 01 (2)
இதே போன்றே, அட்டை வளர்ப்பினால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் இப் பிரச்சினை பற்றி இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தை அணுகினர். சட்டத்துக்கு முரணாக அமைக்கப்பட்டுள்ள பண்ணைகள் பிடுக்கப்படல் வேண்டுமென்று மனித உரிமைகள் ஆணையம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. சட்டவிரோத கடலட்டைப் பண்ணைகளை அகற்றும்படி மனித உரிமைகள் ஆணையத்தின் தீர்ப்பு 27.10.2022 அன்று வெளியிடப்பட்டது. பொறுப்பான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மனித உரிமைகள் ஆணையம் கூறியது போலவே சட்டத்துக்கு விரோதமான பல பட்டிகள் உள்ளதென்றும், அவை அகற்றப்படும் என்றும் ஐப்பசி 20, 2022 அன்று அறிக்கை விட்டார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இன்றுவரை இது பற்றி தகுதி வாய்ந்த அதிகாரிகளிடம் வினவியபோது, தமக்கு அப்பட்டிகளின் உரிமையாளர்கள் யார் யார் என்று கண்டு பிடிக்க முடியாமையினால், சட்டத்துக்கு விரோதமான பட்டிகளை அகற்ற முடியாமல் உள்ளதெனவும் கூறினார்கள்.

sea cucumber farm – Kilinochi 01
14.12. 2022 அன்று யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆதாரவானவர்கள் மற்றும் பண்ணை உரிமையாளர்கள் எனத் தம்மை கூறிக்கொண்டோர் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை நிகழ்த்தினர். சட்டவிரோதப் பட்டிகளை அகற்றும்படி, மனித உரிமை ஆணையம் கோரிக்கை வைத்தும் கூட டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான மீன்பிடி அமைச்சு இன்றுவரை அகற்றவில்லை. காரணம் என்னவென்று கேள்வி எழுப்பப்பட்டது. “ஆவண ரீதியான அனுமதியைப் பெறுவதற்கான காலதாமதத்தினை தவிர்க்கும் வகையில், தற்காலிக அடிப்படையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், குறித்த தற்காலிக அனுமதிகள் அமைச்சரினால் தான்தோன்றித்தனமாக வழங்கப்படுவதில்லை. கடற்றொழில் சங்கங்கள், நீரியல் திணைக்களம், நாரா, நக்டா, பிரதேச செயலகம் உட்பட்ட சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் பரீட்சித்தே, குறித்த இடத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைக்கப்படுகின்றன. ” என்று மேற்படி கேள்விகளுக்கு பதில் கூறப்பட்டன. அத்துடன், அந்த ஊடக சந்திப்பில் சட்டத்துக்கு முரணான முறையில் பட்டிகள் கட்டப்பட்டுள்ளன என்பதையும் அமைச்சர் டக்ளசின் ஆதரவாளர்கள் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டனர். ஆகவே, மீன்பிடி அமைச்சருக்கோ அல்லது அவரின் கீழ் உள்ளே நிறுவனங்களுக்கோ தெரியாமல் வட கடலில் எந்தவிதப் பண்ணை நடவடிக்கைகளும் நடைபெறவில்லை.

ஆவணி 2002 இல் நோர்வேயின் துறும்சோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வொன்று முன்வைக்கப்பட்டது. இலங்கை போன்ற நாடுகளில் காணப்படும் இலஞ்சம், ஊழல், நிலையற்ற ஆட்சிமுறை போன்ற காரணிகளால் சரியான முறையில் நீலப் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பது சவாலாக உள்ளதென அதில் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் மீன்பிடி அமைச்சு மற்றும் அதன் நிறுவனங்கள் வெளியிட்ட தகவலின்படி, 2022 புரட்டாதி மாதம் நடுப்பகுதிவரை உருவாக்கப்பட்ட அல்லது பண்ணைகள் ஆரம்பிப்பதற்காக அளந்து விடப்பட்ட கடற்பரப்பின் தொகை வருமாறு:

sea cucumber farm – Kilinochi 02
இலங்கையிலேயே வடக்கில் மட்டும் பெரும் கடலட்டைப் பண்ணைகள் தற்போதுவரை (13.11.2022) உத்தியோக பூர்வமாக 616 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளன. வடக்கின் 4 கடல் மாவட்டங்களில் முல்லைத்தீவு தவிர்ந்த ஏனைய 3 மாவட்டங்களும் கடல் அட்டை வளர்ப்பிற்கு உகந்த மாவட்டங்கள் என கண்டுகொள்ளப் பட்டதனால் தாராளமாகப் பண்ணைகள் வழங்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இதுவரையில் 355 பண்ணைகள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு, 265 கடல் அட்டைப் பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இவற்றினைவிட மேலும் 209 பண்ணைகளிற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. தற்போது குடாநாட்டில் உள்ள 265 பண்ணைகளில் (அதாவது அரச நிறுவனங்களால் அனுமதிக்கப்பட்டவை) மிக அதிகமாக வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 118 பண்ணைகள் உள்ளன. இந்த 118 பண்ணைகளும் 250 ஏக்கர் விஸ்தீரணத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 273 கடல் அட்டைப் பண்ணைகள் உள்ளதோடு, 200 பண்ணைகள் அமைப்பதற்கான அனுமதிகள் கோரப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் தற்போது 79 கடல் அட்டைப் பண்ணைகள் உள்ளன. இதற்கு மேலாக, அந்தோனியார்புரம் கடற்பகுதியில் 80 பண்ணைக்கான கோரிக்கையும், இலுப்பைக்கடவையில் 80 பண்ணைகளும், விடத்தல்தீவில் 150 பண்ணைகளும், அமைப்பதற்கான அனுமதிகள் மற்றும் தேவன்பிட்டியில் 54 பண்ணைகளுக்கான அனுமதியும் கோரப்படுகின்றன. இந்த தரவுகளில் “அனுமதி கோரப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்படும் பண்ணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டன என்பது இங்கு கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

தீவுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான அட்டைப் பண்ணைகளைப் பார்ப்பதற்கும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்திப்பதற்கும் கடந்த வருடத்தில் (2022) மூன்றாவது முறையாக புரட்டாதி மாதத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தக் கள ஆய்வில் சேர்த்த தகவல்களும், கடல் களத்தில் அரசும் அவர்களுடன் சேர்ந்து நிற்கும் சர்வதேச மற்றும் உள்ளூர் நிறுவனங்களின் செயற்பாடுகளும் மனதை நொருக்குவதாக இருந்தன. இந்த அடாவடித்தனங்களுக்கு எதிராக மக்கள் திரட்சி கொள்வதையும் நேரடியாக காணக் கிடைத்தது கொஞ்சம் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்தது.

எனது களக் குறிப்பிலிருந்து சில வரிகள்
ஆரம்பத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்த கடலட்டை வளர்ப்புக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், செப்ரெம்பர் நடுப்பகுதியில் சற்று வலுவடைந்தன. மீன்பிடி அமைச்சரின் அரசியல் வரலாறு, மற்றும் அவரின் கட்சி அமைப்பு, இலங்கை அரசின் படைகளுடன் சேர்ந்து செய்த படுபாதகச் செயல்களை மக்கள் இன்றும் மறந்து போகவில்லை. அந்தப் படுபாதகக் கொடுமைகள் இன்றும் மக்களின் மனங்களில் இரத்தம் வடியும் மனக்காயங்களாக – பயத்தினை உருவாக்கும் நினைவுகளாகப் பதிந்துள்ளன. மேற்கூறப்பட்ட அமைச்சரின் நினைவுகளும் – இன்றுள்ள அவரின் அதிகாரப் போக்கும் மக்களை மௌனம் காக்கச் செய்திருந்தாலும், தெற்கில் நடந்து முடிந்த அரகலய போராட்டத்தினால் ஜனாதிபதி கோத்தாபயவை தேசத்தை விட்டு ஓட வைத்ததானது, சனங்களுக்கு எதிர்ப்புக் குரலை எழுப்பும் துணிவைக் கொடுத்தது. அதேவேளை, அமைச்சரும் அவரது சகபாடிகளும், அதிகாரிகளும் சேர்ந்து மக்கள் போராட்டங்கள் மேலெழுந்து விடாது தவிர்க்க பல வழிகளிலும் முயன்றனர். தனியார் நிறுவங்களின் பெரும்தொகை பணம் ஊர்களில் இறைக்கப்பட்டு, மீனவ சமூகம் பிளவுபடுத்தப்பட்டது. நாவந்துறை, பாஷையூர், கரையூர்/குருநகர் கிராமங்களின் மக்கள் ஒற்றுமைக்குப் பெயர்போனவர்கள். ஊர் நலனுக்காக சேர்ந்து நிற்கும் வரலாறு கொண்டவர்கள். அந்தக் கிராமங்களில்கூட மக்கள் பிளவடைய வைக்கப்பட்டார்கள்.

பாரம்பரியமாகச் சிறகுவலை, களங்கண்டி மற்றும் இறால் கூடு வைத்து தொழில் செய்யும் யாழ். குடாக்கடல், அட்டை பண்ணைகளுக்காக தாரை வார்க்கப்பட்டது. பண்ணைப் பாலத்துக்கு கிழக்கு பக்கம் தொடக்கம் கவுதாரி முனை வரையிலான கடல் கூறு போட்டு சீன மூலதனத்தின் பினாமிகளுக்கு கொடுக்கப்பட்டது. போராட்டங்கள் வலுக்கும் நிலைமையைத் தவிர்க்க ‘பழையபடி’ தகவல் தெரிவிப்பு கூட்டங்களை நடத்தினார்கள் அதிகாரிகளும், அமைச்சரின் கட்சியினரும். இரண்டாவது தடவையாக எனக்கு மறுபடியும் கடலட்டை வளர்ப்பு பற்றிய கூட்டத்தில் பங்கு கொள்ள வாய்ப்புக் கிட்டியது.

அரசு அதிகாரிகள் – ஆய்வாளர்களின் கருத்துப்படி
இன்னும் சில தசாப்தங்களுக்குள் இலங்கையைச் சுற்றியுள்ள கரைகள் சார்ந்த கடற்பிரதேசம் எந்த ஜீவராசியும் வாழ முடியாத பிரதேசம் ஆகிவிடும்.

ஏற்கனவே வறட்சியும் நன்னீர்த் தட்டுப்பாடும் காணப்படும் கரையோர மீன்பிடிக் கிராமங்கள் மனிதர் வாழ்வதற்கு தகுதியற்ற இடங்களாக போய்விடும்.

வெப்ப அதிகரிப்பு காரணமாக புல் பூண்டு கூட முளைக்காத பூமியாகி விடும், கடல் சார்ந்த நிலம்.

இதை எந்தவிதத்திலும் தடுக்க முடியாது. காரணம் தற்போது நிலவும் காலநிலை மாற்றமும் புவி வெப்பமடைதலும்.

ஆகவே, இப்போதிருந்தே கடலை எந்த வகையில் எதிர்காலத்துக்கு உகந்ததாக நாம் பாவிக்க வேண்டும் என்பதை அனைவரும் சிந்தியுங்கள். இப்போது உலக நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்ற நீலப் பொருளாதாரமே உங்களுக்கான எதிர்காலம்.

இனி வரும் காலங்களில் ஒவ்வொருவரும் தனித்தனிப் படகுகள் வைத்து மீன் பிடிக்க முடியாது. அதற்கான மீனும் கடலில் இருக்கப்போவதில்லை. ஆகையால், இப்போது அரசாங்கம் முன்னெடுக்கும் அட்டை வளர்ப்பு திட்டம், பாசி வளர்ப்புத் திட்டம், மீன் வளர்ப்புத் திட்டங்கள் போன்றவற்றில் நீங்கள் இணைந்து கொள்வதே எல்லோருக்கும் நன்மை பயக்கும். உங்கள் அனைவருக்கும் ஆளுக்கு ஒரு துண்டாகக் கடலைப் பிரித்து தர முடியாது. இலாபகரமாக நீலப் பொருளாதாரம் இருக்க வேண்டுமெனில், பாரிய மூலதனங்கள் உள்ள நிறுவனங்களே இந்தக் கடல் விவசாயத்தைச் செய்ய முடியும். நீங்கள் கூலியாளர்கள், மற்றும் அந்த நிறுவனங்களுக்கு உட்பட்ட தொழிலாளர்களாகவும் உங்களை இணைத்துக் கொள்வதன் மூலமே உங்கள் பொருளாதாரத்தையும் அன்றாட ஜீவனோபாயத்தையும் கவனித்துக் கொள்ள முடியும். உங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகத் தான் மிக முக்கியமான கரிசனையுடன் இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறோம்.

பாசி வளர்ப்பும், அட்டை வளர்ப்பும் உங்கள் பிரதேசத்தில் நன்றாகச் செய்ய முடியும். ஆனால், தொடர்ச்சியான பாரம்பரிய மீன்பிடி முறை என்பது எந்த வித லாபத்தையும் அரசுக்கோ அல்லது சமூகத்துக்கோ தரப்போவதில்லை.
இன்றுள்ள உலகப் பொருளாதார நிலையில் பாரிய அமெரிக்க டொலர் வருமானத்தை தரவல்லது இந்தக் கடல் விவசாயம் மட்டும்தான்.
உங்களுடைய தனிப்பட்ட நலன்களை விட, தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு இந்தக் கடல் வளங்களைப் பயன்படுத்துவதே நமது அரசினதும், அமைச்சர் அவர்களினதும் முக்கிய நோக்கமாகும்.

ஆகவே, தேவையற்ற முரண்பாடுகள் – வன்முறைகளைத் தவிர்த்து, அனுமதியுடன் உங்கள் பிரதேசங்களில் கடல் விவசாயம் செய்பவர்களுக்கு ஆதரவு வழங்குமாறு வலியுறுத்துகிறோம். எதிர்ப்பவர்களுக்கும், போராட்டங்கள் என்ற பெயரில் சமூக அனர்த்தங்களை ஏற்படுத்த முயற்சி செய்பவர்களுக்கும் சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு முன்பாக, சமுர்த்தி மற்றும் மீனவர்களுக்கான மானியக் கொடுப்பனவுகள், எரிபொருள் போன்ற கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் என்பதையும் அறியத்தருகிறோம்.

கூட்டத்திற்கு வந்திருந்த மீனவர்களுக்கு ஏதோ உலக மகா தத்துவத்தை போதித்த திருப்தியுடன் அதிகாரிகளும் – கடலியல் விஞ்ஞானிகளும் அமர்ந்திருக்க, உணர்வு தெறிக்கும் மக்களின் வசனங்கள் வளாக மண்டபத்தை அதிர வைத்தன.

” எல்லாத்தையும் அழிச்சு போட்டியள். இப்ப, இந்தக் கரைதான் கிடந்தது. இதுக்கும் நீங்க வேலி போட்டா. நாங்க எங்க தொழில் செய்கிறது ? “
” நாங்க பரம்பரை பரம்பரையாக பாதுகாத்த கரை இது. இப்போ, எங்களை இந்தக் கரையில கால் வைக்கக் கூடாதெண்டு சட்டம் போட நீங்க யாரு ? ”
” எவனட்டையும் நாங்க கையேந்தி சீவிச்சதாக சரித்திரமே இல்லை. இப்ப, எங்களை இந்த கொம்பனிகாரங்களிட்ட கையேந்தச் சொல்லிறீங்களோ? ஒரு மணித்தியாலம் மினக்கெட்டால் கடலாச்சி ஆயிரம் ஆயிரமாய் அள்ளிக் கொட்டுவாள். அதை விட்டுப் போட்டு, ஆயிரம் ரூபா நாளாந்தக் கூலிக்கு எங்களை மாரடிக்க சொல்லிறியளே? “
” எங்கட அடிமடியில கை வச்சுப் போட்டியள். நாங்கள் சும்மா விடமாட்டம். ”

யாருக்கு எதிராக, யாரால் மேற்படி எதிர்வினை வசனங்கள் மண்டாக்களாகப் பாய்ந்தன என்பதை மேலதிகமாக விளக்க தேவையில்லை. கூட்டம் குழம்பியது. கடலின் பிள்ளைகள் ’கெம்பியெழுந்தால்’ யாரால் ஈடு கொடுக்க முடியும்?
இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் 2022 மார்கழி நடுப்பகுதியில், வடக்கின் பல கிராமங்களில் கடல்வள ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன. கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சியில் (14.12.2022) 75 ஆவது நாளாக போராட்டம் நடப்பதாக அறியக் கிடைக்கிறது. தீவகம், அனலைதீவு மக்கள் மூன்று மாதங்களாக பருத்தித் தீவு கடலில் அமைக்கப்பட்டுள்ள 50 ஏக்கர் கடற்பண்ணையை அகற்றும்படி கோரிக்கை வைத்துப் போராடுகிறார்கள். இந்தக் கோரிக்கைகளை செவிமடுக்காத மீன்பிடி அமைச்சும் அதிகாரிகளும், 150 ஏக்கர் அளவில் மேலும் மூன்று பட்டிகளை அமைக்கும் நடவடிக்கையில் சீன மூலதனத்தின் அடியாட்களுடன் சேர்ந்து ஈடுபட்டுள்ளனர். நாவாந்துறை, குருநகர், புங்குடுதீவு, வேலணை- செட்டிப்புலம் மக்கள் தமது கடல் வளத்தையும் – அதன் இயற்கையையும் காவுகேட்கும் மரபணு மாற்றப்பட்ட கடலட்டைப் பண்ணைகளுக்கு எதிராகப் போராடுகிறார்கள்.

மக்களின் கோரிக்கைகளும் அவற்றின் நியாப்பாடுகளும்
அட்டைப் பட்டிகளை கள கடலில் அமைப்பதனால், மீன்கள் மீன்பிடி பாடுகளுக்கு வருவது தடைப்படுகிறது.

மீனினங்கள் இனப்பெருக்கம் செய்ய தமது கடற்களங்களுக்கு வருகை தருவது, பிளாஸ்டிக் வலைகளினால் ஏக்கர் கணக்கான தூரத்துக்கு போடப்பட்டிருக்கும் வேலிகள் தடுக்கின்றன. இதனால், மீன்களின் இயற்கையான உற்பத்தி அளவு பாதிக்கப்படுகிறது.

அட்டைப் பட்டிகளை உருவாக்கப் பாவிக்கப்படும் பிளாஸ்டிக் வலைகள், உலோகக் குழாய்கள் மற்றும் இயற்கை சாராத உபகரணங்கள் கடலை மாசடையை வைக்கின்றன.

மாதக் கணக்கில் / வருடக்கணக்கில் கடலில் கிடக்கும் பிளாஸ்டிக் வலை வேலிகளில் பாசிகள், செழும்புகள் பிடித்து அவை கடலின் இயற்கையான நீரோட்டத்தை திசைதிருப்ப வல்லன. இதனால், நீரோட்டம் திசைமாறும் போது கரைக்கு வரும் நீரோட்டத்துடன் வலம்வரும் மீனினங்கள் வேறு திசைக்கு சென்று விடும். இது, கடலின் உயிரியல் சமநிலையைப் பாதிக்கும். அத்துடன், நீரோட்டம் மறிக்கப்படும் போது அது இன்னும் வலுப்பெறுகிறது. வலு அதிகரித்த கடல் நீரோட்டம் கரைகளில் மண்ணரிப்பை ஏற்படுத்தும்.

வடக்கு மாகாணத்தில், கரைக்கடல் மற்றும் களக்கடல் சார்ந்து தொழில் செய்பவர்களே பெரும்பான்மையானவர்கள். இவர்கள் சிறு தொழில்களான களங்கண்டி, இறால்கூடு, அடிவலை, முரல்வலை, சிறுவலை வீச்சு, இறால்மடி இழுப்பு, கணவாய் மற்றும் மீன் பறி வைத்தல் போன்ற கடற்தொழில் முறைகளை உபயோகிக்கின்றனர். இந்த தொழில்கள் கரையிலிருந்து அதிகப்படியாக 2 – 3 மீற்றர் வரையான ஆழத்தைக் கொண்ட கடலிலேயே செய்யப்படுகிறன.

இத்தொழில்கள் செய்யும் களக் கடலை ஆக்கிரமித்து – ஏக்கர் கணக்கான கடல் நிலத்தில் கடலட்டை வளர்க்கும் பட்டிகள் கட்டப்படும்போது, மக்கள் எங்கே போய் தங்கள் தொழிலைச் செய்வது? அன்றாட வருமானத்தில் சீவிக்கும் எமது வாழ்வு முறைக்கு தேவையான பொருளாதாரத்தை – பணத்தை யார் கொடுப்பார் ? மக்களின் நியாயங்களுக்கும், அவர்களின் கேள்விகளுக்கும், என்னாலோ அல்லது வேறு ஒருவரினாலோ மேலதிகமாக விளக்கவுரையோ உள்ளடக்க விளக்கமோ கொடுக்க வேண்டிய தேவை இல்லை. தமது வாழ்க்கையை, வாழ்விடம் சார்ந்த இயற்கையை எவ்வாறு அட்டை வளர்ப்பு பாதிக்கிறது, எவ்வாறு தமது வயிற்றிலடிக்கிறது என விபரிக்கும் நியாயங்கள் அப்பட்டமானவை; சத்தியம் சார்ந்தவை; உண்மையின் வெளிப்பாடு. ஆனால், கடலட்டை வளர்ப்பை நடைமுறைப்படுத்திவருவதற்காக அரச நிர்வாகமும், மீன்பிடி அமைச்சும், அரசின் கடல்வள ஆய்வாளர்களும் கூறும் காரணங்களும் நியாயங்களும் எவரின், எந்த வர்க்கத்தின் நலன் சார்ந்தவை என்பது அம்பலப்படுத்தப்படல் வேண்டும்.

என்னை ஊட்டி வளர்த்து மனிதனாக்கிய, புரதத்தை ஊட்டி என்னை சிந்திக்க வைத்த என் கடல் தாயை கூறு போட்டு, அவள் மீது வன்முறை செய்து, அவள் மடியில் சீன மரபணு மாற்றப்பட்ட அந்நியப் பொருளை விதைத்து வரும் அதிகார சக்திகள் கூறும் காரணங்கள் அக்கு வேறு ஆணி வேறாகப் பிடுங்கப்பட வேண்டியவை.

(மரியநாயகம் நியூட்டன்.)