இந்திய விவசாயிகள் போராட்டம்

சென்னை:
எல்லையில் இருப்பதை போன்ற சூழல் தில்லியில் நிலவுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் அகில இந்தியவிவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளரு மான விஜூகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னையில் வியாழனன்று ( பிப்.4) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தற்போது நாட்டில் உண்மையை பேசினாலும் அது குற்றமாக கருதப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக 11 பத்திரிக்கையாளர்கள் இதனால் வழக்கை எதிர்கொண்டுள்ளனர். தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் பகுதியில் செய்தி சேகரித்த இவர்கள் அங்கிருந்து காவல் துறையால்அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று நாங்கள் பல நாட்களாக தேடினோம். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்தசில மாதங்களாக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்றம் கூடாத நேரத்தில் மூன்று சட்டங்களையும் அவசரச் சட்டமாக கொண்டு ஜனநாயகப்பூர்வமாக விவாதிக்காமல் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாராள அனுமதி
விவசாயிகள் உற்பத்திசெய்யும் விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கப்பட வேண்டும், உள்ளிட்ட இரண்டு தனிநபர் மசோதாக்கள் விவசாயிகளால் தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாக்களை மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் கே.கே.ராகேசும், மக்களவையில் ராஜூஷெட்டியும் முன்மொழிந்தனர். ஆனால் அரசு இந்த மசோதாக்களை நிறைவேற்ற முன்வரவில்லை. மார்ச் மாதம் 24ஆம் தேதி மக்கள்பொது முடக்கத்தை மத்திய அரசு அறிவித்தது. பின்னர் காலவரையற்ற பொதுமுடக்கத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த காலக்கட்டத்தில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. விவசாயிகளோ அப்போது கோதுமை, பருப்பு, காய்கறிகளின் அறுவடையில்தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். பொதுமுடக்கம் காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களதுசொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால் அறுவடைக்கு போதிய விவசாய தொழிலாளர்களும் கிடைக்கவில்லை.
தொழிலாளர்கள் பலி
பொதுமுடக்கத்தால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினர் போதிய வருவாய் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர். விவசாய தொழிலாளர்களும் வேலையில்லாமல் அவதிப்பட்டனர். இந்த காலகட்டத்தில் ஊட்டச்சத்து கிடைக்காமல் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அத்தகைய சூழ்நிலையில் விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள் ஏழை, எளிய மக்களுக்கு மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தோம்.வேலையில்லாமல் இருந்த கிராமப்புற ஏழை மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்கவேண்டும். தற்போதுள்ள கூலியை உயர்த்தி வழங்க வேண்டுமென்று வலியுறுத்தினோம். பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேரளாவை போன்று உணவு பாதுகாப்புக்கு உறுதிசெய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது. ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு தேவையான அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கவேண்டுமென்றும் கோரினோம்.
சுதந்திரமாக விற்க முடியுமா?
மத்திய அரசு மூன்று அவசரச்சட்டங்களை கொண்டு வந்தபோது என்ன சொன்னது என்றால், “இந்தியாவுக்கு 1947ல் விடுதலை கிடைத்த போதும் விவசாயிகளுக்கு இதுவரை விடுதலை கிடைக்கவில்லை. விவசாயிகள் தங்களது விளைபொருட்களை நாட்டின் எந்த ஒரு பகுதிக்கும் எடுத்துச்சென்று விற்பதற்கான சுதந்திரத்தை வழங்குகிறோம்’’ என்று கூறியது. ஆனால் உண்மை நிலை என்ன. வட இந்தியாவில் காளிபிளவருக்கு போதிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் சாலையில் வீசியெறிந்தார்கள். உற்பத்திச் செலவை கூட ஈடுகட்ட முடியாத அளவிற்கு கொள்முதல் விலை உள்ளதாக கூறி விவசாயிகள் கண்ணீர் சிந்தினர். ஆனால் மத்தியஆட்சியாளர்கள் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை நாட்டின் எந்த ஒரு பகுதிக்கும் கொண்டு சென்று விற்பதற்கான சுதந்திரத்தை வழங்கியுள்ளதாக தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள் எப்படிப்பட்டவை. பொது விநியோக முறையை கைவிடவேண்டும் விவசாயத்திற்கு அளிக்கும் மானியத்தை நிறுத்தவேண்டும் என உலக வர்த்தக அமைப்பும், ஐரோப்பிய யூனியனும் பல ஆண்டுகளாக மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. உணவுக்கு அளிக்கப்படும் மானியத்தையும் வெட்டவேண்டும் என அவை நிர்ப்பந்திக்கின்றன.சாந்தகுமார் குழு அளித்த பரிந்துரைப்படி மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்ததாக நரேந்திரமோடி அரசு கூறுகிறது. இந்த சட்டம்விவசாயிகளுக்கு எதிராக உள்ளது என கிளர்ந்தெழுந்த விவசாயிகள் பல இடங்களில் சட்ட நகலை தீயிட்டு கொளுத்தினர். கடந்தாண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதியும் 27ஆம் தேதியும் “தில்லி நோக்கி செல்வோம்’’ என்ற போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கம் அழைப்புவிடுத்தது. இதற்கு தொழிற்சங்கங்களும் ஆதரவு அளித்தன. இந்த கோரிக்கையை ஆதரித்து தொழிற்சங்கங்களின் சார்பில் அகில இந்திய வேலை நிறுத்தமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதில் 6 கோடி தொழிலாளர்கள் பங்கேற்று மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை பதிவுசெய்தனர்.
விவசாயிகளை கொடுமைப்படுத்தும் மோடி அரசு
தில்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசும் ஹரியானா மாநிலத்தில் உள்ள மனோகர்லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசும் ஈடுபட்டுள்ளன. விவசாயிகள் அமைதியான முறையில்போராட்டம் நடத்தினாலும் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து கொடுமைப்படுத்துகிறார்கள்.தில்லியை நோக்கி செல்லும் நெஞ்சாலைகளில் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு குழிதோண்டி வைத்துள்ளனர். கப்பல்களில் கொண்டுசெல்லப்படும் மிகப்பெரிய கண்டெயினர்களை சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்துள்ளனர்.
117 விவசாயிகள் பலி
கடும் குளிர்காலத்திலும் விவசாயிகள் மீது கடுமையான அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இந்த அடக்குமுறைகளை மீறி லட்சக்கணக்கான விவசாயிகள் தில்லியின் எல்லையில் 6 மையங்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக திரண்டு மத்திய அரசுக்கு எதிராகபோராட்டம் நடத்திவருகிறார்கள். இந்த போராட்டத்தின் போது 117 விவசாயிகள் உயிரிழந்தனர். சிலநாட்கள் தில்லியில் குளிர் 1.5 டிகிரிக்கும் குறைவாக நிலவியது. இதனால் குளிரை தாங்க முடியாமல் விவசாயிகள் பலர் உயிரிழந்தனர். ஒரு வாரம் தொடர்ந்து மழையும் பெய்தது. இருப்பினும் மூன்றுவேளாண் சட்டங்களை திரும்பப்பெற அரசு முன்வரவில்லை. ஆனால் இந்தச் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்பதில் விவசாயிகள் உறுதியுடன் உள்ளனர்.
விவசாயிகளை இழிவுபடுத்தும் அரசு
மத்திய அரசு வேளாண் சட்டங்கள் அம்பானி,அதானி போன்ற பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளன என்று அவர்கள் உணர்ந்துள்ளனர். போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை இழிவுபடுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. அவர்கள்காலிஸ்தான் தீவிரவாதிகள் என்றும் விவசாயிகளை பாகிஸ்தானும் சீனாவும் தூண்டிவிடுவதாக வும் கூறினார்கள். விவசாயிகள் போராட்டத்தில் நகர்ப்புற நக்சல்வாதிகள் நுழைந்திருப்பதாகவும் கூறினார்கள்.
பாஜக ஏஜெண்டுகள்
தில்லியில் குடியரசுத்தினத்தன்று விவசாயிகள் என்ற போர்வையில் வன்முறையில் ஈடுபட்டது யார் என்பதை விவசாயிகள் நன்கு அறிந்துள்ளனர். பாஜகவின் ஏஜெண்டுகள் விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தவேண்டும் என்பதற்காக திட்டமிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர். பஞ்சாப்பை சேர்ந்த தீப் சிங் சித்து என்ற பாஜக ஆதரவுபெற்ற நடிகர் செங்கோட்டையில் கல்சா கொடியை ஏற்றினார். ஆனால் அவர் மீது இதுவரை காவல் துறை எந்த வழக்கும் பதிவுசெய்யவில்லை. ஆனால் விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் மீது ஏராள மான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
எல்லையை போன்ற நிலைமை
விவசாயிகள் போராட்டம் நடைபெறும் இடத்தில் எல்லையில் கம்பிவேலி உள்ளதைபோல காவல் துறையினர் அமைத்துள்ளனர். விவசாயிகளின் டிராக்டர்கள் தலைநகருக்குள் நுழைவதைதடுக்கும் வகையில் சாலையில் கூர்மையான இரும்பு கம்பிகளை ஆணிபோல் பதித்துள்ளனர். சாலைகள் முழுவதும் அகழிபோல் தோண்டப் பட்டுள்ளன. திறந்தவெளி சிறைச்சாலைபோல் அந்த இடம் மாற்றப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் இணையசேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதுதான் தில்லியில் தற்போது உள்ள நிலைமை.
நாடு தழுவிய பிரச்சனை
விவசாயிகளின் பிரச்சனை என்பது அவர்கள் சார்ந்த பிரச்சனை அல்ல. இது நாட்டின் பிரச்சனை. நமது நாட்டின் உணவு பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை. அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளதால் பதுக்கலும் கள்ளச்சந்தையும் அதிகரிக்கும். இதனால் ஏற்படும் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவேதான் விவசாயிகளுடன் இணைந்து பல்வேறு தரப்பினரும் போராடி வருகிறார்கள். இதன் முக்கியத்து வத்தை உணர்ந்து ஊடகத்தினரும் இந்த செய்தியை மக்களிடம் விரிவாக கொண்டு செல்ல வேண்டும்.
தேர்தலில் எதிரொலிக்கும்
விரைவில் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் விவசாயிகள் பிரச்சனை முக்கியமாக எதிரொலிக்கும். மத்திய அரசின் விவசாயிகள் விரோத நடவடிக்கைகள் நாட்டு மக்களிட்ம் விரிவாக பிரச்சாரம் செய்யப்படும். இந்தத் தேர்தலில் பாஜகவை மட்டுமல்லாமல் அவர்களது மக்கள் விரோத கொள்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளையும் குறிப்பாக தமிழகத்தில் அதிமுகவையும் மக்களிடம் அம்பலப்படுத்தி தோற்கடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவோம்.இவ்வாறு விஜூ கிருஷ்ணன் கூறினார்.இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் இரா.முரளி, இ.சர்வேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.