இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களுக்கிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புப் பிரிவிடம் அம்மாகாண அளுநர் அநுராதா யஹம்பத் கோரியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மாலை 6 மணிக்குப் பின்னர் மூடுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், மாலை 6 மணிக்குப் பின்னர் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்ந்த ஏனையக் காரணங்களுக்காக மக்கள் நகருக்குள் வருவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் பாதுகாப்புப் பிரிவிடம் கோரியுள்ளார்.

மேல் மாகாணத்தில் சீனாவின் சினோபார்ம் தடுப்பு மருந்தை செலுத்துவதற்காக  40க்கும் மேற்பட்ட மையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு நாளைக்கு சுமார் 25,000 தடுப்பூசிகளை  செலுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”விமான நிலையங்களை மூடுவது குறித்த தீர்மானம் எதுவும்  இதுவரை எடுக்கப்படவில்லையென”  சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்தார். மேலும் தற்போதைய சூழ்நிலையில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து விமான நிலைய ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், தொற்றாளர்களுக்குத் தேவையான ஒட்சிசன் மற்றும் வென்டிலேட்டர் இயந்திரங்களை சீனாவிடமிருந்து அன்பளிப்பாகப் பெற்றுக்​​கொள்வது தொடர்பான கோரிக்கை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவால், சீனாவிடம் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் கோரிக்கைக்கமைய,  இலங்கையிலுள்ள சீன தூதரகத்தில் கடிதம் மூலம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.