இலங்கை: கொரனா செய்திகள்

பாலூட்டும் தாய்மார்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள தகுதியுடையவர்கள் என, தொற்று நோய் பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசியை ஏற்றுவது குறித்து, சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசியை ஏற்றுவது குறித்து இதுவரை முழுமையான பரிந்துரைகள் எவையும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள அவர், இதுவரை கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசியை ஏற்றுவது தொடர்பான எவ்வித ஆய்வுகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றார்.

பயணக்கட்டுப்பாடு தொடர்பில் அதிரடியான அறிவிப்பு சற்றுமுன்னர், வெளியானது

மே மாதம் 21ஆம் திகதி இரவு 11 மணிமுதல் மே மாதம் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்பின்னர், 25ஆம் திகதி இரவு 11 மணிமுதல், மே மாதம் 28ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் 3ஆவது அலையின் பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கை கிழக்கு மாகாணத்தில் 3,000ஐ அண்மித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் 1,000 தை தொடும் நிலையில் உயர்வடைந்துள்ளமை கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் புள்ளி விவரத் தகவல்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 941ஆக அதிகரித்துள்ளதுடன், கல்முனை பிராந்தியத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 80ஆக உயர்வடைந்துள்ளது.

அம்மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில், அக்கரைப்பற்று சந்தைப்பகுதியில் எழுந்தமானமாக பி.சி.ஆர் பரிசோதனைகள் இன்று (18) முன்னெடுக்கப்பட்டன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணனின் ஆலோசனையின் பிரகாரம், அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எப்.எம்.ஏ.காதர் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள், பொலிஸார் உள்ளிட்டவர்களின் ஒத்துழைப்பில் இப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 86ஆக உயர்வடைந்துள்ளதுடன், அம்பாறை மாவட்டத்தில் 23ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.