இலங்கை: கொரனா செய்திகள்

அத்துடன் சீனாவால் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ள 5 மில்லியன் தடுப்பூசிகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை இலங்கைக்கு கிடைக்கவுள்ளதெனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை,  மேலதிக தடுப்பூசிகளை சீனாவிலிருந்து கொள்வனவு செய்வது குறித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் சீனத்தூதுவருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (19) இடம்பெற்றதாகவும் கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 400க்கும் அதிகமான ஊழியர்கள், பிசிஆர் பரிசோதனைகளுக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாகியுள்ளனர் என  அறியமுடிகிறது.

இதனால் சமூகத்தில் தொற்று மேலும் பரவலடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களை வலைவீசி பிடிக்கும் பணியில் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் கடந்த 17ஆம் திகதி இரவு 11 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, இன்றுடன் (20) இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், மக்கள் தனிமைப்படுத்தல் விதியை சரியாக நடைமுறைப்படுத்த தவறிவருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் எழுமாற்றாக 62 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

தொற்றுக்குள்ளானவர்களை, கொழும்பில் உள்ள சிகிச்சை நிலையத்துக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறைச்சாலையில் இருவருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து, எழுமாற்றாக  மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலேயே இவ்வாறு 44 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேசத்தில் மாத்திரம் 25 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.