இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கை மருத்துவ சங்கம், கடந்த புதன்கிழமை (11) ஜனாதிபதியிடம் எழுத்துப்பூர்வமாக கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுமையாக முடக்கப்பட வேண்டும் என்று அறிவித்ததாக, இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் டொக்டர் பத்மா குணரத்ன  தெரிவித்தார். இலங்கை மருத்துவர் சங்கம் என்ற வகையில், இது தொடர்பில் எப்போதும் ஜனாதிபதி, சுகாதார அமைச்சர், சுகாதார செயலாளர் மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு தொடர்ந்து வலியுறுத்துவதாகவும்,  பத்மா குணரத்ன கூறினார்.

கொரோனா வைரஸின் கடுமையான திரிபாக டெல்டா மாறுபட்டிருக்கும் நிலையில், எதிர்காலத்தில் இன்னும் கடுமையான கொரோனா வைரஸ் விகாரம் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானவை என்றும், யாராவது வீட்டை விட்டு வெளியே வந்தால், கொரோனா தொற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் அமைச்சர் எச்சரித்தார். இந்த நேரத்தில் பயணங்களை முடிந்தவரை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஒட்சிசனை கொண்டுவருவதற்கு இலங்கை கடற்படை கப்பலான “சக்தி” சென்னை துறைமுகத்துக்கு புறப்பட இருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது. வைத்தியசாலைகளில் நிலவும் ஒட்சிசன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 100 மெற்றிக் தொன் மருத்துவ தர ஒட்சிசனை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது. ஒட்சிசனைக் கொண்டுவருவதற்கான உத்தியோகபூர்வ நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர், கப்பல் இன்று புறப்படும் என்று தெரிவித்த கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா, சென்னை துறைமுகத்தை அடைய 36 மணி நேரம் எடுக்கும் என்றும் தெரிவித்தார்.