இலங்கை: கொரனா நிலவரம்

புதிய வகை கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள 16 பேரில் 13 பேர், இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பம்பைமடு, முழங்காவில்  ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளனர் எனவும் ஏனையோரில் ஒருவர் அவிசாவளை பிரதேசத்திலும் மற்றைய இருவர் கொழும்பு பகுதியிலும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வில், மேற்படி வைரஸ் பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் அடையாளம் காணப்பட்ட தொற்றுடன் ஒத்ததென கண்டறியப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தோரில் மேலும் 715 பேர் இன்று(15) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 69,411 ஆக அதிகரித்துள்ளது. 

மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை பாடசாலைகளில் விழாக்கள், நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வலயக் கல்வி அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக, கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

புதிய வகை கொரோனா வைரஸ்  தொற்று காரணமாக நாட்டை முழுமையாக முடக்க வேண்டிய அவசியமில்லை என COVID – 19 தொற்று தொடர்பிலான இராஜாங்க அமைச்சர், வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போதைய நிலமையின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்புடன் நடந்துகொள்வது அவசியம் என விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா  தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று(15) ஆரம்பமாகவுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய, பொதுமக்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை இன்றைய தினம் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தின் கொவிட்  19 அவதானமிக்க பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கே முதற்கட்டமாக இந்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.