உக்ரைன் – ரஷ்யா போர் பதற்றம் : உலக நாடுகள் எச்சரிக்கை

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, ஜோர்டான் உள்பட பல்வேறு நாடுகள் தங்கள் குடிமக்களை உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளன.

ரஷ்யா  உக்ரைனின் எல்லையில் 100,000 படைகளை குவித்துள்ளது, ஆனால் படையெடுப்பதற்கான எந்த நோக்கத்தையும் வெளியிடவில்லை. 

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரமும் படையெடுக்கலாம் என்ற அச்சம் உலகளவில் நிலவி வருகிறது.

எந்த நேரத்திலும் படையெடுப்பு நடக்கலாம் என்றும், வான்வழி குண்டுவீச்சுடன் தொடங்கலாம் என்றும் வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.

எனினும் ரஷ்யா இத்தகைய குற்றச்சாட்டுகளை “ஆத்திரமூட்டும் ஊகங்கள்” என்று தெரிவித்துள்ளது. 

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

எவ்வாறாயினும் ரஷ்யா படையெடுக்கும்பட்சத்தில் உக்ரைனுக்கும் ஆதரவளிப்போம் என நேட்டோ மற்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளன. இதனால், ரஷ்யா – உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.