கடினமாகும் குடியேற்ற விதிகள்

சமீப காலங்களில் அங்கு செல்ல விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அந்நாட்டில் வாடகைக்கு வீடு கிடைப்பது அரிதாகியது. மேலும் இதனால் பல உள்கட்டமைப்பு சிக்கல்களும் எழுந்தன. இது அந்நாட்டு குடிமக்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அந்நாட்டு ஊடகங்களில் கருத்துக்கள் வெளியாகி வந்தது.

இந்நிலையில் அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சர் க்ளேர் ஓ நெய்ல் (Clare O’Neil) புதிய குடியேற்ற சட்டதிட்டங்கள் குறித்து அறிவித்துள்ளார்.

“கடந்த ஜூன் 2023 வருட கணக்கின்படி 5 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நாட்டிற்குள் குடியேறியுள்ளனர். பழைய குடியேற்ற சட்ட விதிகளில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. அவை தேவையற்று காலதாமதம் ஏற்படும் வகையிலும், போதுமான பலன் அளிக்காத வகையிலும் இருந்தது. எனவே, ஒரு பெரும் மாற்றம் தேவைப்பட்டது. அவுஸ்திரேலியாவிற்குள் குடியேறுவோர் எண்ணிக்கை இனி படிப்படியாக குறைக்கப்பட்டு 2025 ஜூன் மாதத்திலிருந்து தற்போது உள்ள அனுமதி 50 சதவீதத்திற்கும் குறைவாக மாற்றப்படும். சர்வதேச மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவிற்குள் கல்வி பயில்வதற்காக நடத்தப்படும் பிடிஈ (PTE) தேர்வில் ஆங்கில புலமைக்கான தேர்வு இன்னும் கடினமாக்கப்படும். ஒரு முறை அங்கு கல்வி பயின்றவர்கள் இரண்டாம் முறை கல்விக்காக அனுமதி கோரும் போது பரிசீலனைகள் கடுமையாக்கப்படும்” என க்ளேர் தெரிவித்தார்.

தற்போதைய தரவுகளின்படி சர்வதேச மாணவர்கள் சுமார் 6 லட்சத்திற்கும் மேல் அவுஸ்திரேலியா பல்கலைக்கழகங்களில் பயின்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.