கொரோனா மரணங்கள் வவுனியாவில் அதிகரிக்க என்ன காரணம்?

எனினும் தொடர்ச்சியாக மக்களின் கவனயீனமான செயற்பாடுகள், சுகாதார வழிமுறைகளில் காணப்பட்ட தளர்வுகள் என்பன சடுதியாக கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்த நிலையில் மரணங்களும் அதிகரித்திருந்தது.

இந்நிலையில் வட மாகாணத்திலும் கொ​ரோனா தொற்றுகள் அதிகரித்து மரணங்களும் மிகவும் வேகமாக கூடியிருந்தன. சடலங்களை எரிப்பதற்கு வவுனியா, யாழ்ப்பாணம் மின் மயானங்களுக்கு முன்பாக சடலங்களோடு மக்கள் வரிசையாக காத்திருந்த சம்பவங்கள் காணப்பட்டதை மறந்து விட முடியாது.

கொரோனா தொற்று வடக்கில் ஏற்பட்டதில் இருந்து 36,356 பேர் தொற்றாளர்களாக காணப்பட்ட நிலையில் 753 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான சூழலில் வடமாகாணத்தில் மரண வீதம் என்பது, இலங்கையின் சனத்தொகை விகிதாசாரத்தின் அடிப்படையில் அதிகமாகப் பார்க்கப்படும் நிலையில், வடமாகாணத்திலும் வவுனியா மாவட்ட மரணவீதம் அதிகமாக காணப்படுகின்றது.

வவுனியாவைப் பொறுத்தவரையில், சுமார் ஒரு இலட்சத்து 98 ஆயிரம் பேர் சனத்தொகை பதிவில் காணப்படுகின்ற நிலையில், சனத்தொகை செறிவு வீதம் ஒரு சதுர கிலோ மீற்றரில் 150 பேர் என்ற விதத்தில் காணப்படுகின்றது.

எனினும் வவுனியா மாவட்டத்தில், ஓகஸ்ட் மாதத்தில் வவுனியா வைத்தியசாலையில் மாத்திரம் 812 பேர் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் அவர்களில் 796 பேர் கொரோனா விடுதிகளிலும் 16 பேர் அதி தீவிர சிகிச்சையிலும் சிகிச்சை பெற்றிருந்தனர். இவ்வாறான நிலையில் 46 மரணங்கள் இடம்பெற்றிருந்தன.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களில் 30 பேரும் வீடுகளில் பராமரிக்கப்பட்டு மற்றும் மரணங்களின் பின்னரான பி. சி. ஆர் பரிசோதனையில் 16 பேருமாகவே 46 மரணங்கள் பதிவாகியிருந்தன.

இதேபோன்று, செப்டெம்பர் மாதம் 26 திகதி வரையான காலத்தில் 392 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 122 பேர் மரணித்துள்ளனர். இதில் 68 பேர் வைத்தியசாலையிலும் 54 பேர் சமூகத்தில் இருந்து ஏற்பட்ட மரணங்களின் பின்னரான பரிசோதனையில் கொரனா தொற்றாளர்களாக அடையாளப் படுத்தப்பட்டவர்களாகவும் உள்ளனர்.

இது வவுனியா சனத்தொகை விகிதாசாரத்துக்கு அதிகப்படியானதாக இருப்பதுடன் இலங்கையின் மரண வீதத்தில் சனத்தொகை அடிப்படையில் முதலிடமாகவும் காணப்படுகின்றனது.

வட மாகாணத்தில் சனத்தொகை வீதம் கூடுதலாக காணப்படும் யாழ்ப்பாணத்துடன் ஒப்பிடுகையில் வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களும் மரணமும் அதிகமாக காணப்பட்ட போதிலும் யாழ். போதனா வைத்தியசாலை, வவுனியா வைத்தியசாலைகளுடன் ஒப்பிடுகையில் வவுனியா வைத்தியசாலை குறைந்தளவான வளத்துடன் அதிகளவான நோயாளர்களை பராமரித்துள்ளமை வெளிப்படையாகின்றது.

இதற்குமப்பால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களுடன் ஒப்பிடுகையில் சனத்தொகை அதிகமாக இருப்பினும் யாழ் வைத்தியசாலையின் நோயாளர்களின் அளவு குறைவாகவே காணப்படுகின்றது. இதற்கு காரணம் அங்கு மக்களுக்கு வழங்கப்பட்ட சுகாதார தெளிவூட்டல் சிறந்ததாக காணப்பட்டமையை சுட்டிக்காட்டலாம்.

எனினும் ஆளணியை பொறுத்தவரையில் யாழ் வைத்தியசாலையை பொறுத்தவரையில் வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட சுமார் 2,000 சுகாதார உத்தியோகத்தர்கள் உள்ள நிலையில் உபகரண வளமும் காணப்படுகின்றது.

இதற்குமப்பால் யாழ். வைத்தியசாலைக்கு துணையாக சாவகச்சேரி வைத்தியசாலை, மந்திகை வைத்தியசாலை, ஊர்காவற்றுறை வைத்தியசாலை என்பன கொரோனா நோயாளர்களை பராமரிக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்திருந்தன.

இதற்கு சிறந்த நிர்வாக செயற்பாடே காரணம் என கூறலாம். அனர்த்தம் ஒன்று ஏற்படும் போது, அதன் தாக்கம் ஓர் இடத்தில் குவியாமல் பரவலாக்கப்படுவதன் காரணமாக பாதிக்கப்படுபவர்களின் பராமரிப்பு பணி என்பது இலகுவாக்கப்படும் என்பதனை புரிந்துணரப்பட்டுள்ளது. அத்துடன் வைத்தியசாலைகளின் வளங்களை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுவதனை பயன்படுத்திக்கொள்வதற்கு இலகு என்பதனாலும் குறித்த செயற்றிட்டத்தினை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்திருந்தமை சிறப்பாகும்.

எனினும் குறித்த செயன்முறையை வவுனியாவில் முன்னெடுக்க சுகாதார உயர் தரப்பு பின்னடித்தமையினால் கொரோனா தொற்றாளர்கள் ஒரே இடத்திலேயே குவிய வேண்டிய நிலை ஏற்பட்டது.

வவுனியாவை பொறுத்தவரையில் செட்டிகுளம் வைத்தியசாலை, நெடுங்கேணி வைத்தியசாலைகளை தற்காலிக கொரனா வைத்தியசாலைகளாக மாற்றுவதற்கான ஏற்பாட்டை முன்னெடுத்திருந்தால் வவுனியா வைத்தியசாலையில் உள்ள சுகாதார உத்தியோகத்தர்கள் மாத்திரம் பெரும் சுமையை சுமந்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருந்காது என்பது யதார்த்தம்.

இதற்குமப்பால் வவுனியாவில் மரண எண்ணிக்கை அதிகரிக்க காரணம் தொடர்பில் ஆராயத்தலைப்பட வேண்டிய தேவை சுகாதார தரப்பிற்கு உள்ளது. சுகாதார தரப்பினருக்கு இடையில் காணப்பட்ட உள்ளக கருத்து முரண்பாடுகள், மக்களுக்கு போதுமான தெளிவுறுத்தல்களை வழங்க சுகாதார தரப்பின் உயர் அதிகாரிகள் முன்வராமையும் இதற்கு காரணமாக சுட்டிக்காட்டலாம்.

வட மாகாணத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் தமது மாவட்டத்தின் கொரோனா நிலைப்பாடுகளை மக்களுக்கு தெளிவுபடுத்தியும் மக்களுக்கு தேவையான சுகாதார வழிமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஊடகங்கள் மூலமாக வெளிப்படுத்தியிருந்த நிலையில் வவுனியாவில் அவ்வாறான நிலைமை இடம்பெற்றிருக்கிவில்லை.

இதற்குமப்பால் கொரோனா தொடர்பான நடைமுறைகளை பதவி அந்தஸ்து என்பவற்றிற்கு அப்பால் பாரபட்சமின்றி செயற்படுத்தியிருந்தால் கொரே​ைனா மரணங்களை வவுனியா மாவட்டத்தில் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்பதுடன் தொற்றாளர்களையும் குறைத்திருக்கலாம்.

எனினும் வவுனியாவில் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என கடும் பிரயத்தனத்தில் செயற்பட்ட கணிசமான சுகாதார தரப்பினரையும் வவுனியா சமூகம் மறந்து விட முடியாது.

எதுவாகினும் கொரோனா தொற்றில் இருந்து வவுனியா மாவட்டத்தினை பாதுகாத்து மரணங்களில் மனித உயிர்களை இவ் உலகில் வாழ வைக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவும் அதற்கு சுகாதார தரப்பினர் ஆதரவு வழங்கவும் முன்வரவேண்டும் என்பதே காலத்தின் தேவை.