திரு காண்டீபன் அவர்கள் தொடர்பில் வரதராஜ பெருமாள் அவர்களின் சிறியதோர் மீள்பார்வை

யாழ்ப்பாணக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காண்டீபன் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் தநதையாருடன் யாழ்ப்பாணம் வந்து விடுவார். தமிழரசுக் கட்சித் தலைவர்களின் கூட்டம் அந்தக் காரியாலயத்தில் நடக்க, அங்கோ அல்லது அதற்குப் பக்கத்தில் இருந்த ஜனதா கபேயிலோ எங்கள் சந்திப்பு நடக்கும்.

அது எங்கள் அரசியல் செயற்பாடுகளின் தொடக்க காலம். சில வேளைகளில் அவரை யாழ்ப்பாணக் கல்லூரிக்குச் சென்று சந்தித்ததுண்டு.1973 மே மாதம் சிறைகளில் அடைக்கப் பட்டிருந்த தமிழ் அரசியற் கைதிகளை விடுதலை செய்யும்படி கடையடைப்பு மற்றும் பாடசாலை பகிஷ்கரிப்புக்கான பிரச்சாரங்கள் மேற்கொண்டோம்.

அப்போது காண்டீபன் தந்தைக்கு தெரியாமல் தனது பள்ளிக்கூடத்தை விட்டு எங்களோடு பல இடங்களுக்கும் சென்று பணியாற்றினார். இங்கு நாங்கள் என்று நான் கூறுவது. புஸ்பராஜா, பத்மநாபா, பிரான்சிஸ் ஆகியோரை இணைத்து. இன்று அந்த மூவரும் இந்தப் புவி மண்ணில் இல்லை.1973 மே மாதம் 22ந் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணி யாழ்ப்பாணத்தின் அனைத்து தொகுதிகளிலும் உதயசூரியன் கொடியேற்றி ஆங்காங்கே சிறு பொதுக் கூடங்களை நடத்தி அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பது என தீர்மானித்தது.

நாங்களும் அனைத்து இடங்களுக்கும் சென்றோம். காண்டீபனும் பங்குபற்றினார். அன்று மல்லாகத்தில் அந்த நிகழ்ச்சி நடைபெற்ற போது திடீரென காண்டீபன் அங்கு அரச செயலகம் ஒன்றுக்குள் புகுந்து அங்கு ஏற்றப் பட்டிருந்த இலங்கை தேசியக் கொடியை இறக்கி கிழித்து எரித்து விட்டார். இதனை அவரது தந்தையார் ஏற்றுக் கொள்ளவில்லை.

நிகழ்ச்சிகள் முடிந்து தமிழரசுக் கட்சியின் தலைமையகம் வந்ததும் மகனைக் கண்டித்தார். அவர் காண்டீபனிடம் நீர் படிப்பைக் குழப்பிக் கொண்டிருக்கிறீர், படுப்பை முடித்து விட்டு நீர் விரும்பியபடி செயற்படும் என கூறினார். அப்போது நாங்களும் அங்கே இருந்தோம். அந்தக் காட்சி இன்னமும் என் கண் முன்னால் நிற்கிறது.

காண்டீபன் தந்தையிடம் காமராஜர் படித்தவரா! கருணாநிதி என்ன படித்தார்! என எதிர்க் கேள்வி எழுப்பினார். அதனாலோ என்னவோ காண்டீபனை அவரது தந்தையார் படிப்பதற்காக தமிழகம் அனுப்பினார். ஆனால் காண்டீபனோ அங்கும் அதிதீவிர அரசியற் செயல்களில் ஈடுபட்டார். சுமார் 50 ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனால் நினைவுகள் இன்னமும் கல்லில் எழுதப் பட்டவைகளாக உள்ளன.

பின்னர் ஒரு நாள் 1984ல் அவரை லண்டனில் ஒரு வீதியில் சந்தித்தேன். எங்கே போய் விட்டு வருகிறாய் என நான் கேட்ட போது தனது காரின் டிக்கியைத் திறந்து காட்டினார். அங்கே இலங்கை அரசுக்கு எதிரான சுலோகங்கள் எழுதப்பட்ட அட்டைகள் கிடந்தன. அதற்குப் பின்னர் 1989ல் யாழ்ப்பாணத்தில் அவரது தந்தையாருக்கான இறுதிச் சடங்கு வேளை கண்டேன்.நல்ல நண்பன். திடீர் ஆத்திரக்காரன். ஆனால் இனிமையானவர். சென்று வா நண்பா. மீண்டும் ஒரு நாள் சந்திப்போம்.