தோழர் எம்.ஜி.பசீர் எம்மைவிட்டுப் பிரிந்தார்!

அவருக்கு யாழ் முஸ்லீம் வட்டாரத்தில் நல்லதொரு வீடும், யாழ் நவீன சந்தையில் புடவைக்கடை ஒன்றும் இருந்த போதிலும் அவை எல்லாவற்iயும் புலிகளிடம் தாரைவார்த்துவிட்டு உடுத்த உடையுடன் மட்டும் வெறுங்கையுடன் தான் வாழ்ந்த மண்ணை விட்டு வெளியேறி வந்தவர்.

தோழர் பசீர் தனது இளமைக் காலத்திலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டவர். தோழர் மு.கார்த்திகேசன் 1945இல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையில் ஆரம்பத்திலேயே சேர்ந்து கொண்ட முதல் முஸ்லீம் தோழரான எம்.எஸ். ஸேக் அப்துல் காதர் அவர்களால் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு அழைத்து வரப்பட்ட தோழர் பசீர், பின்னர் தோழர் கார்த்திகேசனால் மார்க்சிய அறிவு ஊட்டப்பட்டவர். (இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தால் வெளியிடப்பட்ட “வடபுலத்து இடதுசாரி இயக்க முன்னோடிகள்” என்ற நூலில் தனது ஆசான் தோழர் காதர் பற்றி தோழர் பசீர் எழுதிய கட்டுரையொன்றை சில வாரங்களுக்கு முன்னர் எனது முகதூலில் மறுபதிவு செய்திருந்தது நண்பர்களுக்கு நினவிருக்கலாம்)

ஆரம்ப காலங்களில் யாழ் முஸ்லீம் வட்டார மக்களின் நலன்களுக்காக சாதாரண மனிதனாக நின்று பணியாற்றிய தோழர் பசீர், பின்னர் யாழ் மாநகர சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன், அல்பிரட் துரையப்பா மாநகர முதல்வராக இருந்த காலத்தில் துணை முதல்வராகவும் சில வருடங்கள் பணியாற்றினார். அந்தக் காலகட்டத்தில் துரையப்பாவுடன் இணைந்து முஸ்லீம் வட்டார மக்களுக்காக மட்டுமின்றி, முழு யாழ் மாநகர மக்களுக்காகவும் பாகுபாடின்றி சேவையாற்றினார்.

யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லீம் மக்கள் பிற்போக்கு தமிழ் இனவாதத்துடன் அள்ளுப்பட்டுப் போகாது, எப்பொழுதும் முற்போக்கு சக்திகளின் பக்கம் நின்று, 1956 தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட தோழர் கார்த்திகேசனுக்கு வாக்களிக்கவும், பின்னர் நடந்த தேர்தல்களில் அல்பிரட் துரையப்பாவுக்கு வாக்களிக்கவும் வைத்த பெருமைக்குரிய முஸ்லீம் தோழர்களில் பசீரும் ஒருவர்.

இடம் பெயர்நது புத்தளத்தில் வாழ்ந்த காலத்திலும் அங்கு அகதி வாழ்க்கை வாழ்ந்த யாழ் முஸ்லீம் மக்களுக்காகவும், ஏனைய புத்தளம் வாழ் மக்களுக்காகவும், அவர்தம் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் தோழர் பசீர் அயராது சேவையாற்றினார்.

ஒருமுறை கொழும்பில் தோழர்கள் நீர்வை பொன்னையன், எம்.குமாரசாமி, நான் உட்பட மூவரையும் தோழர் பசீர் சந்தித்த போது எங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘எப்பொழுது யாழ்ப்பாணம் வந்து ஒன்றாய் வாழப்போகிறோம்” எனச் சொல்லி அவர் கண்கலங்கியது எனது மனதில் இன்றும் பசுமரத்தாணியாகப் பதிந்து உள்ளது.

இத்தகைய ஒரு உன்னதமான தோழரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், தோழருக்கு செங்கொடியைத் தாழ்த்தி அஞ்சலி செய்கின்றோம்.

(யாழ் மணியம்)