பறவை கூடுகளுடன் பாடசாலைக்கு வந்த மாணவர்கள்

பறவைக் கூடு கொண்டு வரச் சொல்லி சுமார் அறுபது மாணவர்களுக்கு வட்ஸ்அப் மூலம் ஆசிரியர் செய்தி அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து, சுமார் நாற்பது மாணவர்கள் பறவைக் கூடுகளுடன் பாடசாலைக்கு வந்துள்ளனர்.

பறவைக் கூட்டுடன் குழந்தைகளை வகுப்பறைக்கு அழைத்து வந்த பெற்றோர்கள் வகுப்பறையில் ஏராளமான பறவைக் கூடுகளைக் கண்டு ஆசிரியரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இயற்கைச் சூழலில் பறவைக் கூடுகளை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதற்கு பதிலாக இவ்வாறு பறவைக் கூடுகளை அழிக்கக் கற்றுக் கொடுப்பது குறித்து பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பிரதேச செயலாளருக்கு பெற்றோர்கள் அறிவித்துள்ளனர். தம்புத்தேகம கல்வி வலய ஆரம்பக் கல்வி உதவிப் பணிப்பாளர் உபாலிசேன இது தொடர்பில் ஆராயவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 31ஆவது பிரிவின்படி பறவைக் கூடுகளை உடைப்பது, அகற்றுவது மற்றும் அழிப்பது சட்டப்படி குற்றமாகும் என சிரேஷ்ட சுற்றாடல் சட்டத்தரணி கலாநிதி ஜகத் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அந்தச் சட்டத்தின்படி பறவைக் கூண்டுகளும் பாதுகாக்கப்பட வேண்டியலை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.