பற்றி எரியும் பாகிஸ்தான்; இணைய சேவைகள் முடக்கம்

தெஹ்ரீன்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் கடந்தாண்டு தோல்வியடைந்து ஆட்சியை இழந்தார்.

அதன்பிறகு, பயங்கரவாதம், மதநிந்தனை, கொலை, வன்முறையில் ஈடுபட்டமை, வன்முறையைத் தூண்டியமை  உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக அவர் மீது சுமார் 140-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.

அந்த வழக்குகளில் அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பல கைது ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

எனினும் இம்ரானின் இல்லத்தைச் சுற்றிலும் அவரது ஆதரவாளா்கள் திரண்டு கலவரத்தில் ஈடுபட்டு வந்ததால் அவரை கைது செய்ய முடியாத நிலை நீடித்து வந்தது.

இந்த நிலையில், இஸ்லாமாத் உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இரு ஊழல் வழக்குகளில் ஜாமீன் பெறுவதற்காக இம்ரான் கான் நீதிமன்ற வளாகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தார்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அவரை தேசிய ஊழல் தடுப்புப் பிரிவினா் அந்த வளாகத்தில் கைது செய்தனா்.

அவா்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் துணை ராணுவப் படையான ரேஞ்சா்களும் இம்ரானை சுற்றிவளைத்து கவச வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

இம்ரானின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத், கராச்சி, பெஷாவர், லாகூர் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர்.

வீதிகளில் சென்ற காவல்துறையின் வாகனங்களுக்கு தீ வைத்ததுடன், இராணுவ கமெண்டர் இல்லத்தை சூறையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் அசாதாரண சூழல் நிலவி வருவதால் பல்வேறு மாகாணங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

மேலும், முகநூல், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் பயன்படுத்தாதவாறு முடக்கியுள்ளனர். மேலும், பிரித்தானியா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இம்ரானின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் தூதரக அலுவலகங்களுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.