பாஜக உயர்மட்ட தலைவர்களுக்கு ரூ.1,800 கோடி வழங்கியதாக எடியூரப்பா மீது காங்கிரஸ் பரபரப்பு புகார்: மறுக்கும் கர்நாடக முன்னாள் முதல்வர்

கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா மீது புதிதாக அமைக்கப்பட்ட, லோக்பால் அமைப்பின் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாஜகவில் உயர்மட்டத் தலைவர்கள் பிரதமர் முதல் அனைத்து தலைவர்களையும் விசாரணைக்கு உட்படுத்த முகாந்திரம் இருக்கிறது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள லோக்பால் அமைப்பு விசாரிக்க தகுதியான வழக்கு. இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமா என்று வருமானவரித்துறை நிதிஅமைச்சர் அருண்ஜேட்லியிடம் கேட்டபின்பும் ஒன்றும் நடக்கவில்லை.

நாங்கள் பாஜக போல், சேற்றைவாரி வீசுவதற்காக இங்கு வரவில்லை. மக்களுக்கு சில உண்மைகளைச் சொல்கிறோம். பாஜக தலைவர் எடியூரப்பவுக்கும், சில பாஜகவுக்கும் நடந்த உரையாடல்களையும் நான் படிக்கிறேன்(அதை படித்துக்காட்டினார்). வருமானவரித்துறை கைப்பற்றிய 2017-ம் ஆண்டு டைரியில் எடியூரப்பாவின் கையொப்பம் இருக்கிறது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததாக இருந்தால், மோடியையும் மற்ற பாஜக தலைவர்களையும் ஏன் விசாரிக்கக்கூடாது” எனத் தெரிவித்தார்.

எடியூப்பா மறுப்பு

எடியூரப்பா விளக்கம் அளித்த காட்சி : படம் ஏஎன்ஐ

இந்நிலையில், காங்கிரஸ் கூறிய இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மறுத்துள்ளார். பெங்களூரில் எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களுக்கு ரூ.1800 கோடி கொடுத்ததாக காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டு மிகவும் மோசமானது, தவறான நோக்கத்துடன் கூறப்பட்டது. இந்த வழக்கு குறித்து ஏற்கனவே வருமானவரித்துறை விசாரணை நடத்தி, அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்று தெரிவித்துள்ளது, இது ஏற்கனவே முடிக்கப்பட்ட விவகாரம்.

மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில், மனவிரக்தியில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கூறுகிறது. வருமானவரித் துறை நான் கைப்பட எழுதிய கடிதங்கள், காகிதங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து அனைத்தும் போலியானவை என்று கூறிவிட்டன. திட்டமிட்டு இந்த குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்துகிறார்கள்.

மக்களிடம் பேசுவதற்கு எந்தவிதமான வளர்ச்சி சார்ந்த விஷயம் காங்கிரஸிடம் இல்லை. பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் அதிகரித்து வரும் புகழையும், பெயரையும் பொறுக்க முடியாமல் இதுபோன்ற செயலில் காங்கிரஸார் ஈடுபடுகிறார்கள் ” எனத் தெரிவித்தார்.