பாரிஸின் புகழ்பெற்ற 850 ஆண்டு பழமையான நாட்ரே டாம் தேவாலயத்தில் பயங்கர தீவிபத்து

தீயணைப்பு வீரர்களின் தீவிரமான முயற்சியால், தேவாலயத்தின் முக்கியப் பகுதிகள் சேதமடையாமல் காப்பாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தள்ளனர். குறிப்பாக கற்சிலைகள் அமைந்திருக்கும் பகுதி, மணிகள் அமைக்கப்பட்டு இருக்கும் பகுதி ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

தவறவிடாதீர்

ருவாண்டாவில் நடந்த இனப் படுகொலை
உலகப் பாரம்பரியம்

பாரீஸ் நகரில் 850 ஆண்டு பழமையான நாட்ரே-டாம் கத்தீட்ரல் தேவாலாயம் அமைந்துள்ளது. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாட்ரே-டாம் தேவாலயம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக திகழ்கிறது. பிரான்ஸில் உள்ள ரோமன் கத்தோலிக்க மக்கள் மட்டுமின்றி உலகம்முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் ஆண்டு தோறும் கோடிக்கணக்கில் மக்கள் இந்த தேவாலயத்துக்கு வருகை தருகின்றனர்.

1163-ல் அடிக்கல்

கடந்த 1163 ஆண்டில் தேவாலாயம் அடிக்கல் நாட்டப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. 13-ம் நூற்றாண்டில் இந்த தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 1800களில் பிரான்ஸ் பேரரசரர் நெப்போலியன் போனாபர்டே இந்த தேவாலயத்தில்தான் மூடிசூட்டிக்கொண்டார் என்று வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸின் கோதிக் கலாச்சார கட்டிடக் கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இந்த தேவாலயம் அமைந்துள்ளது. தேவாலாயம் முழுவதும் மரத்தால், பல்வேறு வேலைப்பாடுகளுடன், அழகிய ஓவியங்களுடனும், கண்ணாடி ஓவியங்கள், மரச்சிற்பங்கள் ஆகியவற்றால் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.

தீவிபத்து

தற்போது இந்த நாட்ரே-டாம் தேவாலயத்தில் புனரமைப்பு பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில், உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை மாலை 6.30 மணி அளவில் திடீரென தேவாலாயத்தில் தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்து ஏற்பட்டவுடன் தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கு பரவியது

உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். மேலும், அருகில் இருக்கும் தேவாலயங்களும் தொடர்ந்து மணிகளை ஒலிக்கவிட்டு உதவிக்கு வரக் கோரினார்கள். இந்த தீவிபத்தில தேவாலயத்தின் மரத்திலான முக்கிய கூரை எரிந்தது.

400-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அரைமணிநேரத்துக்குள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு பணிகள் துரிதமாக நடந்ததால், தேவாலயத்தின் முக்கிய பகுதிகளான மணிஅமைந்திருக்கும் பகுதி, கற்சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதிகள் சேமின்றி மீட்கப்பட்டன.

உலக மக்களிடம் உதவி

இது குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் நிருபர்களிடம் கூறுகையில், ” மிகமோசமாக ஏற்பட வேண்டிய சேதம் தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மிகச்சிறப்பாக பணிபுரிந்து தீயை அணைத்துள்ளார்கள். தற்போது கட்டிடங்களை குளிர்விக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கத்தீட்ரல் தேவாலயத்தை மீண்டும் புனரமைத்து, மறுகட்டமைப்பு செய்யப்படும். இதற்கான நிதியை திரட்டும் பணியில் பிரான்ஸ் அரசு ஈடுபடும். நாட்ரே-டாம் தேவாலம் நமது பாரம்பரியம், கலாச்சாரம். இதை காக்க ஆன்-லைன் மூலம் பிரான்ஸ் அரசு உதவி கோரும்.

உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் இருந்து தேவாலயத்தை புனரமைக்க நிதி கோரப்படும். அனைவரும் இணைந்து இந்த தேவாலயத்தை மறுகட்டமைப்பு செய்வோம் ” எனத் தெரிவித்தார்.

பாரீஸ் நகர் தீயணைப்பு தடுப்புத்துறையின் தலைவர் ஜீன் கிளாட் கேலட் கூறுகையில், ” தேவாலயத்தின் முக்கியப் பகுதி முற்றிலும் சேதமடைவதில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டது. தீ கட்டுக்குள் வந்து, முற்றிலும் அணைக்கப்பட்டுவிட்டது. தற்போது கட்டிங்களை குளிர்வித்து வருகிறோம். தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை விசாரித்து வருகிறோம் ” எனத் தெரிவித்தார்.

தீவிபத்து ஏற்பட்டபோது தீ எரிந்த காட்சி : படம் உதவி ஏபி

அதிர்ச்சி, வேதனை

பாரீஸ் நகர மக்கள் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களின் முக்கிய தேவாலயத்தில் தீவிபத்து ஏற்பட்டவுடன் மக்கள் சோகத்தில் மூழ்கினார்கள்.

இந்த தீவிபத்து குறித்து அறிந்து வாடிகன் தலைமை அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளது. கிறிஸ்துவமக்களின் அடையாளமாக போற்றப்படும் நாட்ரே டாம் தேவாலயத்தில் தீவிபத்து நடந்தது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல், இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் நாட்டே-டாம் தேவாலாயத்தில் நடந்த தீவிபத்துக்கு ஆழ்ந்த வருத்தங்களையும், வேதனையையும் பகிர்ந்துள்ளனர்.