‘பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யவும்’

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வியாபார நிர்வாக மானி முகாமைத்துவ பட்டப் பின்படிப்பு கற்கை நெறி அங்குராப்பண வைபவம், பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நேற்று (02) நடைபெற்றது.

இந்நிகழ்வின் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய உபவேந்தர், “தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பை தொடர்பவர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக திகழ வேண்டும். இக்கற்கை நெறியினூடாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

“அந்த வகையில், இக் கற்கை நெறியை பயில்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நீங்கள், இதன்மூலம் கூடிய வருமானத்தை பெறுவதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்ய முடியும்.

கல்வியாளர் ஒருவர் தனது தொழிலுடன் மற்றும் நின்று விடாது மேற்படிப்புகளை மேற்கொள்வதன் மூலம் உலகளாவிய ரீதியில் பெரும் செல்வாக்கினை பெறுவதோடு உயர்ந்த தொழில் வாய்ப்புகளையும் பெற முடியும்.

“இலங்கையின் உயர்கல்வி வளர்ச்சிக்கு தனது பங்களிப்பை வழங்கி வரும் இப்பல்கலைக்கழகம், சர்வதேச மட்டத்தில் ஒரு முன்மாதிரியான பல்கலைக்கழகமாக மாறி, இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு தனது பங்களிப்பை வழங்கி வருகின்றது” என்றார்.