மக்கள் ஊரடங்கு: குழந்தைகளின் திறமையைப் பதிவு செய்யும் போட்டி: இயக்குநர் சேரன் அறிவிப்பு

இந்தியாவில் கரோனா வைரஸ் 296 பேரைப் பாதித்துள்ளது. பலரும் தங்களைச் சோதனைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளனர். இதனிடையே, நாளை (மார்ச் 22) ஞாயிறன்று மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது, காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம், பஸ்கள், ரயில்கள் ஓடாது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதனிடையே மக்கள் ஊரடங்கு அன்று குழந்தைகளின் திறமையை வீடியோவாக பதிவு செய்யும் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார் இயக்குநர் சேரன். இது தொடர்பாக சேரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”உங்கள் குழந்தைகளின் தனித்திறமையை அறிய ஒரு வாய்ப்பு. கரோனா பயம் உலகை அச்சுறுத்தும் இவ்வேளையில் நமது இந்தியாவிலும் அது பரவ ஆரம்பித்திருக்கும் நிலையில் நாளை ஞாயிறு ஒரு நாள் முழுவதும் தன்னேற்பு ஊரடங்கு உத்தரவைக் கொண்டுவந்திருக்கிறது இந்திய அரசு..

நமது நலன் கருதி அரசு எடுக்கும் இம்முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும். காலில் சக்கரம் கட்டிக்கொண்டு தினமும் 18 மணிநேரம் ஓடிய நாம் எப்படி ஒரு நாள் முழுக்க கழிக்கப் போகிறோம் என அவரவர் யோசிக்கும் இவ்வேளையில், பெற்றோர்களே தங்கள் குழந்தைகளின் திறமையை வெளிக்கொணரும் ஒரு வாய்ப்பாக இதை மாற்றலாம் என எங்களுக்கு தோன்றியது.

ஆம். இந்த ஒரு நாள் முழுவதும் அப்பா இயக்குநர் ,அம்மா கேமராமேன், குழந்தைகள் நடிகர் நடிகைகள். எடுங்க உங்க செல்போனை. உங்க வீட்டையே ஸ்டுடியோவா மாற்றுங்க. உங்கள் குழந்தைகளுக்குள்ள இருக்க திறமைகளைப் பதிவு பண்ணுங்க. அது எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். அளவுகோல் இல்லை. ஆடுறவங்கள ஆட வைக்கலாம். பாடுறவங்கள பாட வைக்கலாம்.

ஓவியர்கள் வரையலாம். கவிஞர்கள் எழுதலாம். விஞ்ஞானி ஆகலாம் கணித மேதை ஆகலாம். சுத்தம் செய்ய விரும்புபவர்கள் சுத்தம் செய்யலாம். ஆடை தயாரிக்கலாம், சமைத்துக்காட்டலாம். எதில் தங்கள் குழந்தைகள் சிறப்பாக இருக்கிறார்கள் என நீங்களே மூன்று நிமிடங்களுக்கு மிகாமல் பதிவு செய்து வாட்ஸ் அப்பில் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

இது உங்களுக்கும், உங்கள் குழந்தைகளை யாராக உருவாக்க வேண்டும் என அறிந்துகொள்ள அறிய வாய்ப்பு. 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இதில் கலந்துகொள்ளலாம். வீடியோ, அதில் கலந்துகொள்ளும் குழந்தைகளின் பெயர்,ஊர், வயது, பள்ளி மற்றும் பெற்றோர்களின் விவரத்துடன் இணைத்து அனுப்பவேண்டும். உங்களின் வீடியோக்களை இயக்குநர் சேரன் தேர்வு செய்வார்கள்.

சிறந்த 10 வீடியோக்களுக்கு இயக்குநர் அவர்களால் நேரில் சன்மானமும் பாராட்டும் உண்டு. மற்ற கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் இயக்குநர் அவர்களின் கையொப்பமிட்ட சான்றிதழும் பரிசும் அனுப்பிவைக்கப்படும்.

தொடர்புக்கான எண்:9791074404, தொடர்புக்கான மின்னஞ்சல் முகவரிகள்: wallposter2020@gmail.com, dreamsounds.social@gmail.com”

இவ்வாறு சேரன் தெரிவித்துள்ளார்.