ரஷ்யாவின் அறிவிப்பால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையில் முரண்பாடு

குறிப்பாக ரஷ்யாவின் எரிவாயு மற்றும் மசகு எண்ணெய் இறக்குமதிக்கு தடைவிதிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நகர்வுக்கு ஹங்கேரி நேரடியான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவின் எரிவாயு மற்றும் மசகு எண்ணெய் இறக்குமதிக்கு தடைவிதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய எரிசக்தி அமைச்சர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறிப்பாக ரஷ்யாவிற்கு எதிரான ஆறாம் கட்ட தடைகளின் கீழ் குறித்த இரண்டு சுவட்டு எரிபொருட்களுக்கும் தடைவிதிப்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

எனினும் ரஷ்யாவின் சுவட்டு எரிபொருள் இறக்குமதிக்கான தடையை தமது நாடு கடுமையான எதிர்க்கும் என கூறியுள்ள ஹங்கேரி, எனினும் இது ரஷ்யாவிற்கு ஆதரவு வழங்குவதாக அர்த்தப்படாது என கூறியுள்ளது.

ரஷ்யாவின் சுவட்டு எரிபொருள் இறக்குமதிக்கு தடைவிதிக்கும் விடயத்தில் பொதுவான இணக்கப்பாட்டை எட்டும் நோக்குடன் ஐரோப்பிய ஒன்றிய எரிசக்தி அமைச்சர்கள் இவ்வாரம் தொடர்ச்சியான பல சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் ரஷ்யாவின் விநியோகத்திற்கு தடைவிதிக்கும் விடயத்தில் 27 உறுப்பு நாடுகளை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏகமனதாக நிலைப்பாட்டை எட்ட முடியவில்லை என ஜேர்மனியின் பொருளாதார அமைச்சர் ரொபேர்ட் ஹாபெக் கூறியுள்ளார்.

இறக்குமதிக்கு தடைவிதிக்கும் தீர்மானத்தை எதிர்க்கும் நாடுகளின் நிலைப்பாடுகளையும் மதிக்க வேண்டும் என கூறியுள்ள அவர், தமது நாடும் ரஷ்யாவின் எரிவாயுவிற்கு முழுமையாக தடைவிதிப்பதற்கு தயாராகவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எண்ணெய் தடையை தாங்கக்கூடிய ஒரு சூழ்நிலையை நாடு அடைந்துவிட்டது என்ற போதிலும் அதனால் எந்தவொரு விளைவுகளும் ஏற்படாது என கூற முடியாது எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்யை 35 வீதத்தில் இருந்து 25 வீதமாக தமது நாடு குறைத்துள்ளதாகவும் ஜேர்மனியின் பொருளாதார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

தமது நாட்டிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் எரிவாயு மற்றும் மசகு எண்ணெய்க்கான கொடுப்பனவுகளை ரூபிளில் செலுத்த வேண்டும் என ரஷ்யாவின் அரச பன்னாட்டு எரிசக்தி கூட்டுத்தாபனமான கஸ்ப்றம் அறிவித்துள்ளது.

எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள எந்தவொரு நிறுவனமும் ரூபிளில் பணத்தை செலுத்தினால், அது ஐரோப்பிய ஒன்றிய தடையை மீறும் நடவடிக்கை என ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு கூறியுள்ளது.