வீதி வேண்டாமென வேண்டுகோள்

ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு எதிர்ப்பு மகஜர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

சௌபாக்ய தக்ம திட்டத்தின்கீழ் 1 லட்சம் கிலோ மீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தின்கீழ் காரைதீவு எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளியிலிருந்து வயல் பிரதேசத்தினூடாக கல்முனை வரையுள்ள 5 கிலோமீற்றர் நீள அணைக்கட்டு வீதியை கார்பெட் வீதியாக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காரைதீவு மேற்குப்பிரதேச வயல் காணிகளுக்குத் தேவையான தண்ணீர்பெறும் வசதிகொண்ட இந்நன்செய் நிலப்பிரதேசம், கார்பெட் வீதிக்காக பயன்படுத்தப்பட்டால், எதிர்காலத்தில் விவசாயிகள் பாதிப்படைவதோடு ஊருணியில் வெள்ளம் தேங்கி அபாயத்தை தோற்றுவிக்கும் துரதிஸ்டநிலை உருவாகும் என்று கூறப்படுகிறது.

குறித்த வயல் சார்ந்த நன்செய் நிலத்தை காரைதீவு பிரதேசசெயலகம் காணி மீட்பு திணைக்களத்திற்கு பிரகடனப்படுத்த சிபாரிசு செய்திருந்தது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பாரிய திட்டத்தின்கீழ் இவ்வீதி, மக்களது அபிப்பிராயம் கோரப்படாது, காரைதீவு பிரதேச செயலாளர் மற்றும் தவிசாளரிடம் எந்த அனுமதியையோ, கலந்துரையாடலையோ செய்யாமல் விவசாயிகளுக்கு தீங்கிழைக்கக்கூடிய இவ்வீதியை அமைப்பதை தாம் எதிர்ப்பதாக பொதுநல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

குறித்த காணி அமைந்துள்ள நீர்ப்பாசனத் திணைக்கள பிராந்திய பொறியியலாளரிடமும் எந்த அனுமதியையும் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தவருடம் ஜனவரியில் இத்திட்டம் கல்முனையிலிருந்து ஆரம்பிக்கப்படவிருந்தபோது, எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது