“இறுதிப்போரும் நானும்”

(Suren Karththikesu)

இந்நாட்களில் முள்ளிவாய்க்கால்

ஐ.நா வரப்போகிறதாம் என்றும் கதைக்கிறார்கள். செஞ்சிலுவைச்சங்க கப்பல், நிவாரண கப்பல் என இரண்டும் முள்ளிவாய்க்கால் கடற்பகுதிற்கு வந்து போனதால் மக்களும் ஐ.நா காப்பாற்ற வரும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். மறுபக்கம், இயக்கம் ஒருபக்கத்தால உள்ள இறங்கி அடிக்கப்போகுதாம். இப்படி கதைக்கிறார்கள். கொல்லப்படும் மக்கள் அதிகரித்துக்கொண்டே சென்றது. பலர் இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்று விட்டார்கள். விலையுயர்ந்த பொருட்களுக்கு பெறுமதியே இல்லாமல் போய்விட்டது. தங்கத்தினை விட ஒரு கிலோ அரிசியின் விலை அதிகம். ஒரு கிலோ செத்தல் மிளகாய் ஒன்பதாயிரம் ரூபாயினை தாண்டிச்சென்றது. சீனி ஐயாயிரம். நான்கு தேங்காயை கொடுத்தால் ஒரு ஆட்டோ வேண்டமுடியும். ஒரு உழவு இயந்திரத்தின் விலையும் அப்படித்தான். சில்லறை காசுகள் பாவனையில் இல்லாமல் போய்விட்டது. வெற்றிலைக்கு பதிலாக நாயுண்ணி இலைகள், பாக்குக்கு பதிலாக நாவல் மரத்து பட்டைகள், பசிக்கொடுமையில் அடம்பன் கொடியினையும் விடவில்லை. பனை வடலியின் குருத்தும் எங்களுக்கு பசியினை போக்கியது. இன்னும் எத்தனை நாட்கள் சண்டை தொடரப்போகின்றது என்றும் தெரியவில்லை. நானும் மெல்ல மெல்ல செத்துக்கொண்டிருந்தேன்.