எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் — பகுதி 3

(அ. வரதராஜா பெருமாள்)

இலங்கையின் தேசிய பொருளாதார வளர்ச்சி அல்லது தேக்க நிலையைப் பற்றிய ஆய்வுகளும், நாட்டினுடைய சமூக பொருளாதார கட்டமைப்பு மற்றும் அது கொண்டிருக்கும் உற்பத்தி உறவுகள் பற்றிய ஆய்வுகளும், சர்வதேச பொருளாதார கட்டமைப்பில் இலங்கையின் அரசியல் பொருளாதாரம் இணைந்திருக்கும் தன்மைகள் பற்றிய ஆய்வுகளும் பெரும்பாலும் தேசிய பொருளாதாரம் பற்றிய பருமட்டான அறிவியல் ஆய்வுகளாகவே அமையும். ஆனால் மொத்த தேசிய பொருளாதாரத்தில் தேச மக்களின் பொருளாதாரம் பற்றிய ஆய்வுகளின் மூலமே தேச மக்களின் உண்மையான பொருளாதார வாழ்வின் நிலைமைகளையும் அரசுக்கும் பரந்தபட்ட குடிமக்களின் நலன்களுக்கும் இடையேயென அரசியல் பொரளாதார நெருக்கடிகளும் மற்றும் முரண்பாடுகளும் வெளிப்படும். இவை தொடர்பான விரிவான விபரிப்புகளையோ விவாதங்களையோ இக்கட்டுரையில் மேற்கொள்வது இங்கு நோக்கமல்ல. மாறாக, சுருக்கமாக இலங்கைவாழ் மக்களின் சம்பளம் மற்றும் கூலி வழியிலான வருமானங்களுக்கும் அதைக் கொண்டு அவர்கள் பெறுகின்ற பொருளாதார வாழ்வின் நிலைமைகளையும் அடையாளம் காட்டுவதே இக்கட்டுரைப் பகுதியின் நோக்கமாகும்.