அமெரிக்கா மட்டுமல்ல அகில உலகமே அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறது.

எவன் அமெரிக்க சனாதிபதியாகத் தெரிவாகக்கூடாதென எதிர்பார்த்தார்களோ அவனே தெரிவாகியிருக்கிறான். எவரும் கனவில்கூடக் கண்டிராத பேராதரவுடன்.
ஹிலாரி என்ற அமெரிக்க சூர்ப்பனகைதான் முடிசூடுவாளென எதிர்பார்த்த எல்லார் வாயிலும் மண்ணை அள்ளிப்போட்டு வாயையும் இறுக்கமாய் மூடிவிட்டான் திரம்ப். அரசியல் ஞானசூனியமான இவனால் எப்படி இந்த இமாலய வெற்றியைச் சம்பாதிக்க முடிந்தது?
ஹிலாரி அமெரிக்கர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதிலும் பார்க்கத் தனது சுயசரிதத்தின் பக்கங்களைப் புரட்டுவதிலேயே அதிகம் அக்கறை காட்டிக்கொண்டாள்.


ஆனால் அமெரிக்கர்கள் கேட்ட சுபிட்சமும் பாதுகாப்பும் தன் ஆட்சியில்தான் நடக்கும் என்று திரம்ப் அடித்து முழங்கினான். இதை அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு நம்பினார்கள். அது மட்டுமல்ல அவன் காமுகனாகவோ துவேசியாகவோ அரசியல் அறிவற்றவனாகவோ இருந்தால் We don’t care! என்று சொல்லிவிட்டார்கள்.
ஹிலாரி இட்டுச்சென்ற பிரசார முட்டைகளையெல்லாம் பின்னால் வந்த திரம்ப் அடித்து நொருக்கி அவையெல்லாம் கூழ்முட்டைகளென்று பிரகடனப்படுத்தினான். அவன் பேச்சு பொய்யெனத் தெரிந்தும் பெருந்திரளாக மக்கள் அவன் பேச்சைக் கேட்கத் திரண்டார்கள். இறுதியில் அவனின் ஆயுதமான மனோவசியமும் வாக்கு சாதுரியமும் வாக்குகளாகக் குவிந்தன.
பெரிய க்ளின்டன், ஒபாமா, திருமதி ஒபாமா ஆகிய பெரும் தலைகளுடன் ஹாலிவூட் சுப்பர் ஸ்டார்களும் ஹிலாரியின் மேடைக்கு ஒளியூட்டினார்கள். ஆனால் ஸ்விட்ச் திரம்பின் கையில் இருந்தது என்றதுதான் மகா பரிதாபம்.
ஹிலாரியின் அரசியல் வியாபாரம் வங்குரோத்து ஆகிவிட்டது. கணவனுடன் சேர்ந்து இதுவரை கொள்ளையடித்த செல்வத்தைக் குட்டிபோடுவதில் வாழ்க்கையின் மிகுதி நாட்கள் பயன்படலாம்.
ஹிலாரி வெற்றிவாகை சூடித் தனது அரசியல் மரபுரிமையைத் (Legacy) தொடர்ந்து முன்னெடுப்பாளென்று நம்பியிருந்த ஒபாமா இப்போது “சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்…” என்ற பாடலைப் பாடிக்கொண்டிருப்பார்.
Bottom Line: ஹிலாரி பெண் என்ற காரணத்தால் தோற்கடிக்கப்படவில்லை. புதுமைப் பெண்ணாக இருக்காத காரணத்தால் தோற்கடிக்கப்பட்டாள்.

(Rajaji Rajagopalan)