ஆறுமுகம் திட்டம்(A River for Jaffna)

அரியாலையில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பணையை சீராக பராமரிப்பதன் மூலம் உப்பாறு கடலுடன் சேர்வதை தடுக்கவேண்டும்.

தொண்டைமனாறில் கட்டப்பட்டிருக்கும் தடுப்பணை முறையாக பராமரிக்கப்பட்டு தொண்டைமானாறு கடலுடன் கலப்பதை தடுக்கவேண்டும். கடல்நீர் தொண்டைமானாற்றில் உட்புகுவதையும் தடுக்கவேண்டும்.

சுண்டிக்குள்ளத்தில் தடுப்பணை ஒன்று அமைக்கப்பட்டு கடல் நிர் உட்புகுவது தடுக்கப்படும் அதே சமயம் இரணைமடுக்குளத்தின் மேலதிக நீர் கடலுடன் சுண்டுக்குளம் ஊடாக கலப்பது தடுக்கப்படவேண்டும்.

இரணைமடுக்குளத்தின் மேலதிக நீர் சுண்டிக்குளம் ஊடாக ஆனையிறவு நீரேரியில் கலக்கும்.

வடமராட்சிக்கிழக்கு நீரேரி முள்ளியான் வாய்க்கால் ஊடாக ஆனையிரவு நீரேரியுடன் இணைக்கப்படும்.

இரணைமடுக்குள மேலதிக நீர், கனகராயன் ஆற்றுநீர், ஆனையிறவு நீரேரி வடமராட்சி/வடமராட்சிக்கிழக்கு நீரேரி, தொண்டைமானாறு, உப்பாறு இவற்றை இணைத்து ஒரு மிகப்பெரிய நீரிணைப்பு சாத்தியமாகும் போது “யாழ்பாணத்துக்கான ஆறு” உருவாகும்.

ஆறுமுகம் திட்டம்/யாழ்ப்பாண ஆற்றுத்திட்டம் என்பது 350 ஆண்டுகளுக்கு முன்னரே டச்சுக்கால ஆட்சியில் பேசப்பட்டது.

Dutch Captain Hendrile van Reedle who suggested, “A dike to contain the sea at Condemannaer and Navacolii, with sluices to claim the rain water and a canal to the salt pains at Nieweli would create more useful land.”

1879 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் அரச அதிபராக இருந்த Twyneham (GA Jaffna) அவர்கள் தடுப்பணைகளை புனரமைக்க நடவடிக்கை எடுத்தார். ஆனையிறவு நீரேரியை நன்னீராக்கும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தார்.

1916 இல் யாழ்ப்பாணத்தில் அரச அதிபாராக இருந்த Horseburg (GA Jaffna) என்பவர் ஆறுமுகம் திட்டத்தினை நடைமுறைப்படுத்த ஒரு சில பரிசோதனை முயற்சிகளை செய்தார்.

1947 இல் அது நடைமுறைக்கு வந்தது. 1950 களில் அதற்கான பல வேலைகள் நடைபெற்றன.

1983 ஆம் ஆண்டு தை மாதம் ஒரு செயற்திட்டம் அந்தநேரம் சனாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட ஜே.ஆர் ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தார். இந்த திட்டத்தோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்த அவர் அழைப்புவிடுத்திருந்தார். அந்தக்கூட்டம் மேமாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் தூரதிஸ்ரவசமாக 1983 மே மாதம் (யூலை கலவரம்) நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் அந்த கூட்டம் நடக்காமல் போனது.

இதன் காரணமாக ஆறுமுகம் திட்டத்தினை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது.

அதன் பிறகு சுமார் 20 வருடங்கள் கழித்து உள்நாட்டுப்போர் ஓய்ந்த ஒரு காலப்பகுதியில் யூலை மாதம் அளவில்;

அன்றைய நீர்ப்பாசன மர்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் காமினி விக்கிரம பெரேரா ஆறுமுகம் திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிட்ட பிரதேசங்களை நேரடியாக பார்வையிட்டார். அதன் பிறகு அவர் அமைச்சரவையில் “ஆறுமுகம் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றவேண்டும்” என ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தார்.

“யாழ்குடாநாட்டின் தண்ணீர் பிரச்சினைக்கு ஆறுமுகம் திட்டம் ஒரு சிறந்த தீர்வு- All embracing sollution for water problems in Jaffna” என அவர் தன்னுடைய அமைச்சரவை குறிப்பில் தெரிவித்திருந்தார்.

இந்த திட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக அந்த நேரத்தில் விடுதலைப்புலிகளும் கூட தங்களின் சம்மதத்தை தெரிவித்திருந்தனர்.

ஆனால் மீண்டும் ஒரு தூரதிஸ்ரனிகழ்வு நடந்தேறியது. 2003 இல் ஒரு ஆட்சிமாற்றம் நிகழ்ந்ததால் இந்த திட்டத்தின் ஆரம்ப பணிகளோடு மீண்டும் அது நின்றுப்போனது.

அதன்பிறகு 2007 ஒக்டோபர் மாதம் இலங்கை எந்திரவியலாளர் சங்கத்தின்(Institute of Engineers Srilanka) வருடாந்தரக்கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. அந்தக்கூட்டத்தில் “ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் நிற்கும் ஆறுமுகம் திட்டத்தை அதாவது யாழ்ப்பாண ஆற்றுத்திட்டத்தை உடனடியாக முழுமைப்படுத்தவேண்டும்” எனும் தீர்மானம் அறுதிப்பெரும்பான்மை வாக்குகளோடு நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் அடங்கிய அறிக்கை ஒன்றும் அரசாங்கத்துக்கும் நீர்ப்பாசன அமைச்சுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்ச தலமையிலான அரசு சுமார் 100 மில்லியன் ரூபாய்களை இந்த புனரமைப்புக்கு வழங்கியது.

இந்த புனரமைப்பு திட்டம் 2008 , 2009 களில் நிறைவுபெற்றது.�

ஆறுமுகம் திட்டம் என ஏன் பெயர் வந்தது?

1954 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்த நீர்ப்பாசன பொறியியலாளர் திரு. ஆறுமுகம் அவர்களே முதன்முதலாக யாழ்ப்பாண ஆற்றுகான திட்டத்தினை (A River for Jaffna) முன்மொழிந்து செயற்படுத்த பல வழிகளில் கடுமையாக உழைத்தார். எனவேதான் அந்த திட்டம் “ஆறுமுகம் திட்டம்” என இப்போதும் அழைக்கப்படுகிறது. இவரின் ஒரு மகன் ( Thiru Arumukam) இப்போது அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார். அவர் ஒரு electrical engineer.

இவர் அண்மையில் வடக்கு மாகாணத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ” யாழ்ப்பாணத்துக்கான நீரியல் கொள்கை” மாநாட்டில் கலந்து கொண்டு தன்னுடைய தகப்பனாரின் “River for jaffna” திட்டம் பற்றி விபரித்தார்.

இதற்குமுன்னரும் ஒருமுறை 2007 ம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற ஒரு நீரியல் கொள்கை மாநாட்டில் கலந்துகொண்டு “ஆறுமுகம் திட்டத்தின்” பல்வேறான நன்மைகள் பற்றி விளக்கமளித்திருந்தார்.

ஆறுமுகம் திட்டத்தில் செய்து முடிக்கப்பட்ட படிமுறைகள்:

1. தொண்டைமானாற்றில் ஒரு தடுப்பணை/பாலம் 1947 இல் ஆரம்பிக்கப்பட்டு 1953 இல் அது கட்டிமுடிக்கப்பட்டது. இந்த தடுப்பணை சுமார் மூன்றுதரம் பெரிய அளவில் புனரமைக்கப்பட்டது. கடைசியாக 2009 இல் பாரிய நிதிச்செலவில் புனரமைக்கப்பட்டது. இப்போது சுமார் 300 மில்லியன் செலவில் மீண்டும் புனரமைக்கப்பட்டுகொண்டிருக்கிறது.

இந்த தடுப்பணை கட்டப்பட்டதன் காரணமாக 300 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் மழைநீர் ஏந்தும் பிரதேசம் வடமராட்சி மற்றும் வடமராட்சிக்கிழக்கில் உருவாகியுள்ளது.

2. 1955 இல் அரியாலையில் அமைக்கப்பட்ட தடுப்பணைமூலம் சுமார் 220 சதுரகிலோமீற்றர் மழைநீர் ஏந்தும் பிரதேசம் உப்பாறில் உருவாக்கப்பட்டுள்ளது.

3.ஆனையிறவுப்பாதை செப்பனிடப்பட்டதன் மூலமாகவும் புகையிரத பாதை அமைக்கப்பட்டதன் காரணமாகவும் ஆனையிறவு நீரேரியின் பெருமளவான நீர் மேற்குப்பக்கமாக கடலுடன் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது.

4. ஆனையிறவு நீரேரியின் கிழக்குப்புறமாக சுண்டிக்குளத்தில் 1950 களில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய தடுப்பனையின் மூலமாக ஆனையிறவு நீரேரிக்குள் கடல்நீர் உட்புகுவது தடுக்கப்பட்டது.
ஆனையிறவு நீரேரியின் மேலதிக நீர் ஒரு குறுகிய வாய்க்கால் மூலமாக கடலுடன் கல்ந்துவிடுவதற்கான வழிமுறையும் உள்ளது.

கனகராயன் குளத்து நீரும் மேலும் சிறிய மூன்று வழிந்தோடும் கால்வாய்கள் மூலமாகவும் வன்னிப்பெருநிலப்பரப்பில் பெய்யும் மழைந்நீர் ஆனையிரவு நீரேரியுடன் கலக்கும் போது அது மெல்லமெல்ல நன்னீர் ஏரியாக மாறிவிடும் ஒரு சூழ்நிலை காணப்பட்டது. ஆனால் தூரதிஸ்ரவசமாக சுண்டிக்குலத்தின் தடுப்பணை சேதம் அடைந்து இருப்பதால் மீண்டும் கடல்நீர் கிழக்குப்புறமாக ஆனையிறவு நீரேரியில் கலக்கிறது. இதனால் ஆனையிரவு நீரேரி உப்புச்செறிவாகவே காணப்படுகிறது. கடல்நீரோடு ஒப்பிடும் போது ஆனையிறவு தண்ணீர் உப்புச்செறிவு மிகக்குறைவு.

5. 1960 களில் முள்ளியான் வாய்க்கால் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அதன் 80% வேலைகள் நிறைவுபெற்றன. 12km நீளமான முள்ளியான் கால்வாயானது ஆனையிரவு நீரேரியின் வடகிழக்கு புறமாக அமைக்கப்பட்டது. முள்ளியான் கால்வாய் என்பது ஆனையிரவு நீரேரியையும் வடமராட்சி நீரேரியையும் இணைக்கும் கால்வாய். ஆனால் இந்த கால்வாய் முற்றாக சிதைந்துபோய் உள்ளது.

6. உப்பாற்றுக்கும் வடமராட்சி நீரேரிக்கும் இடையிலான இணைப்பும் செய்யப்பட்டது. அதுவும் முறையாக பராமரிக்கப்படாமல் இருக்கிறது.

இதில் முழுமையாக முடிக்கபடாத இணைப்பாய் இன்னமும் எஞ்சி இருப்பது “முள்ளியான் இணைப்பு”.

தொண்டைமானாற்றில் போட்ட தடுப்பணை மற்றும் அரியாலை தடுப்பணைமூலம் கடல்ந்நீர் தொடர்பு துண்டிக்கப்பட்ட போது உப்பாற்றின் உப்புத்தன்மையும் வடமராட்சி நீரேரியின் உப்புத்தன்மையும் கணிசமான அளவு குறைந்தது. இதன் காரணமாக அதன் ஓரங்களில் இருந்த கிணறுகளில் குறிப்பிடும் படியான மாற்றம் “சவர்த்தன்மையில்” ஏற்பட்டது. இதற்கு அந்த பிரதேச மக்களே சாட்சிகள். கோடை காலத்தில் கால்நடைகள் நீர் பருகும் நிலை கூட இருந்தது.

யாழ்ப்பாண ஆறும் விவசாயமும்:

சுமார் 8000ஏக்கர் நிலப்பரப்பு யாழ்குடாநாட்டில் விவசாய நிலங்களாக உள்ளன. அவற்றில் பெரும்பாலும் மழைநீரை நம்பியும் மிகுதி நிலத்தடி நீரை நம்பியுமே உள்ளன.

நாடளாவிய ரீதியில் ஒப்பிடும் போது மழைநீரை முற்றாய் நம்பி விவசாயம் இருப்பது யாழ்ப்பாண குடாநாட்டில் அதிகமாக இருக்கிறது.

உப்பாறு மற்றும் வடமராட்சி நீரேரிகள் முறையாக பராமரிக்கப்படுவதன் மூலமாக அதன் நீரேந்தும் அளவு அதிகரிக்கும். அதன் சவர்த்தன்மை குறையும். இதன் காரணமாக இதன் ஒரு பகுதி நீர் விவசாயத்துக்கு பயன்படுவது மட்டுமல்ல. வயல்வெளிகளில் இருக்கும் கிணறுகளின் சவர்த்தன்மை குறையும். இதனால் விவசாயத்துக்கான நீர் முப்போகத்திலும் உறுதிப்படுத்தபடும்.

உப்பாறு மற்றும் வடமராட்சி நீரேரியின் இருமருங்கிலும் சுமார் 4400 ஏக்கர் விவசாய நிலங்கள் சவர்த்தன்மையால் தருசு நிலங்களாக காணப்படுகின்றன.
உப்பாறும் வடமராட்சி நீரேரியும் நன்னீராக மாறும் காலத்தில் இந்த 4400 ஏக்கர் தருசு நிலங்களும் விவசாய நிலங்களாக மாறும் சாத்தியம் உள்ளது.

யாழ்ப்பாண ஆற்றுத்திட்டமும் குடிநீரும்:

யாழ்ப்பாண குடாநாட்டில் சுமார் ஒரு லச்சத்துக்கும் அதிகமான கிணறுகள் உள்ளன. இவற்றில் பல கிணறுகள் சவர்த்தன்மை உள்ள உள்ள நீராகும். யாழ்ப்பாண ஆற்றுத்திட்டம் மூலமாக உப்பாற்று நீரும் வடமராட்சி நீரேரியும் நன்னீராக மெல்ல மெல்ல மாறும் போது சவர்த்தன்மை உடைய கிணறுகளில் சுமார் 30% மான கிணறுகள் குடிப்பதற்கு உகந்த நீராக மாறும் என ஆய்வுகள் சொல்கின்றன. இந்த 30% என்பது மிகப்பெரிய எண்ணிக்கை.

அத்துடன் நிலத்தடி நீரின் செழுமை அதிகரிக்கும். இப்போது மிக அதிகமாக பேசப்படும் ” எண்ணெய்க்கழிவின்” செறிவு என்பது கணிசமான அளவு குறையும்.

கிணற்றுநீரில் கலந்திருக்கும் “நைத்திரேற்று செறிவும்” “கொழுப்புச்செறிவும்” படிப்படியாக குறையும்.

எனவே யாழ்ப்பாண குடாநாட்டின் குடிநீர் தேவையில் ஒரு பகுதி “சவர்த்தன்மை குறையும் கிணறுகளால்” பூர்த்திசெய்யப்படும்.

உப்பாறு மற்றும் வடமராட்சி நீரேரியின் இருமருங்கிலும் அண்மையில் உள்ள சிறு குளங்கள், குட்டைகள், கேணிகள் என்பவற்றின் நீரேந்து மட்டமும் அதன் செழுமையும் கூடும் போது கால்நடைகளின் நீர்த்தேவை பூர்த்திசெய்யப்படும்.

மனிதர்களுக்கான குடிநீர் எப்படி உறுதிப்படுத்தப்படவேண்டுமோ அதே அளவு மற்ற உயிரினங்களுக்கும் உறுதிப்படுத்தவேண்டும்.
பறவைகள,ஆடுகள்,மாடுகள் காசுகொடுத்து போத்தல் தண்ணீர் வாங்கி குடித்து வாழ முடியாது.

தொண்டைமானாற்றுக்கு அண்மையில் சுமார் 12 சதுரகிலோமீற்றர் நீர்த்தேக்கத்தினை அமைத்து அதனை சுத்திகரிப்பதன் மூலம் யாழ்க்குடாநாட்ட்டின் அவசராமன குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்யமுடியும் என அண்மைய ஆய்வுகள் சொல்கின்றன. இதை அண்மையில் வடக்குமாகாண சபையால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த “நீரியல் கொள்கை மாநாட்டில்” ஒரு நீர்ப்பாசன பொறியியலாளர் முன்வைத்தார் என அதில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவித்தார்.

கடல் நீரை சுத்திகரித்து அதை நன்னீராக மாற்றும் பொறிமுறைச்சிக்கலுடன் மற்றும் சுற்றுப்புற சூழல் பாதிப்புகளுடன் ஒப்பிடும் போது யாழ்ப்ப்பண ஆற்றுத்திட்டத்தால் சேமிக்கப்படும் நீரை சுத்திகரிப்பது மிகச்சிறந்த வழியாகும்.

உப்புச்செறிவு குறைந்த நீரை சுத்திகரிப்பதும் எழிது பக்கவிளைவுகளும் மிக மிக குறைவு.

இயற்கைசமனிலையும் பாதிக்கப்படாது. அப்படி பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதை நிவர்த்தி செய்வதும் எழிது.

இயற்கையான மழைநீர் யாழ்ப்பாண ஆற்றில் சேமிக்கப்படும் போது நிலக்கீழ் நீரின் செழுமை பலமடங்கு அதிகரிக்கும்.

எனவே யாழ்ப்பாண ஆறு உருவாகி அது எங்கள் மண்ணில் பாய்ந்த்தோடும் நாளில் எங்கள் மனங்களிலும் சந்தோசம் பெருக்கெடுத்து ஓடும் என்பதில் ஐயமில்லை.

ஒரு நீண்ட ஆறு யாழ்ப்பாணத்தில் ஓடும் கனவோடு மிக நீண்ட நாட்களாய் அதற்காய் “அங்கலாய்த்துதிரியும்” பலரில் நானும் ஒருவன்.இந்தக்கனவு யாழ்குடாநாட்டில் இருக்கும் ஒவ்வொருவரினதும் மனதில் ஏறும் போதே எங்களின் கனவு ஒரு நாள் மெய்ப்படும்.

ஆறுமுகம் திட்டத்தை/யாழ்ப்பாணத்துக்கான ஆற்றுத்திட்டத்தை உயிர்ப்பிக்க என்ன செய்யவேண்டும்?

1. தொண்டைமானாற்றில் தற்போது 900 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுவரும் தடுப்பணை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
( ஏற்கனவே 2008 இல் தேசிய பொறியியலாளர் சங்கத்தால் மகிந்த ஆட்சியில் புனரமைப்பு செய்யப்பட்டது)

2. தொண்டைமனாற்றுக்கு அண்மையிலோ அல்லது ஒரு தகுந்த இடத்தில் ஒரு நீர்த்தேக்கம் அமைக்கப்படவேண்டும். இதற்கு ஒரு அவசரமான கள ஆய்வு அவசியம்.

3.அரியாலையில் அமைக்கப்படுள்ள தடுப்பணையானது சீர்செய்யப்பட்டு முறையாக பராமரிக்கப்படவேண்டும். உப்பாறு -வடமராட்சி இணைப்பும் சீர்செய்யப்படவேண்டும்.

4.சுண்டிக்குளத்தில் சுமார் 1400மீற்றர் நீளத்துக்கு அமைக்கப்பட்ட தடுப்பணை(bund) புனரமைக்கப்படவேண்டும். 1200 மீற்றர் தூரம் அமைக்கப்பட்ட “மேலதிக நீர் வெளியேறும் கால்வாயும்” (spill cum causeway )புனரமைக்கப்படவேண்டும்.

5. முள்ளியான் வாய்க்கால் முற்றுப்பெறாமல் இடைநடுவில் நிற்கிறது. 12மீற்றர் அகலமானதும் 4கிலோமீற்றர் நீளமானதுமான இந்தக்கால்வாய் உடனடியாக அமைக்கப்படவேண்டும்.

ஆனையிறவு நீரேரியின் செழுமைப்படுத்தும் திட்டம் நிறைவுபெற்றதும் அந்த நீர் இந்த முள்ளியான் வாய்க்கால் வழியாக வடமராட்சிக்கிழக்கு ஊடாக வடமராட்சி நீரேரியில் கலக்கவிடப்படவேண்டும்.
முள்ளியான் கால்வாயை முழுமையாக்க சுமார் 1200மில்லியன் ரூபாய்கள் வேண்டும் என்று 2013 இல் கணிப்பிடப்பட்டது. இப்போது அதன் திட்டமிடல் செலவு எவ்வளவு என குறிப்பாக கூறமுடியவில்லை.

தேசிய நீர் வடிகால் அமைப்புச்சபையும் வடக்கு நீர்ப்பாசன திணைக்களமும் இணைந்து பல வேலைத்திட்டங்களை பல ஆண்டுகளாக பல படிமுறைகளில் செய்தார்கள். இப்போதும் செய்துகொண்டேயிருக்கிறார்கள்.

யாழ்க்குடாநாட்டில் செய்யப்படும் “நீர்பாசன அபிவிருத்தி” திட்டங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் யாழ்ப்பாண ஆற்றுத்திட்டத்தினை அடிப்படையாக கொண்டவையே.

இலங்கை நீர்ப்பாசன திணைக்களத்தின் பல்வேறான வேலைத்திட்டங்கள் நிறைவேற்றப்படுமிடத்து யாழ்ப்பாணத்துக்கான ஆற்றுத்திட்டம் இன்னும் வலுப்பெறும்.

மத்திய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னம் நிறைவேற்றப்படவிருந்த “இரணைமடுக்குளத்திட்டம்” தவறான கண்ணோட்டத்தில் அணுகப்பட்டது மிக மிக தூரதிஸ்ரவசமான ஒன்று.
அது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் ஒரு நீண்ட உரையாடல் என்பதால் அதை இங்கே தவிர்ப்போம்.

ஆனால் ஒரு செய்தியை இங்கே பதிவுசெய்யவேண்டிய கட்டாயம் உள்ளது.

“இரணைமடுக்குளத்தில்’ அதீத மழையால் வெளியேறும் மேலதிக நீரை அல்லது அதன் அணைக்கட்டு உயரத்தை உயர்த்தி நீரை சேமித்து அதில் ஒரு பகுதி நீரை சுத்திகரித்து யாழ்குடாநாட்டு மக்களின் அவசர நீர்த்தேவையை பூர்த்திசெய்யவே ஒரு திட்டம் முன்மொழியப்பட்டது. ஆனால் அந்த திட்டத்தினை பற்றி தெளிவான விளக்கம் கிளிநொச்சி பிரதேச விவசாயிகளுக்கு வழங்கப்படாததால் அந்த திட்டம் (சுமார் 127மில்லியன் அமெரிக்க டொலர்கள்) கைவிடப்பட்டது.

அதனால் இன்றும் கூட இரணைமடுக்குளத்தின் விரயமாக வெளியேறும் நன்னீர் சுண்டிக்குளத்தில் கடலோடு வீணே கலக்கிறது.

உடனையாக ஒரு இயற்கையான கால்வாயூடாக அந்த மேலதிக இரணைமடுநீர் ஆனையிறவு நீரேரியில் கலக்கும் படி செய்வது மிகமிக முக்கியம்.

இந்த கால்வாயின் புவியியல் அமைப்பை ஆராயும் போது அது ஒரு இயற்கையான நீரோட்டத்தால் மிக எழிதில் சாத்தியப்படுத்தமுடியும் என ஒருசிலர் சொல்கிறார்கள். இருந்தபோதும் ஒரு முறையான கால்வாய் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுவது அவசியம்.

ஆறுமுகம் திட்டத்துக்கு ஆதரவான குரல்கள்:

நீண்ட காலமாக இந்த திட்டத்துக்கான அதரவு குரல்கள் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன. அனுபவம் மிக்க பல நீர்ப்பாசன பொறியியலாளர்கள் தங்களின் ஆதரவு குரல்களை காலத்துக்கு காலம் ஒலித்துக்கொண்டேயிருந்த போதும் அந்த குரல்கள் அனைத்தையும் ஒன்றிணைக்குக்கும் வேலைத்திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை.

இலங்கையின் எந்திரவியலாளர் பேரவையின் அங்கத்தவர்களின் ஒட்டுமொத்த தெரிவாக “யாழ்ப்பாண ஆற்றுத்திட்டம்/ஆறுமுகம் திட்டம் இருக்கிறது.

வெளிநாடுகளில் வாழும் பல புலம்பெயர் தமிழ்ப்பொறியியலாளர்களின் தெரிவாகவும் இந்த திட்டமே இருக்கிறது.
(இதற்கான சான்று அண்மையில் நடந்துமுடிந்த “யாழ்பாணத்துக்கான நீரியல் கொள்கை மாநாடு” .)

யாழ்ப்பாணத்தின் இயற்கை சமனிலையை பேணுவதற்கு குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்களின் தெரிவும் இதுவே.

யாழ்ப்பானத்துக்கான “நிலையான, பாதுகாப்பான, சுத்தமான” குடிநீரை வழங்க நினைக்கும் மத்திய அரசின் தெரிவாக இப்போது இருப்பது “யாழ்ப்பாண ஆற்றுத்திட்டமே”. இதை அவர்கள் பலமுறை தெளிவாக சொல்லிவிட்டார்கள்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின்( Asian Development Bank) சிறந்த தெரிவாக இருப்பதும் இதுவே.

தூரதிஸ்ரவசமாக கையாலாகாத விக்கினேஸ்வரன் தலமையிலான வடக்கு மாகாணசபை நிர்வாகத்தால் இந்த யாழ்ப்பாணத்துக்கான ஆற்றுத்திட்டத்தை ஓரளவுக்கேனும் விரைவுபடுத்த முடியாமல்ப்போனது காலக்கொடுமையான விடயம்.

அண்மையில் இரணைமடுக்குளத்தின் புனரமைப்பை உரிய முறையில் கவனிக்காது விட்ட காரணத்தால்;
விரயநீர் அதிகமாகி கிராமங்களும் மக்களின் சொத்துக்களும் வயல்களும் அழிந்துபோயின.

லச்சக்கணக்கான லீற்றர் மழைநீர் வீணே சுண்டிக்குளத்தின் கடலோடு கலந்து உப்புத்தண்ணியாய் போனது.

ஒரு மிகப்பெரிய அழிவின் பின் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கான ஆற்றுத்திட்டம் பற்றிய அவசியமும் அவசரமும் உணரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கோடிக்கணக்கில் காசை கரியாக்கி கடலுக்கதான் குடிக்க தண்ணீர் எடுப்பம் என கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்தவர்களினதும் வடக்கு மாகாண தற்போதைய ஆளுநனரதும் பார்வை ஆறுமுகம் திட்டத்தில் விழுந்துள்ளது.

இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆறுமுகம் திட்டத்துக்கு உயிர் கொடுத்து யாழ்ப்பாணத்துக்கான ஆறு ஒன்றை உருவாக்குவது என்பது மலையை பிரட்டும் அளவுக்கு பெரிய கடினமான காரியம் அல்ல!

நல்லவர்கள் நாலுபேரின் எண்ணங்களும் செயல்களும் ஒருபுள்ளியில் ஒன்றிணைந்து சென்றால் நல்லது கெதியில நடக்கும்.

“யாழ்ப்பாணத்துக்கான ஆறு River for Jaffna” கனவல்ல!! நிஜமாய் நடக்கும்.

#தமிழ்ப்பொடியன்

குறுப்பு: இரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதிய பதிவு இது. சிறு திருத்தங்களுடன் மீண்டும் பதிவேற்றுகிறேன்.