நானும் ஹிஸ்புல்லாஹ்வும்..!

பின்னாளில் அவருக்கும் தலைவர் அஷ்ரப் அவர்களுக்கும் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவப் பங்கீடு தொடர்பில் முறுகல் நிலை ஏற்படுகிறது.
அந்தத் தேர்தலில் இறங்கும்போது எனது வீட்டில், நான் எழுதுகி்ற என்னுடைய மேசையில் ஒரு குர்ஆன் வைத்து, எனது வலதுகைப் பக்கம் ஹிஸ்புல்லாஹ்வும் இடதுகைப் பக்கம் மொஹிதீன் அப்துல் காதரும் நடுவில் நடுநாயகமாக முன்னாள் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களும் அமர்ந்திருக்க, தலைவர் இவ்வாறு சொல்கிறார்: “இந்த எம்.பி. பதவி ஓர் அமானிதம் (நம்பிக்கைப் பொறுப்பு). மொஹிதீன் அப்துல் காதருக்கு இரண்டு வருடங்கள், ஹிஸ்புல்லாஹ்வுக்கு இரண்டு வருடங்கள், மீதி ஏறாவூர் பஷீருக்கு” என்று சொல்கிறார். அதை நாங்கள் நால்வருமாக வழிமொழிகிறோம்.
அந்தத் தேர்தலில் எப்படியும் மொஹிதீன் அப்துல் காதர் வென்றுவிட வேண்டுமென்று மனசார நானும் அஷ்ரபும் விரும்புகிறோம். ஆனால் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் காய்நகர்த்தலிலும் இயற்கையாகவே அவரிடமிருந்த அரசியல் சாணக்கியத்தாலும் அவர் அந்தத் தேர்தலில் வெற்றி பெறுகிறார்.
இரண்டு வருடங்கள் முடிந்ததும் ஏற்கனவே பேசப்பட்டிருந்தபடி அவர் தான் வகித்துவரும் எம்.பி. பதவியை விட்டு க்கொடுக்க மறுக்கிறார்
ஹிஸ்புல்லாஹ் பதவியின் மீதிக் காலத்தை விட்டுக்கொடுக்க மறுத்தபோது, இந்த இரண்டு வருட எம்.பி. ஒப்பந்தத்தை – அந்த வாக்கை எவ்வாறு நிறைவேற்றுவதென்று தலைவர் குழம்பிப் போயிருந்தார்.
கல்குடாவுக்கு வருகின்ற ஒவ்வொரு தடவையும் “அடுத்த பயணம் நான் கல்குடாவுக்கு எம்.பி.யுடன் வருவேன்” என்பார். ஆனால் அந்த எம்.பி. கிடைக்கின்ற வழிமுறைகள் எதனையும் அவர் சொல்ல மாட்டார்.
இப்பொழுது அஷ்ரப் அவர்கள் நீதிமன்றம் செல்லப் போவதாக ஹிஸ்புல்லாஹ்வை மிரட்டுகிறார்.
அக்கரைப்பற்றில் இருந்த ஷேகு இஸ்ஸதீன் அவர்கள், “நீ ராஜினாமா செய்யக் கூடாது” என்று ஹிஸ்புல்லாஹ்வுக்கு மந்திராலோசனை வழங்குகிறார்.
இப்படியான ஒரு நாளில் எனது கோப்புகளை நான் புரட்டிக்கொண்டிருந்தபோது ஒரு கோப்புக்குள் இலங்கைப் பாராளுமன்றம், கீழே அந்தச் செங்கோல் இடப்பட்டிருந்த பத்து Letterheads தாள்களின் கீழ்ப் பகுதிகளில் ஹிஸ்புல்லாஹ்வின் கையொப்பங்களும் இடப்பட்டு, அவருடைய பதவி முத்திரையும் பொறிக்கப்பட்டிந்தது. அந்தப் பத்து Letterheads களிலும் தன்னுடைய ‘பாராளுமன்ற உறுப்பினர்’ என்ற அந்த முத்திரையைப் பதித்திருக்கிறார்.
அவருக்கு அந்த Stamp Pad ஐ சிங்கப்பூரிலிருந்து புகாரிதீன் ஹாஜியார் வாங்கி அன்பளிப்புச் செய்திருந்தார்.
எனது கைகளில் இந்தத் தாள்கள் பத்தும் அகப்பட்டதும் நான் சற்று யோசித்தேன். கையொப்பங்கள் இடப்பட்டிருக்கும் உத்தியோகபூர்வ Letterheads வெற்றுத் தாள்களை அஷ்ரபிடம் கையளிப்பதா அல்லது ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிப்பதா ?
நீண்ட நேரம் சிந்தனையில் போராடுகிறேன். பிறகு நானொரு முடிவுக்கு வருகிறேன். இந்தத் தாள்கள் ஹிஸ்புல்லாஹ் என்னிடம் அமானிதமாகத் தந்தவை. இவற்றைத் திருப்பி நான் அவரிடமே ஒப்படைப்பதுதான் சரியான வழியாகும் என்று நினைத்த நான் உடனடியாக அன்று இரவே கொழும்புக்கு ரயிலில் சென்று மறுநாள் காலை ஒன்பது மணியளவில் நாவலையில் இருந்த ஹிஸ்புல்லாஹ்வின் வீட்டுக்குச் செல்கிறேன்.
அவருடைய மாமா சகாப்தீன் வீடு வாசல்களைக் கூட்டிப் பெருக்கிக் கொண்டிருந்தார். அவருடைய முகம் அவ்வளவு நல்லதாகத் தெரியவில்லை.
“எங்கே தம்பி ?” என்று நான் கேட்கிறேன்.
“அவர் தூங்குகிறார்” என்கிறார்.
“எனக்கு ஒரு அலுவலுமில்லை, அவருடைய ஒரு விஷயத்தை அவரிடத்தில் கையளித்துவிட்டுப் போக வந்திருக்கிறேன், அவரை எழும்பி வரச் சொல்லுங்கள்” என்கிறேன்.
ஹிஸ்புல்லாஹ் தூக்கக் கலக்கத்தில் எழும்பி வருகிறார்.
உடனே File ஐக் கொடுத்து, “மகன், இது நீங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் என்னிடம் அமானிதமாகத் தந்தது, இதை நான் உங்களிடம் திருப்பி ஒப்படைப்பதுதான் சரியான வழி, நீங்களும் அஷ்ரபும் நாமும் பேசிக் கொண்டதற்கான பதிலை நாளை மறுமையில் நீங்கள் அல்லாஹ்விடத்தில் சொல்லிக் கொள்ளுங்கள், நான் வருகிறேன்” என்று விடைபெறப் போகும்போது ஹிஸ்புல்லாஹ்வை அவதானிக்கிறேன்…
அந்த letterheads தாள்களைக் கண்டதும் ஹிஸ்புல்லாஹ் ஆடிப் போனார். அவரது கையொப்பங்கள் இடப்பட்ட பாராளுமன்ற உத்தியோகபூர்வ முத்திரை பதிக்கப்பட்ட வெற்றுத் தாள்கள் அவை ! அவற்றை வைத்து என்னவெல்லாம் செய்திருக்கலாம் அப்போது நினைத்திருந்தால் அந்தச் சூழ்நிலையில் !!
ஹிஸ்புல்லாஹ் அப்படியே ஆடிப்போனார் ஒரு கணம் ! பின்னர் தன்னைச் சுதாரித்துக் கொண்டவராக, “சாச்சா, இருங்கோ, டீ குடிப்போம்” என்கிறார்.
நாங்கள் சாச்சா – மகன் போலத்தான் பழகினோம்.
ஒரு டீயை குடித்துவிட்டு நான் வந்துவிட்டேன்…
அருமை மகன் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இந்தப் பதிவைப் பார்த்து வழிமொழிந்தால் மிகவும் சந்தோஷப் படுவேன்.