கோத்தாவிற்கு கிறுக்கு? – டக்ளஸ்!

வடமாகாண சபை தேர்தல் காலத்தில் ஈ.பி.டி.பியிடம் இருந்து ஆயுதங்களை களைய வேண்டாம் என நான் கூறியதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருக்கும் கருத்தின் ஊடாக அவர் தன்னை ஒரு ஜனநாயக வாதியாக காட்டிக் கொள்ள நினைக்கின்றார். அவருடைய இந்தக் கருத்து கிறுக்குத்தனமானது. மேற்கண்டவாறு முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அண்மையில் வழங்கிய செவ்வி ஒன்றில் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதாவது வடமாகாண சபை தேர்தல் காலத்தில் ஆயுதங்களை எங்களிடமிருந்து களைய வேண்டாம். என நான் கேட்டுக் கொண்டதாகவும், அவ்வாறு களைந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு வென்றுவிடும் என்றும் நான் கூறியதாக அவர் கூறியிருக்கின்ற கருத்து அவர் தன்னை ஒரு ஜனநாயக வாதியாக சித்தரிக்க நினைப்பதன் வெளிப்பாடு. அவருடைய கருத்து மாகாணசபை தேர்தல் காலத்தில் ஆயுதங்களை எங்களிடமிருந்து களைந்திருக்கா விட்டால் டக்ளஸ் தேவானந்தா முதலமைச்சராகவும், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் இருந்திருப்பார் என்பதே. இது அவருடைய கிறுக்குத்தனமான கருத்து. இந்நிலையில் வழக்கமாக கோத்தபாய ராஜபக்ச கூறும் கருத்துக்கள் அனைத்தையும் பொய்யானவை, பிழையானவை என வாதிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, கோத்தபாய எனக்கு எதிராக கூறியிருக்கும் கருத்துக்களை மட்டும் தமக்கு சாதகமாக பயன்படுத்தி அது சரியானது என வாதிடுவதற்கு காரணம் என்ன? எனவும் கேள்வி எழுப்பியிருக்கின்றார். அத்துடன் இவ்வாறு கிறுக்குத்தனமாக பேசுவதை கோத்தபாய தவிர்க்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார். இதேவேளை முந்தைய ஆட்சியாளர்கள் கைது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் அதில் அரசியல் பழிவாங்கலும் உண்மையும் கலந்திருப்பதாக தெரிவித்தார். எனினும் விசாரணைகள் முடிவுற்றதுமே உண்மைகள் தெரியவருமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.