திக்கம் வடிசாலையை பார்வையிட்டார் டக்ளஸ்?

இயங்கா நிலையிலுள்ள திக்கம் வடிசாலையின் தொழிற்சாலையையும் புதர் மண்டிக் காணப்படும் வளாகத்தையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பார்வையிட்டார்வடமராட்சிக்கு நேற்றைய தினம் (18) விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதன் ஒருகட்டமாக திக்கம் வடிசாலைக்குச் சென்று அதன் தற்போதைய நிலவரம் தொடர்பில் நேரில் ஆராய்ந்தறிந்து கொண்டார். டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் திக்கம் வடிசாலை மிகச் சிற்நத முறையில் இயங்கியிருந்த அதேவேளை அங்கு நூற்றுக்கணக்கான பணியாளர்களும் வேலைவாய்ப்பினைப் பெற்றிருந்தனர். இந்நிலையில் தற்போது திக்கம் வடிசாலை கடந்த பல மாதங்களாக இயங்காத நிலையில் அங்கிருக்கும் தொழிற்துறை சார்ந்த உபகரணங்களும் ஏனைய உபகரணங்களும் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன.

அத்துடன் அங்கு தரித்து நிற்கும் வாகனமொன்றின் சக்கரத்தைச் சூழ கறையான்புற்று வளர்ந்து காணப்படும் நிலையில் அது பயன்படுத்தப்படாமல் நீண்டகாலமாக அவ்விடத்திலேயே தரித்து நிற்பதையே எடுத்துக்காட்டுகின்றது. குறிப்பாக அதன் வளாகம் முட்புதர்கள் வளர்ந்து விஷ ஜந்துக்கள் வாழும் இடமாகவும் தற்போது காணப்படுகிறது. இதனிடையே அங்கிருந்தவர்கள் தொழிற்சாலையின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் மிகுந்த கவலையையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்ததுடன் இத்தொழிற்சாலை இயங்காததால் பனம் தொழிற்துறை சார்ந்த பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் தொழிற்சாலை பணியாளர்களும் பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் சுட்டிக்காட்டினர். கடந்த காலங்களில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில்கள் முயற்சி அபிவிருத்தி அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா இருந்த காலப்பகுதியில் அமைச்சின் ஓர் அங்கமாக விளங்கிய பனை அபிருத்திச் சபையின் கீழ் திக்கம் வடிசாலை நல்ல முறையில் இயங்கிய அதேவேளை அதனூடாக பல நூற்றுக்கணக்கான பனம் தொழிற்துறை சார்ந்த குடும்பங்களும் நன்மை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னைய காலங்களில் பல்வேறு பிரச்சினைகளால் இயங்காதிருந்த இத் தொழிற்சாலையை மீண்டும் இயங்கவைப்பதற்கு பல்வேறுபட்ட கஷ்டங்களையும் இடர்களையும் சந்தித்திருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீளவும் அதனை இயங்கவைத்ததனூடாக பலருக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுத்தது மட்டுமன்றி பனம்பொருள்சார்ந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கும் பொருளாதாரத்திற்கும் வழியமைத்துக் கொடுத்திருந்தார் இந்நிலையில் சில சுயலாபவாதிகளது குறுகியதும் உள்நோக்கம் கொண்டதுமான செயற்பாடுகளால் மீண்டும் இத்தொழிற்சாலை இயங்காதிருப்பது வேதனையளிக்கின்றது என தொழிற்சாலையை பார்வையிட்டதன் பின்னர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கவலை தெரிவித்தார்.