அடுத்த தேர்தல் ( பாகம் – 2 )

சிறிலங்காவில் உள்ள பா .உ. க்கள் எத்தனை வகைப்படுவர். ( சுலோகம் – ஏகதேச காம்போதி )
(சஹாப்தீன் நானா )
குரூப் ஒன்று –
பரம்பரை பரம்பரையாக அப்பாட  அப்பா, அந்த அப்பாட அப்பாட அப்பப்பா,அம்மாவழி உறவுகள்,பழைய
பண்ணையாளர்கள், வெள்ளையனுக்கு வால்  பிடித்தவர்களின் வாரிசுகள் என ஒரு மென்மையான,
வெள்ளையும் சொள்ளயுமான அல்லது கருப்பும் ,கம்பீரமும் கலந்த முறுக்கு மீசை பா.உ க்கள்.

இங்கு அன்பு இருக்கும்,அரவணைப்பு இருக்கும், நேர்மை கொட்டி கிடக்கும், ஒற்றை குரலில் ஊரையே,

கிராமத்தையே நடுங்க அல்லது அடிபணிய அல்லது சாஷ்டாங்கமாக காலில் விழுந்து கும்பிடு போட வைப்பார்கள்.
பணத்துக்கு பஞ்சமே  இல்லாத பக்கா பணக்காரர்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உள்ள காணிகள்,
காணி நிலங்கள் ,தோட்டம்,துரவு, வீடு,மனை,ஆடு,மாடுகள் என்பன இவர்களுக்கு சொந்தமாக இருக்கும்,
பா.உறுப்பினர் பதவி என்பது ஜஸ்ட் ஒரு கொசுறு.
ஆனால் அக்காலத்தில் வெள்ளைகார தொரமார்களின் அன்பை பெறவும், அவர்களுடன் குதிரை ( ஜட்கா )
வண்டிகளில் பவனி வரும், செக்கச்  செவேலன்ர வெள்ளை காரைச்சிகளை சைடு அடிக்கவும்,நீதான் இந்த
ஊருக்கு ராஜா, இந்தா பிடி “தங்கவாள்” என்று  கூறிக்கொண்டு; அவர்கள் கொடுக்கும் ஏழரை கிலோ
நிறையுள்ள தங்கவாள்களை பெறவும், பா.உ .பதவிகளை பெற்றார்கள்.
பண்ணையார்களாகவும், சண்டியர்களாகவும் இருந்த இவர்களுக்கு போர்த்துக்கீச, ஒல்லாந்த,ஆங்கிலேயர்களால்
கொஞ்சம் அடிமைத்தனமும், கொளுத்த அரசியலும் புகட்டப்பட்டது.காக்காய் பிடிப்பது எப்படி, அதே நேரம் காலை
வாருவது எப்படி.சோரம் போவது எப்படி, அதே சமயம்சோப்பிளாங்கிதனம் பண்ணுவது எப்படி. சமாதானமாக
போவது எப்படி,அதே நேரம்  நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுவது எப்படி என நன்றாகவே பாடங்கள் புகட்டப்பட்டது.
இவர்களை கிட்ட நின்று முகர்ந்து பார்த்தால்; வெள்ளையும், சொள்ளையும் ஆனவர்களிடம் கொஞ்சம் கேரள
( காலிகட் ,கொச்சின், திருவந்தபுரம் அப்படியே கன்னியாகுமரி,நாகர்கோயில்,குளிகைபட்டினம்   ) வாடையும்;
கருப்பும்,நெடுப்பும்,துரு துருப்பான  பார்வையும் உள்ளவர்களிடம் தமிழ்நாட்டு ( மதுரை ,திருவண்ணாமலை,மேலூர் ,
விழுப்புரம்,திருச்சி அப்படியே கல்லல்,காரைக்குடி,பேராவூரணி ) வாசனையும் அடிக்கும்.
( விஜயனும், குவேனியும் என்னை மன்னிப்பார்களாக )
இவர்களுக்கு ஒரு மனக்கஷ்டமோ,உடல்கஷ்டமோ வந்தால் உலகுக்கு தெரிய கண்டி தலதா மாளிகைக்கும், தங்கள்
மனசாட்சிக்கு மட்டுமே தெரிய; திருப்பதிக்கும், மதுரைக்கும் சென்று வேங்கடாஜலபதியினதும், மீனாட்சியினதும் காலில்
விழுந்து அழுதுவிட்டு வருவார்கள்.
குரூப் இரண்டு –
நிறைய படித்த, கொஞ்சமே கொஞ்சம் புத்தியுள்ள, கோட்டு சூட்டுக்கும், தலையை தடவி கழுத்தை அறுக்கும்
நரி தந்திரத்துக்கும் சொந்தக்காரர்கள், இந்த குரூப் வடகிழக்கையும்,மலையகத்தின் ஒரு பகுதியையும்,
கொழும்பு, பேருவல போன்ற கடல்கரை,துறைமுகம்  சார்ந்த பகுதிகளையும்  சேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.
ஆங்கிலேயர்களுக்கு சலாம் போட்டு, ஆமாம் போட்டு, அவர்கள் காலால் இடும் கட்டளையை தலையால் செய்யும்
ஆமாம் சாமிகள். ஆஷாட  பூதிகள்.அவசர குடுக்கைகள்.
இவர்களை பார்த்தால் தொட்டு கும்பிட வேண்டும் போல இருக்கும்.நுனிநாக்கு ஆங்கிலம், உயர் கல்வி. கடல் வணிகம்
இம்மூன்று மட்டுமே இவர்களது மூலதனம்.வெள்ளையனுக்கும் வேடிக்கை காட்டி, முழு இலங்கைக்கும் டாட்டா
காட்டும் / காட்டிய வல்லவர்கள்.இதனால் பா.உ .ஆனவர்கள்.
குரூப் மூன்று –
இது ஒரு கலவை – கரைசல் என்றும் சொல்லலாம். குரூப் ஒன்றினதும், குரூப் இரண்டினதும் வாரிசுகள்.
வழித்தோன்றல்கள்.வம்சாவழி வந்தவர்கள்.அனைவரும் குறைந்தது ஆங்கிலம் பேசுவார்கள், படித்திருப்பார்கள்,
வெளிநாடுகளுக்கு சென்றிருப்பார்கள்,இவர்களில் பலரிடம் பிரிட்டிஷ் மகாராணி ஒப்பமிட்ட கடவுச் சீட்டுகள்
இருக்கும், இருந்தது.
தங்கள் கிராமங்களில் ஒரு சாதாரண வீடு அல்லது பரம்பரை வீடு, நகரை அண்டிய பகுதிகளில் நவீன, நாகரீக
வீடுகள் கட்டி இருப்பார்கள்.கிராமத்துக்கு செல்லும்போது பவ்விய கிராமப்புற உடையணிந்து,அனைவரையும்
அரவணைத்து, தென்னந் தோட்டங்களுக்குள்ளோ,கிராமப்புற டீக்கடையிலோ உட்கார்ந்து சரளமாக மக்களுடன்
பேசிக்கொண்டிருப்பார்கள்.
கிராமத்தை கடந்து விட்டால் இவர்களது உலகமே வேறு. சிங்கப்பூர், பாங்கொக், ரோம் (இத்தாலி )சந்தைகளில்
இவர்களை வாரா வாரம்; கட்டை களிசன்களுடன் குடும்பசகிதம்  தரிசிக்கலாம்.
உலக சந்தையில் விற்கப்படும் டாப் லெவல் செண்டுகள், பெர்பியம்கள்  இவர்களை வலம் வந்து கொண்டே இருக்கும்.
ஜாலி பேர்வழிகள்; அதற்காக ஜால்ராக்களும் கிடையாது. நிறைய பேரிடம் திருட்டுத்தனம் இருக்காது. தமது முன்னோர்கள்
கட்டிக்காத்த சொத்துப்பத்து, பட்டம் பதவி, வம்பு தும்பு அனைத்துக்கும் சொந்தக்காரர்கள்.
இங்கு நான் பெரியவனா நீ பெரியவனா என்ற போட்டி இருக்கும், ஆனால் பொறாமை இருக்காது.இங்கு வம்பு தும்பு
இருக்கும், வெட்டு குத்து இருக்காது.இருந்தாலும் இரவு ஆறு மணிக்கு பின் ஹாய் மச்சான் என்ற ஒரு தேனீர் பாட்டியில்
அல்லது  போத்தல் பார்ட்டியில் எல்லாம் மறந்து,பறந்து,கரைந்து  போகும்.
குரூப் நாலு –
மாவோயிஷம், லெனினிஷம், ஷேகுவேரயிஷம், கடாபியிஷம், முகம்மது நபியிஷம்( நாரே தக்பீர் ), தமிழிஷம்,
தரப்படுத்தலிஷம், லோயரிஷம், யுனிவெர்சிட்டியிஷம்  என சென்னை அங்கப்ப நாயக்கன்  ஸ்ட்ரீட் சைவக்கடை
அல்லது பெட்டா மீன்கடையை சாயலாக கொண்ட  பா.உ.க்கள்.
இது ஒரு சாம்பார்,இங்கு எல்லாமே கொட்டிக் கிடக்கும், கலந்துமிருக்கும் , இவர்களது நாடி, நரம்பு, மூளை, முண்ணான்,
மூக்கு, நாக்கு எங்கும் அரசியல் அரிச்சுவடி கரைந்திருக்கும்.கொள்கை வெறி பிடித்தவர்கள். விரல் நுனிகளில்
உலகம் இருக்கும், நாக்கு நுனியில் நுரை தள்ள பேசுவார்கள், இவர்களிடம் மாட்டினால், பாக்குவெட்டிக்குள்
மாட்டிய கொட்டைப்பாக்குகள்தான்.
தம்புள்ள மார்கட்டின் இன்றைய தக்காளியின் கிலோ விலை என்ன என்பது முதல்,சஹாரா பாலை வனத்தில் நேற்று
எத்தனை மில்லிமீட்டர் மழை பெய்தது என்பது வரை கட கட என ஒப்பு விப்பார்கள்.
ஒரு வேளைக்   கஞ்சிக்கு மண்வெட்டி பிடித்த; தாய் தந்தையர்களின் குழந்தைகள் முதல், பெருத்த, கொளுத்த வியாபாரிகள்,
படித்த பண்டிதர்களின் குழந்தைகள் வரை இதில் கலந்திருப்பார்கள். நல்ல மனமும், அன்பான குணமும், அருமையான
எண்ணங்களும் கொண்ட நல்ல உள்ளங்கள். பல்கலை கழகங்களிலும், போர்க்களங்களிலும்,ரோட்டோரங்களிலும் பயின்றவர்கள்.
கொள்கை குன்றுகள் என்று சொல்லித்தான் வாக்கு வேட்டையாடுவார்கள்.வாகாக பா.உ.க்களும் ஆவார்கள்.
பாவம் !!!!!
இவர்களை,இவர்களது கொள்கை, கோட்பாடுகள், கோட்டு, சூட்டு, பட்டம், பதவி, கதை, கலாச்சாரம் மொத்தத்தையும் குரூப் மூன்றுக்கு
சொந்தக்காரர்கள்; மிக மிக  அழகாக, பவ்வியமாக ; எண்ணி ஒரு மணி நேரத்தில் அல்லது ஒரு சொடக்கு போடுகின்ற கணத்திற்குள்
சப்பி,துப்பி, மென்று, முழுங்கி, காறி, உமிழ்ந்து  ஏப்பமிட்டு விடுவார்கள்.
ஆம்;
குரூப் மூன்று – இவர்களை மிக மிக  கட்சிதமாக விலைக்கி வாங்கி விடுவார்கள்.இவர்களும் சுகமாக  ஏலம் போவார்கள்.
இவர்களுக்கு வாக்களித்த மொத்த  மக்களும்  – மிக அழகாக இவர்களுக்கு பாவ  மன்னிப்பும் வழங்குவார்கள்.
குரூப்  ஐந்து.
போடுகாய்கள். போடுகாய் பா.உ.க்கள்; இவர்களை படைத்த ஆண்டவனுக்கோ அல்லது இவர்களதுதாய் குரங்குக்கோ
( டார்வினின் தத்துவப்படி ) தெரியாது இவர்கள் அடுத்த வாரம் பா.உ .க்கள் ஆவார்கள் என்று.
ஹமீடியாசில் ( Hameedia) வெரி,வெரி  ஏர்ஜென்ட் என  ஆர்டர் கொடுத்து கோட்டு சூட்டு தைக்கப்படும்,இவரது நண்பர்களும்,
உறவினர்களும் இவருக்கு போன் பண்ணி மச்சான் என்ன ? செய்தி உண்மையா என கேட்பார்கள்,சத்திய பிரமாணம் செய்யும் வரை
 இவருக்கே தெரியாது   தான் பா.உ. ஆவேன் என்று.
அதிர்ஷ்டமும் ஆச்செரியங்களும் கலந்த கலவைகள் இவர்கள்.  திடீர் அரசியல் சுழற்சிகள் ஏற்படும் போது, இவர்கள்
தாய்க்கட்சிக்கும், கட்சி தலைமைக்கும் கொடுக்கும் அலுப்பு இருக்கின்றதே, அது ஒரு பேரழகு. கொள்ளை அழகு.
இந்த ஐந்து வகையான பா .உ .க்களிடம் மாட்டிக்கொண்டுதான், இன்று இரண்டே கால் கோடி சிறிலங்கா சிட்டிசன்களும்,
ஒரு இருபது லட்ச வெளிநாட்டு வாழ், வெளிநாட்டு சிட்டிசன்களும் ( முன்னாள் சிறிலங்கன் ) மெல்லவும் முடியாமல்,
துப்பவும் முடியாமல் தடுமாறுகின்றனர்.
   15-12-2018.                                                                                                                                      (  தொடரும்  )