அதாவுல்லாவுக்கு பல முனைகளிலும்               பலம் சேர்த்த பாலமுனை பிரகடன மாநாடு!

 

(விருட்சமுனி)

தேசிய காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ. எல். எம். அதாவுல்லாவின் அரசியல் மீள் எழுச்சியில் கடந்த வாரம் நடந்து முடிந்த பாலமுனை பிரகடன மாநாடு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல் கல் ஆகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக எம். எச். எம். அஷ்ரப் பதவி வகித்தபோது அவருடன் சேர்ந்து பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தை நிர்மாணித்து கொடுத்ததில் அதாவுல்லாவின் பங்கும், பங்களிப்பும் நேரடியானதாக அமைந்து இருந்தது.

அதே போல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அக்கட்சியின் 19 ஆவது பேராளர் மாநாட்டை கடந்த வருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர் கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஆகியோரை அழைத்து வந்து பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில்தான் நடத்தி இருந்தார். அவருக்கு கிடைக்க பெற்று இருந்த அந்த மகத்தான சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் மக்களின் அரசியல் உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை மும்மூர்த்திகளிடம் எடுத்து சொல்லி அவர்களிடம் இருந்து உரிய தீர்வை வெளிநாட்டு இராஜதந்திரிகள் முன்னிலையில் அவர் கோரி இருக்க வேண்டும். அவர் அதை விட்டு விட்டு அம்மாநாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகு தாவூத்தை திட்டி தீர்க்கின்ற முட்டாள்த்தனத்தையே செய்தார். இவற்றை விசேடமாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு நினைவூட்டுகின்ற வகையிலேயே அதே பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் பாலமுனை பிரகடன மாநாட்டை அதாவுல்லா நடத்தி இருக்கின்றார்.

தேசிய காங்கிரஸின் பாலமுனை பிரகடனம் 05 தீர்மானங்களை கொண்டிருக்கின்றது. தேசிய காங்கிரஸின் இம்மக்கள் பேரணி அரசியல் அமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிக்கின்றது, ஆதலால் அரசாங்கம் இந்த இடைக்கால அறிக்கையை வாபஸ் பெறுவதுடன் எவ்வழியிலும் இதை சட்டமாக்க கூடாது என்று வலியுறுத்துகின்றது, நாட்டின் மூவினங்களையும் சேர்ந்த புத்திஜீவிகள் ஒன்றிணைந்து கலந்து பேசுவதன் மூலம் தற்போதைய அரசியல் அமைப்பில் சில திருத்தங்களை மாத்திரம் செய்து எல்லா சமூகங்களும் ஒன்றுபட்டு வாழ்வதற்கான அரசியல் முறைமை ஒன்றை உருவாக்க முடியும் என்று இயம்புகின்றது,

கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் உடனடி பிரச்சினையாக உள்ள புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை தேர்தல் திருத்த சட்டம் பாராளுமன்ற முறைமைக்கு புறம்பாக நிறைவேற்றப்பட்டதாலும், மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் போதிய அவகாசம் வழங்கப்படாமல் சட்டம் ஆக்கப்பட்டதாலும் இச்சட்டத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகின்றது, சிறுபான்மை மக்களின் பாராளுமன்ற பிரதிநிதிகள் குறிப்பாக முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்ற பிரதிநிதிகள் மேற்சொன்ன 04 தீர்மானங்களையும் நடைமுறைப்படுத்துவதற்காக செயற்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றது ஆகியனவே 05 தீர்மானங்களும் ஆகும்.

அரசியல் அமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையோடு நேரடியாக சம்பந்தப்பட்டவையாகவே இந்த 05 தீர்மானங்களும் காணப்படுகின்றன. இந்நிலையில் இந்த இடைக்கால அறிக்கை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாக இருந்தபோது அதற்கு முதல் நாள் மிக கச்சிதமாக திட்டமிட்டு பாலமுனையில் தீர்மான பிரகடனத்தை அதாவுல்லா நிறைவேற்றி உள்ளார். மேலும் தேசிய காங்கிரஸின் அரசியல் யாப்பு திருத்த யோசனைகளையும் இத்தீர்மானத்தோடு சேர்த்து வெளியிட்டு இருக்கின்றார்.

சிறுபான்மை மக்களின் உரிமை நலன் பாதுகாப்பு தொடர்பான எச்செய்கைகளும் பாரபட்சமாக கருதப்படலாகாது, சிறுபான்மை மக்களுக்கு ஆக குறைந்தது மாவட்ட இன விகிதாசார அடிப்படையிலான காணி உள்ளிட்ட வளப் பகிர்வு வழங்கப்படல் வேண்டும், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன் ஏனைய மதங்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்கிற தற்போதைய ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக சகல நிர்வாக மட்டங்களிலும் உள்ள இன, மத, மொழி பரம்பல் விகிதாசாரத்துக்கு அமைவாக அந்த அந்த மட்டங்களில் அங்கு உள்ள பெரும்பான்மை சமயத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், பொதுநல அக்கறை வழக்காடல் உரிமை வழங்கப்பட வேண்டும், சிறுபான்மை மக்களின் உரிமை நலன் பாதுகாப்பு தொடர்பான அரசியல் அமைப்பு ஏற்பாடுகள் சிறுபான்மை மக்களின் பொதுசன அபிப்பிராயம் பெறப்படாமல் மாற்றப்பட கூடாது ஆகிய யோசனைகளை இவற்றில் மிக முக்கியமானவையாக அரசியல் அவதானிகள் நோக்குவதுடன் ஜனாதிபதி பதவியில் மஹிந்த ராஜபக்ஸ தொடர்ந்து இருப்பாராக இருந்திருந்தால் எப்படியாவது இந்த யோசனைகளை அரசியல் அமைப்புக்குள் அதாவுல்லா கொண்டு வந்து இருப்பார் என்று கூறவும் செய்கின்றனர். பாராளுமன்றத்துக்கு உள்ளே இருந்து முஸ்லிம் எம். பிகள் கட்டாயம் பண்ண வேண்டிய அலுவலை இவர் வெளியே இருந்து அர்ப்பணிப்பு, பற்றுறுதி, விசுவாசம் ஆகியவற்றுடன் செய்கின்றார் என்றும் சுட்டி காட்டப்படுகின்றது.

மேற்சொன்ன இடைக்கால அறிக்கை உள்வாங்கி இருக்கின்ற அரசியல் அமைப்பு திருத்த யோசனைகள் சிறுபான்மை மக்களுக்கு பாதகமான அம்சங்களையே கொண்டிருக்கின்றன என்று முஸ்லிம் மக்கள் விளங்கி வைத்திருக்கின்றனர். ஆனால் அரசாங்கத்துடன் ஒட்டி இருக்கின்ற காரணத்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன இந்த யோசனைகளுக்கு ஒத்து ஊதுகின்றன என்பதை அறிந்து அவற்றின் மீது பாரிய அதிருப்தி அடைந்து காணப்படுகின்றனர். முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலியை நடத்துனராக கொண்டு செயற்படுகின்ற தூய முஸ்லிம் காங்கிரஸ் அணியும் மேற்சொன்ன இடைக்கால அறிக்கை சிறுபான்மை மக்களுக்கு பேராபத்தானது என்கிற நிலைப்பாட்டையே கொண்டிருப்பதாக கருத்துகளை வெளியிட்டு வருகின்றது. ஆயினும் தூய முஸ்லிம் காங்கிரஸோ, வேறு ஏதேனும் அமைப்புகளோ மக்களின் மனங்களை உணர்ந்து அரசாங்கத்தின் மீது அமுக்க குழுவாக செயற்பட தாமதித்த நிலையில் முதன்முதலாக இந்த இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பவரும் அதாவுல்லாவே ஆவார்.

நல்லாட்சிக்கான கோஷத்தை ஏற்று கொண்ட அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் கடந்த பொது தேர்தலில் அதாவுல்லாவை தோற்கடித்து விட்டனர். ஆனால் தோற்கடிக்கப்பட்டது அதாவுல்லா அல்ல, நல்லாட்சிக்கு வாக்களித்த மக்களே என்பதை பாலமுனை பிரகடன மாநாட்டுக்கு திரண்டு வந்திருந்த பல்லாயிர கணக்கானோரை கொண்ட மாபெரும் மக்கள் பேரணி நிரூபித்தது. அத்துடன் அதாவுல்லா தேர்தல் காலத்தில் கூறி இருந்த உண்மைகளை பொய்கள் என்று நம்பி ஏமாந்து விட்டதாக கழிவிரக்கப்பட்டு நின்றது.

எதிர்வரும் தேர்தல் ஒன்றுக்காக அரசியல் கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகின்ற நிலையில் தேசிய காங்கிரஸின் இன்றைய மக்கள் செல்வாக்கையும் இப்பேரணி பறை சாற்றியதுடன் அதாவுல்லாவுக்கு மீண்டும் ஒரு மிடுக்கை கொடுத்தது. மேலும் தூய முஸ்லிம் காங்கிரஸ் அணியினரால் உருவாக்கப்படுகின்ற முஸ்லிம் தேசிய கூட்டமைப்பில் அதாவுல்லா இணைந்து கொள்கின்ற விடயத்தில் அதிக பேரம் சக்தியை இப்பேரணி கொடுத்து உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

பெருந்தலைவர் அஷ்ரப் முஸ்லிம்களுக்கு வகுத்து கொடுத்த அரசியல் பாதையில் இருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன விலகி நடக்கின்றன என்றும் மக்கள் உணர்ந்து வைத்திருக்கின்றனர். ரணில் விக்கிரமசிங்கவை சாரதியாக கொண்டு உள்ள ஐக்கிய தேசிய கட்சி என்கிற வாகனத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் பயணிக்காது என்று பெருந்தலைவர் உபதேசித்து இருந்தார். ஆயினும் அவருடைய உபதேசத்தை மேற்சொன்ன கட்சிகள் புறம் தள்ளி நடக்கின்றன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே முஸ்லிம்களுக்கு பிரச்சினையாக மாறி உள்ள இடைக்கால அறிக்கையின் சூத்திரதாரி என்கிற வகையில் பாலமுனை பிரகடனம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரானது என்பது வெளிப்படையானதே ஆகும். இது இப்பிரகடன மாநாட்டில் அதாவுல்லாவால் வெளிப்படையாகவே சொல்லப்பட்டது. இந்நிலையில் பெருந்தலைவர் அஷ்ரப் இல்லாது இருக்கின்ற இடைவெளியை நிரப்ப கூடிய தலைவர் என்கிற அடையாளத்தையும் இம்மாநாட்டில் அதாவுல்லா வெளிப்படுத்தி நின்றார்.

தேசிய காங்கிரஸை அதாவுல்லா வட மாகாணத்துக்கு விஸ்தரிப்பு செய்த பிற்பாடு இக்கட்சியின் மகளிர் அமைப்பாளரும், வட மாகாண பொறுப்பாளருமான ஜான்சிராணி சலீம் தலைமையிலான வட மாகாண செயற்பாட்டாளர்கள் கிழக்கு மாகாணத்துக்கு வந்து பங்கெடுத்த முதலாவது மாநாடு என்கிற வகையிலும் பாலமுனை பிரகடன மாநாடு முக்கியத்துவம் பெற்று உள்ளது.

அதாவுல்லாவின் விசேட அழைப்பின் பெயரில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சுபைர் சிறப்பு விருந்தினராக இம்மாநாட்டில் கலந்து கொண்டார். இது மத்தியில் உள்ள அதிகார மையங்களில் ஒன்றின் அன்பும், அரவணைப்பும் தேசிய காங்கிரஸுக்கு உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லியது.

அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸுக்கு இப்போது அரசியல் அதிகாரம் எதுவும் கிடையாது. ஆனால் பெருந்தொகை மக்கள் மாத்திரம் அன்றி அரசியல் செயற்பாட்டாளர்கள் பலரும் தேசிய காங்கிரஸை விருப்ப தெரிவாக கொண்டிருக்கின்றனர் என்பதை கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜவாஹிர் சாலி இம்மாநாட்டில் வைத்து தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்ட சம்பவம் படம் பிடித்து காட்டியது.

எவை எப்படி இருப்பினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பகைத்தோ, மிகைத்தோ அரசியலில் எந்தவொரு நடவடிக்கையையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்ய முடியாது இருக்கின்ற நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சூத்திரதாரியாக கொண்ட இடைக்கால அறிக்கையை நிராகரித்து அதாவுல்லா தீர்மானம் நிறைவேற்றி இருப்பது அவருக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மூலமாக விரைவில் கிடைக்க பெறலாம் என்று பேச்சுக்கள் அடிபடுகின்ற தேசிய பட்டியல் எம். பி பதவி, அமைச்சர் பதவி ஆகியவற்றில் தலை கீழான மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று கூறுகின்ற ஆய்வாளர்களும் உள்ளனர்.

ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியல் எம். பியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நியமிக்கப்பட உள்ளார் என்று ஊடக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் இதன் மூலமாக தென்னிலங்கை அரசியலிலும், தேசிய அரசியலிலும் பல முக்கியமான அதிரடி மாற்றங்கள் நேரலாம் என்று அதாவுல்லா கணக்கு போட்டு வைத்திருக்கின்றார் என்று இவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.