அபிவிருத்தியை அரசியலும் அரசியலை உரிமையும் நகர்த்த வேண்டும்’

‘தமிழ் மிரர்’ பத்திரிகைக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவரது செவ்வியில் விவரம் வருமாறு:

கே: உங்களது தந்தை, தமிழ் அரசியலில் முக்கிய பங்குக்குரியவர்; உங்களது அரசியல் பிரவேசம் பற்றிக் கூறுங்கள்?

நான் 14 வயதிலேயே பெற்றோரை இழந்து அநாதையாக்கப்பட்டு, வெளிநாட்டுக்குச் சென்றவன். போர் முடிந்த சூழலில், நாட்டுக்குத் திரும்பிய வேளை, பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருந்த மக்களுக்குப் பொருளாதார மீட்சி வேண்டும் என்ற வகையில் தான், தேசிய அரசியல் மூலமாகப் பல மாற்றங்களைக் கொண்டுவரலாம் என்ற நம்பிக்கை காரணமாகத்தான், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தேன்.

முக்கியமாக கே. டபிள்யூ தேவநாயகம், ஐக்கிய தேசிய கட்சியின் மூலமாகவும் ராஜன் செல்வநாயகம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஊடாகவும் மட்டக்களப்பில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்வைத்தார்கள் என்ற வகையில், அந்த வழிகாட்டலில் நானும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூலமாகச் செயற்பட்டு, மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மத்தியில், மாற்றத்தைக் கொண்டுவரலாம் என்ற எண்ணத்தில் செயற்பட்டேன்.

ஆனால், நான் உணர்ந்த சில விடயங்கள் என்னவென்றால், இலங்கையில் தேசிய கட்சி என்று எதுவும் இல்லை. அது, சிங்களத் தேசிய கட்சிகளாகவும் தமிழ்த் தேசிய கட்சிகளாகவும் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அவர்களது தேசிய சிந்தனையுடைய கட்சிகளாகவுமே இருக்கின்றன. எனவேதான், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் தேர்தலில் போட்டியிடவில்லை. என்னுடைய நிலைப்பாடானது, இணக்கப்பாட்டு அரசியலே மக்களுக்குத் தேவையாக இருக்கிறது என்பதாகும். தேவை ஏற்படுகின்ற போது, இணக்கப்பாட்டு அரசியலுக்குச் சென்று, எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். எமது அரசியல் அபிலாசைகளைக் காலப்போக்கில், சாதகமான சூழ்நிலை ஏற்படும் காலங்களில் தீர்வைக் காணவேண்டும் என்பதுதான், என்னுடைய ​அரசியல் பாதையாக இருக்கின்றது.

ஒரேயொரு மாற்றம் என்னவென்றால், சிங்களக் கட்சிகளில் நாம் போட்டியிடுவதை விட, எமது தமிழ்க் கட்சியின் ஊடாக வெற்றி பெற்று, பேரம் பேசி, நாங்கள் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. அதன் அடிப்படையில்தான், மக்கள் முன்னேற்றக் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்து, அந்தக் கட்சியின் ஊடாகச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறேன்.

கே: யுத்த மௌனிப்பின் பின்னரான சமகால அரசியல் சூழ்நிலையில், தமிழர்களது அபிலாசைகள் தொடர்பாக, உங்கள் தந்தையின் பாதையில் செல்வீர்களா, மாற்றுப் பாதையைத் தெரிந்துள்ளீர்களா?

அபிலாசைகள் என்ற விடயத்தில், தந்தையின் காலத்திலிருந்து ஒரு மாற்றுப் பாதை இருக்கின்றது. 1976ஆம் ஆண்டிலிருந்து, தமிழீழம் அமைய வேண்டும் என்ற கருத்திலிருந்துதான், என்னுடைய தந்தையார் உட்படப் பலர் இருந்தார்கள். ஆனால், இலங்கை- இந்திய ஒப்பந்தத்திலிருந்து ஒரு மாற்றம் ஏற்பட்டது. தமிழ்த் தேசியம் என்ற விடயத்தில், எல்லோருமே தடம் மாறிய தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள் தான்.

ஏனென்றால், இலங்கையினுடைய அரசமைப்பின் 5ஆம் திருத்தச்சட்டத்தின் அடிப்படையில், சத்தியப்பிரமாணம் எடுத்துத் தான் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அது, தமிழர்களுடைய அபிலாசைகளாகக் கருதப்படுகின்ற தாயகம், தேசியம், சுயநிர்ணயம் ஆகிய மூன்றுக்கும் மாறாகவே சொல்கிறது. இவற்றுக்கு மாறாகச் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டு, நாங்கள் தமிழ்த் தேசியத்தைத் தடம் மாறாமல் காப்பாற்றுகின்றோம் என்று பறை சாற்றுவது போலித்தனமாகும்.

விடுதலைப் புலிகளையும் பிரபாகரன் அவர்களையும் விட்டுவெளியில் பார்த்தால், கிட்டத்தட்ட அனைத்துத் தலைவர்களும் போராட்ட இயக்கங்களும் இலங்கையினுடைய இறையாண்மையை ஏற்றுக் கொண்டுதான் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள். அதை உண்மையாக ஏற்றுக் கொள்கிறார்களா இல்லையா என்பதற்கு, வேறு ஒரு வாக்குவாதத்துக்குச் செல்ல வேண்டும்.

என்னுடைய நிலைப்பாடு, தந்தையாருடைய நிலைப்பாடுதான்; இலங்கை- இந்திய ஒப்பந்தத்தை அடிப்படையாக வைத்து, ஓரிரு தசாப்தங்கள் தமிழர்களைப் பலப்படுத்த வேண்டும். இந்த வழியில், நீண்ட நாளைய குறிக்கோளை அடையாலாம். வெறுமனே குறிக்கோளை எண்ணிக் கொண்டால், இருக்கின்ற இருப்பும் இல்லாமல் போய்விடும் என்பதுதான், எங்களுக்குள் இருக்கின்ற ஆதங்கமும் எண்ணமும் ஆகும்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அம்பாறை மாவட்டம் பிரிக்கப்பட்டகாலத்தில், எமக்குத் தீர்வு வந்தால், இருந்தவையெல்லாம் பழையபடி வந்துவிடும் என்பதாகத்தான் இருந்தது. ஆனால், 60 வருடங்கள் சென்றும் எந்தத் தீர்வும் வரவில்லை என்பதுதான், எங்களுடைய அரசியல் அனுபவம். எனவே, தீர்வு வரும் என்ற எண்ணத்தில், எங்களுடைய மக்களின் அடிப்படைத் தேவைகளையும் இன்றைய சவால்களையும் நாங்கள் ஒதுக்கிவைத்துவிட்டு அரசியல் செய்யமுடியாது.

1976களில், தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் தொண்டமான் இணைந்துவிட்டு, “தமிழீழம் இன்றைக்குச் சாத்தியமில்லாததொரு விடயம்; நான், என்னுடைய மக்களது விடயங்களைப் பார்க்க வேண்டும்” என்று கூறிவிட்டுப் போனார். அதேபோல், நாங்கள் இன்றைக்கு, எங்களுடைய அரசியல் குறிக்கோள் எப்படியும் இருக்கட்டும், எங்களுடைய மக்களது வாழ்வாதாரத் தேவைகளைப் புறந்தள்ளிவிட்டு, அரசியல் பேசத் தயாரில்லை. மக்களுடைய எதிர்காலத்தைப் பலப்படுத்திக் கொண்டுதான், எங்களுடைய அரசியலை முன்னெடுக்க முடியும். அந்த விடயத்தில், எனக்கும் எனது தந்தையாருக்கும் வேறுபாடு இருக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும்.

கே: தமிழர்களது அரசியல் தீர்வு தொடர்பாக, நீங்கள் எத்தகைய தீர்மானங்களை எடுத்துள்ளீர்கள்?

ஒன்றிணைந்த வடகிழக்குத் தான் என்னுடைய நிலைப்பாடு; தமிழர்களுடைய தாயகமாக வடக்கு, கிழக்கு இருக்கின்றது. சிங்கள தேசமும் 1958ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விசேட திருத்தத்தின் ஊடாகத் தமிழ் மொழி, வடகிழக்கினுடைய நிர்வாக மொழியாகவும் அரச கரும மொழியாகவும் இருக்கும் என்று பிரகடனப்படுத்தப்பட்டது. அந்தச் சட்டச் சீர் திருத்தத்திலேயே குறிப்பிடப்படுவது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி உத்தியோகபூர்வ மொழியாகவும் ஏனைய மாகாணங்களில் சிங்கள மொழியும் இருக்கும் என்பதுதான் அந்தச் சட்டத்தினுடைய கூற்று. அதிலிருந்து எடுக்கக்கூடிய விடயம் என்னவென்றால், வடக்கு, கிழக்கில் தனிச்சிங்களத்தைக் கொண்டுவர முடியாது; இது தமிழர்களின் தாயகம் என்பதையும் அன்றைய சிங்களவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இந்த நிலையிலிருந்து பார்க்கும் போது, சிங்கள தேசமே ஏற்றுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு வரைக்கும் ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அதனை வெளியிலே அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தமிழர்களென்று தனித்துவமாக இருக்கிறோம் என்பதைக் காட்டிக்கொண்டே இருக்கிறது.

எனவே, முதல்கடமை தாயகத்தை ஒரு செழுமையான நிலைக்குக் கொண்டுவர வேண்டும். அதன்பின்னர்தான் தேசியத்தையும் சுய நிர்ணயத்தையும் பற்றிச் சிந்திக்கலாம் என்பது எனது கருத்து

கே: உரிமை அரசியலில் இருந்து கொண்டு அரசியல் செய்வதே, தமிழர்களின் வரலாறு; உங்களது கருத்து என்ன?

உரிமை அரசியல் என்று கூறுவதைவிட, உரிமையை வைத்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. அவர்கள், மக்களிடம் உண்மையை எடுத்துக் கூறவில்லை. 1948ஆம் ஆண்டிலிருந்து, உரிமைக்காகத் தமிழர்கள் பல வழிமுறைகளைத் தேடிவிட்டோம். எல்லாக் குறைகளையும் தமிழ் அரசியல்வாதிகள் மீது சுமத்தமுடியாது. சிங்களத் தேசமும் சிங்கள அரசியல் தலைவர்களும் தமிழர்களுக்கு உகந்த தீர்வைக் கொடுத்திருந்தால், தனிநாடு கேட்டு ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்காது.

ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்னர், நாங்கள் வரலாற்றைப் பின்நோக்கிப் பார்த்து, சாணக்கியமான அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளவேண்டும். வெறுமனே உரிமை, உரிமைக்கு உரித்தானவர்கள், அபிவிருத்திக்கு உரித்தானவர்கள் என்று எவரையும் கூறமுடியாது.

நல்ல அரசியல் தலைமைத்துவம் உரிமையை எடுத்துக் கொள்கின்ற விடயத்தில், உதாரணமாக, கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவது அப்பிரதேச மக்களின் உரிமை; அந்த உரிமையை இணக்கப்பாட்டு அரசியலின் மூலமாக மட்டும் தான் பெறமுடியும். அதேநேரத்தில், சுயநிர்ணய உரிமையை எடுத்துக் கொண்டால் அதுவும் தமிழர்களின் உரிமைதான். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் அதை இணக்கப்பாட்டு அரசியலின் மூலம் பெறமுடியாது. ஏன், எதிர்ப்பு அரசியலின் மூலமாகக்கூட பெறமுடியாது. பூகோள அரசியல், சர்வதேச அரசியல் நகர்வுகள் மூலமாக மட்டுமே பெறமுடியும்.

கே: அபிவிருத்தி அரசியலையே தமிழர்கள் இப்போதைய நிலையில் கைக்கொள்ளவேண்டுமென்ற கருத்துக்கு உடன்படுவீர்களா?

அபிவிருத்தியும் அரசியலும் என்றுதான் கொள்ள வேண்டும். அபிவிருத்தி மக்களின் தேவை. அபிவிருத்திக்கான திட்டங்களைச் சரியானமுறையில் வகுக்க வேண்டும். அபிவிருத்தி அரசியல் வேறு; உரிமைக்கான அரசியல் வேறு என்று பார்க்க முடியாது.

மக்களின் தேவை அபிவிருத்தி என்றால், அதை அரசியல் நகர்த்த வேண்டும். மக்களுக்கு உரிமை என்ற தேவை இருக்கின்றது. இன்று இருக்கின்ற தேவை என்னவென்றால், இணக்கப்பாட்டு அரசியல்; எதிர்ப்பு அரசியல் என்று பார்க்கும் ​போது, எதிர்ப்பு அரசியலில் மட்டும் எங்களது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது. அதேநேரத்தில், எதிர்க்க வேண்டிய விடயங்கள் வருகின்ற போது, இணக்கப்பாட்டோடு அரசியலைச் செய்து கொண்டு, எதிர்க்க முடியும்.

கே: கடந்த கால அரசியல் நகர்வுகளிலிருந்து தமிழர்கள் கற்றுக் கொண்ட பாடம் என்று எவற்றைச் சொல்வீர்கள்?

தமிழர்கள் தமது நகர்வைக் குறுகிய காலப்பகுதிகளில் வகுக்க வேண்டும். முக்கியமாக, ஒவ்வொரு ஐந்து வருடங்களும் ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் என்று அந்தக் காலத்துக்கு ஏற்றவகையில், தமிழ் அரசியல் தலைவர்கள் நகர்த்த வேண்டும். முக்கிய பாடம் என்னவென்றால், தமிழர்களிடம் தமிழ்த் தேசிய அரசியல் சிந்தனையாளர்கள், ஒருமித்த பலத்தைத் தாருங்கள் என்று அரசியலை நகர்த்தி வந்தார்கள். தமிழர்கள் உணர வேண்டிய ஒரு பாடம் என்னவென்றால், சிங்கள இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இடதுசாரிக் கட்சிகள் இருந்து வந்திருக்கின்றன.

தமிழ் மக்களை மட்டும், மாற்று அரசியல் கருத்துகள் இல்லாமல், ஒரே குடைக்குள் மட்டும் இருங்கள் என்று கூறுவது, தமிழ் மக்களுக்கு ஒரு பாதகத்தைக் கொடுக்கும். தமிழ் மக்களின் தேவைக்காக, அரசியலுக்காக மாற்றுச் சிந்தனையுடையதாக ஒரு தேசிய இனம், தமது விடுதலைக்காகப் பல வகைகளைக் கையாண்டு, தோல்வியடைந்த நிலையில் இருந்துமீள, மாற்றுச் சிந்தனைகளுக்கு வழிவகுக்க வேண்டும்.

வடமாகாணத்தில் மாற்று சிந்தனைகள் இருக்கின்றன. மாற்றுச் சிந்தனைகளுக்கென்று ஒரு சாராரும் அதி தீவிர பிரிவினைவாதச் சிந்தனையுடன் ஒரு சாராரும் நாங்கள் தான் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்று ஒருசாராரும் இருந்து கொண்டு அரசியல் செய்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில், மாற்றுச் சிந்தனைகள் இருக்கின்றன. அதைப் பிரதிபலிக்கும் வகையில் அரசியல் வளரவேண்டும்; வளரும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.

கே: பொருளாதாரத் துறைசார்ந்தவர் என்ற வகையில், உங்களது திட்டங்கள் என்ன?

அடிப்படையாக எமது பொருளாதாரத்தை வளர்க்க வேண்டுமாக இருந்தால் வெறுமனே அரச கட்டமைப்புகளுக்கூடாக மாத்திரம் வளர்க்க முடியாது. எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மட்டக்களப்புக்கென்று தொழில்பேட்டைகள் உருவாக்கப்பட வேண்டும். தொழில்பேட்டைகளுக்கு அரசு செய்ய வேண்டியது என்னவென்றால் அதற்கான இடங்களை அடையாளப்படுத்தி, இடங்களைக் கொடுத்து பொது வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மட்டும் தான். முதலீட்டாளர்களை மட்டக்களப்புக்கு அழைப்புக் கொடுத்து, அவர்கள் மூலமாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தான் இன்றைய யதார்த்தம். அதை முன்னெடுப்பதற்கான திட்டம் எம்மிடமிருக்கின்றது.

இலங்கையின் கரையோரப் பிரதேசத்தைப் பார்த்தால் மட்டக்களப்பு கரையோரப் பிரதேசத்தில் மாத்திரம் தான் நவீன வசதிகள் கொண்ட மீன்பிடித் துறைமுகங்கள் இல்லை. அதற்குக் காரணம் என்ன என்பதனை நன்கு உணர்ந்தவர்களாக விவசாயத்துறையை, மீன்பிடித்துறையை, தொழில் வளத்தை உருவாக்குவதுஅவசியம். மட்டக்களப்புக்கு வரும் 90 சதவீதமான நீர், வாவிக்கும் கடலுக்கும் சென்றடைகிறது. இந்த நீரைச் சரியான நீர்ப்பாசனத் திட்டங்களைக் கொண்டு வருவதன் மூலம், எமது மாவட்டத்தின் முதுகெலும்பாக இருக்கின்ற நெற்செய்கையை மாற்றமுடியும். முக்கியமாக 02 இலட்சத்து 38ஆயிரம் ஏக்கர் நிலத்தில், வெறுமனே 80 ஆயிரம் ஏக்கர் நிலம் தான் நீர்ப்பாசனத்துக்கு உட்பட்டிருக்கிறது, 400 குளங்களில் 200 குளங்கள்தான் குளங்களாக இருக்கின்றன. எனவே, மட்டக்களப்புக்கென்று ஒரு நீர்ப்பாசனத் திட்டத்தைக் கொண்டுவரவேண்டும். கிரான்புல்கட்டு, கண்டியனாற்றுக் குளம் என்று பல திட்டங்கள், தேர்தல் காலங்களில் கூறப்பட்டு மறக்கப்படுகின்ற விடயங்களாக இருக்கின்றன. அதை நிறைவேற்றும் ஆணையைத்தான் நான் மக்களிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.

கே: தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழர்களின் அரசியலில் விமர்சனங்களுடன் உள்ள நிலையில் அதைத் தேர்வு செய்ததற்குக் காரணம்?

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விமர்சனம் இருக்கின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியை அப்பழுக்கற்ற கட்சியாகத்தான் பார்க்கின்றேன். தமிழர் விடுதலைக் கூட்டணியின் ‘சூரியன்’ சின்னம், பாரம்பரிய சின்னமாக இருந்து வந்திருக்கின்றது. அரசியல் தலைவர்கள் அவர்களது அடையாளத்தை வைத்து, கட்சியின் பாரம்பரியத்தைப் பார்க்க முடியாது.

ஒட்டு மொத்தமாக, தமிழ்த் தேசிய சிந்தனையையோ, தமிழரசுக் கட்சியையோ தூக்கி எறிய முடியாது என்பதுதான் அரசியல் யதார்த்தம். தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதைப் பலரும் பேசுகின்றோம். நாங்கள் ஒரு தொலை நோக்கத்துடன் பயணிக்கின்றோம். அது பற்றி, தேர்தலுக்குப்பின் கூறமுடியும்.

கே: உரிமை அரசியலில் இருந்து தமிழர்களை விடுவிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?

ஒருபோதும் உரிமை அரசியலிலிருந்து தமிழர்கள் விடுபட வேண்டும் என்று கூறவில்லை. உரிமையை வைத்து அரசியல் செய்திருக்கின்றார்கள். உரிமை அரசியல் செய்யவில்லை என்றுதான் கூற வேண்டும். முக்கியமாக, கடந்த 10 வருடங்களில், உரிமையை வைத்து நாடகம் ஆடினார்களே தவிர, உரிமை அரசியலை முன்னெடுக்கவில்லை.

கே: மட்டக்களப்பு அரசியலரங்கில் பகிரங்க விவாதம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அறிகிறோம்?

இன்றைய நிலையில் நாங்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் ஒரு பகிரங்க விவாதத்துக்கு வரவேண்டும். முக்கியமாகத் தலைமை வேட்பாளர்கள் வருகை தந்தால், எமது நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கூற முடியும். இன்றுவரை யாரும் பகிரங்க விவாதத்துக்குத் தயாராக இல்லை என்றே ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள். எமது நிலைப்பாடுகளை, அரசியல் நிலைப்பாடுகளை மக்கள் முன் பகிர்ந்து தெளிவுபடுத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த முடியும். இந்தப் பகிரங்க அழைப்பை தலைவர்களிடம் மீண்டும் மீண்டும் விடுகிறேன்.