அமெரிக்காவே எமது உறவுகளை மீட்டுத்தாருங்கள்………..?

(சாகரன்)

ஆயிரம் நாட்களை நோக்கி போராட்டம் ‘காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை மீட்டுத் தாருங்கள்” வவுனியாவில் நடைபெற்றுவருகின்றது. சாத்வீகமான முறையில் நடைபெற்று வரும் இந்த நீண்ட நியாயமான போராட்டம் 2009 ம் ஆண்டு மே மாத யுத்த முடிவின் போது ஏற்பட்ட காணாமல் போனவர்களை மையப்படுத்தி நடைபெற்றுவருகின்றது. நியாயமான போராட்டம் இதற்கு பொறுப்பு கூற வேண்டிய இலங்கை அரசு இதுவரையில் அவ்வப் போது “சூடு தணிக்கும்” வாக்குறுதிகளை வழங்கி வந்தாலும் இதுவரை ஒரு ஆக்கபூர்வமான நகர்வுகளை மேற்கொள்ளவில்லை.

அதே வேளையில் தமிழ் மக்களால் பெரிய அளவில் நம்பப்பட்டு பாராளுமன்னறத்திற்கு அனுப்பப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான செயற்பாடுகள் எதனையும் செய்யவில்லை. கூடவே இலங்கை அரசுடன் ‘நல் உறவில்” இருக்கும் இவர்கள் அரசிற்கான அழுத்தங்களை ஏற்படுத்தி தீர்வு எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை.

இதன் தொடர்ச்சியாக இந்த போராட்டத்தில் ஈடுபடும் மக்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும், இந்த கருத்து நிலைக்கு ஆதரவானவர்களும் இலங்கை அரசின் மீதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீதும் அதிருத்தி மட்டுமல்லாமல் முற்று முழுதான நம்பிக்கை இழந்தவர்களாக காணப்படுகின்றனர். இவர்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கத்திற்கு அப்பால் எதிர் கட்சிகளோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அப்பால் உள்ள தமிழர் தரப்பு கட்சிகளோ இதுவரை ஏற்படுத்த முடியவில்லை.

இதன் வெளிப்பாடாக சில தினங்களுக்கு முன்பு இப்போராட்டக்காரர்களால் நடாத்தப்பட்ட ஊர்வலம் ஒன்றில் முக்கிய கோஷமாக “அமெரிக்காவே எமது பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள்…” என்ற சரணாகதி கோஷம் எனக்கு ஈனமாகவே காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. உலகத்தில் பல்வேறு யுத்தங்களுக்கும், ஆக்கிரமிப்பு, மேலாண்மை போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும் அமெரிக்காவிடம் நாம் எமது மனிதாபிமான கோரிக்கையிற்கான தீர்வை எதிர்பார்த்து நிற்பது எவ்வளவு அபத்தமானது.

அது மட்டும் அல்லாது இலங்கையில் தனது கால்களை பதித்து ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா போன்ற நாடுகளில் நடைபெறும் ‘குண்டு வெடிக்கும் கலாச்சாரச்சாரத்ததை” பயங்கரவாதத்தை அடக்குகின்றோம் என்று கால்பதித்த வரலாற்றை நாம் எமது யுத்த காலத்தில் கண்ட பின்பும் இதற்கு காரணமாக அமெரிக்காவை இரைஞ்சி அழைப்பது மக்களின் அறியாமை என்று மட்டும் என்னால் புறந்தள்ளிவிட்டுச் செல்ல முடியவில்லை.

ஒருபுறம் இஸ்லாமிய பயங்கரவாதத்தை அடக்க நாம் எமது “ஆலோசகர்”களை அனுப்புகின்றோம் என்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மறுதினமே ‘தயார் நிலையில்” உள்ள படைகளை இலங்கையிற்கு அனுப்பியதோடு மட்டும் அல்லாமல் ‘…..நாமே பார்த்துக் கொள்கின்றோம்….” என்ற இலங்கை அரசின் நிலைப்பாட்டை நிராகரித்து சர்வதேச ஒத்துழைப்புடனேயே இதனை அணுக வேண்டும் என்ற ஆணையும், செயற்பாடும் இலங்கையில் அமெரிக்காவின் பிரசன்னம் முனைப்புடன் செயற்பட்டு வருவதைக் காட்டுகின்றது. இதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக சீனாவின் இலங்கை மீதான செற்பாடுகளுக்கு அப்பால் இன்னும் பலவும் உண்டு.

இந்நிலையில் ‘எமது உறவுகளை மீட்டுத்தாருங்கள் அமெரிக்காவே” என்ற எம ;தரப்பு கோஷம் கொதி பானையில் இருந்து நெருப்பினுள் விழும் செயற்பாடாகவே பார்க்க முடிகின்றது. எமது மக்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. அதுவும் 2009 மே மாதம் என்று இல்லாமல் இதற்கு முந்தைய காலங்களிலும் சிறப்பாக ஈழவிடுதலைப் போராட்ட காலத்திலும் காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை மீட்டுத்தாருங்கள் என்று விரிவு படுத்தப்பட வேண்டும். இதே வேளை எமது மீட்போன் நிச்சயமாக அமெரிக்கா அல்ல மாறாக சர்வதேச சமூகமும், ஐ.நா. சபையும் தான். ஐ.நா.சபை இன்று அமெரிக்காவின் செல்வாக்கு வலையத்திற்குள் முழுமையாக வீழ்த்த முடியவில்லை என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஐ.நா. சபை மீதான நம்பிக்கையை தொடருவோம்.

போராடும் இந்த மக்களிடம் இருக்கும் தெளிவற்ற ‘இரஞ்சலை” தெளிவுபடுத்த வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை சிறப்பாக தமிழ் மக்கள் மத்தியில் உள்ள இடதுசாரி சிந்தனையாளர்கள் செயற்பாட்டாளர்களின் கடமை. இதில் முன்னாள் விடுதலை அமைப்பு ஜனநாயக, இடதுசாரிப் போராளிகள் கணிசமான செயற்பாடுகளை செய்தே ஆகவேண்டும். அன்றேல் ட்றம் என்பவரே எமது மீட்போன் என்ற மோசமான கருத்தியலை எமது மக்கள் மத்தியில் இருந்து அகற்ற முடியாது.