அம்பேத்கர் வெறும் நிறுவப்பட்ட சிலை…..?

அவ்வளவே !

மற்றபடி –
எனக்கு அதிர்ச்சியும் வரவில்லை.
ஆத்திரமும் வரவில்லை.

கொந்தளிப்போரைக் கேட்கிறேன்,
‘அம்பேத்கர் வெறும் நிறுவப்பட்ட சிலை.
அவர் அங்கே கல்லாய் சமைந்து நிற்கிறார்’
என்றால் ஒப்புவீர்களா?

இல்லை.

அந்தப் பேரறிஞன்
வெறுமனே, கல்லாய்…சிலையாய்…
இல்லவே இல்லை.

உறுத்துகிறான்.
உறுத்திக்கொண்டேயிருக்கிறான் .

நமக்குத்தான், பிறந்தநாள் இறந்தநாள் என்று
மாலை சூட்டுகிற நாளில் அம்மேதகு மனிதன்
சிலையாய் நிற்கிறான்.

சாதிச் சழக்கர்களுக்கும் –
நீதி மறுப்பவர்க்கும் –
மடமையில் ஊறியவர்க்கும்,
மண்டூகங்களுக்கும்
அவன் ஓர் உறுத்தலாகவே
தீண்டிக் கொண்டிருக்கிறான்.

சிலையென்று அவர்களால்
கடந்துபோகமுடிவதில்லை.

அவர்களின் இழிகுணத்தை
கேள்விகள் கேட்கிறான்.
சேறுபடிந்த ஆழ்மனத்தை
அசைத்துப் பார்க்கிறான்.
சனாதனத்தை அசைத்து அலைக்கழிக்கிறான்.
பொய்யான மரபுகளை உடைக்கக் கோருகிறான்.

பத்தடிச் சிலை அவர்களின் கண்களுக்கு
வான்முட்டும் கோபுரமாகத் தெரிகிறது.

அச்சுறுகிறார்கள்.

தினம்தினம் அவர்களை
உலுக்குகிறான்.
உறுத்துகிறான்.

கேள்விகளும் பதில்களுமாக அவர்கள் உழலுகிறார்கள். பிற்பாடு, அவர்களுள்ளும்
கேள்விகள் பிறக்கின்றன.

பதிலைத் தேடுகிறவன் அறிவை நாடுகிறான்.
இயலாதவன் குற்றஉணர்வோடு
கல்லையும் கடப்பாறையையும் தூக்குகிறான் .
சிலையை உடைக்க ஓடுகிறான்.

அவன் அறிவிலி.
அவனை அடித்துத் திருத்தவே ஏலாது.

காலகாலங்கள் விஷமூற்றி வைத்த பாகுபாட்டிற்கான குடுவை அவன் மூளை.
அதை ஒருநாள் தண்ணீரால்
கழுவிவிட முடியாது.

இங்கே, இறுகிய மண்டையோடுகளின் எண்ணிக்கை
லட்சோபலட்சம்.
உடனே பெயர்த்துவிடவும் முடியாது.

கடப்பாறைக்கு கடப்பாறை
ஆத்திரத்துக்கான அந்தநிமிட வடிகால்தான்.
அவன் மூளையை மாற்றுவதற்கு
மூளைதான் வேண்டும்.

நாம் வாழப்போவது போர்க்களங்களிலோ சுடுகாடுகளிலோ அல்ல.
சமரசமான சமுதாயத்தைப் படைக்க
ஆத்திரத்தால் ஒருபோதும் முடியாது.

ஆயிரம் வேறுபாடுகளுடன்தான்
என் போன்றோரால்
அம்பேத்கரைக் கடக்கமுடிகிறது.
ஆனால் –
அடிமைக்கான விடுதலை என்கிற ஒற்றைப்புள்ளியில் நாங்கள் கட்டித்தழுவுகிறோம்.
ஓருயிராகிறோம்!

மனித ஒடுக்குமுறைக்கெதிராக
எல்லா சல்லடைகளையும் சலித்துப் பார்த்த
ஒற்றை இலக்குப்போராளி அவன்.

ஒடுக்குமுறைக்கு எதிரல்லாத
வேறுநோக்கங்களில்லாத அந்த
மாமானுடனை நிறுத்துவதற்கு
அறிவுத் தராசுகளே தள்ளாடிக்கொண்டிருக்கும்போது,
கிணற்றுத்தவளைகளிடம் நாம்
மல்லுக்கட்டிக்கொண்டிருக்கக்கூடாது.

வாருங்கள், அவனைக்
கடைக் கோடிக்கும் கொண்டுசெல்வோம்!
அவன் ஆசையை நிறுவுவோம்!