அயர்லாந்து வரி ஏய்ப்பு: அப்பிளைக் கடித்தது யார்?

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அரசு யாருக்கானது என்ற வினா இடையிடையே எழும். காலங்காலமாக அரசாங்கத்தின் வகிபாகம் தொடர்ந்து மாறிவந்துள்ளது. அரசின் பிரதான வகிபாகம், இருந்துவரும் சமூக அமைப்பைப் பாதுகாப்பதும் சமூக உறுதியை நிச்சயப்படுத்துவதுமாக இருந்தது. ஆனால் இன்று அரசாங்கம் வெளிப்படையாகவே மக்கள் விரோதமான, சமூக நலன்களை இல்லாதொழித்துப் பல்தேசியக் கம்பெனிகளுக்குச் சேவகம் புரிவதாக வளர்ந்துள்ளது. இம் மாற்றம் உலகமயமாக்கலும் சந்தைப் பொருளாதாரமும் உலக அலுவல்களைத் தீர்மானிப்பதன் விளைவாக உருவானதாகும்.

கடந்த வாரம் ஐரோப்பிய ஆணையகம், உலகின் மிகப்பெரிய பல்தேசியக் கம்பெனிகளில் ஒன்றான அப்பிள் நிறுவனம் அயர்லாந்து அரசாங்கத்துக்கு 14.5 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அப்பிள் நிறுவனம் அதன் அயர்லாந்துத் தொழிற்சாலைக்காகவும் அலுவலகங்களுக்காகவும் அயர்லாந்து அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வரிப்பணத்தைச் செலுத்தாது ஏய்த்தமை தெரிய வந்துள்ளது. இதை அயர்லாந்து அரசாங்கத்தின் துணையுடனேயே செய்துள்ளதாக ஐரோப்பிய ஆணையக விசாரணைகள் தெரிவிக்கின்றன.

மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்த விசாரணைகளில், அடுத்தடுத்த அயர்லாந்து அரசாங்கங்கள் சட்டவிரோதமாக அப்பிள் நிறுவனத்திற்கு அரசாங்கத்தின் உதவிகளை வழங்கி வந்ததோடு, குறைவான வரியையும் அறவிட்டு வந்துள்ளன. அப்பிள் நிறுவனத்தின் சர்வதேச விற்பனை மையமும் அதனோடிணைந்த தொழிற்சாலைகளும் அயர்லாந்தில் உள்ளன. அப்பிள் நிறுவனத்திடமிருந்து ஒரு வீதத்துக்கும் குறைவான பெருநிறுவன வரியையே அயர்லாந்து அரசாங்கம் அறவிட்டுள்ளது. ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி ஆகியன 30 சதவீதத்துக்கும் அதிகமான பெருநிறுவன வரியை விதிக்கின்றன. ஆட்சியாளர்கள் எவ்வாறு உலகின் பெருநிறுவனங்களுடன் கைகோர்க்கிறார்கள் என்பதற்கு அப்பிளின் வரி ஏய்ப்பு இன்னொரு உதாரணமாகும்.

அப்பிள் நிறுவனம் வரி விதிமுறைகளைச் சட்டவிரோதமாக மீறும் வழிமுறைகளை அயர்லாந்து அரசாங்கமே செய்து கொடுத்துள்ளது என்ற செய்தி அயர்லாந்து மக்களிடை எல்லை கடந்த கோபத்தைத் தோற்றுவித்துள்ளது. குறிப்பாக, 2008 ஆம் ஆண்டு தொடங்கிய பொருளாதார நெருக்கடியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அயர்லாந்தும் ஒன்று. சமூக நலவெட்டுக்கள், சிக்கன நடவடிக்கைகள் ஆகியவற்றினூடு அரசு மக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படைத் தேவைகளை மறுத்தது. பல்லாயிரக்கணக்காணோர் வேலையிழந்தனர்; ஓய்வூதியத் தொகை குறைக்கப்பட்டது; இலவச மருத்துவ உதவி இல்லாமற் செய்யப்பட்டது; பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அயர்லாந்தில் தனிமனித ஆண்டு வருமானம் 4,500 அமெரிக்க டொலர்களால் குறைந்தது. பின்னர், அயர்லாந்தின் சரியும் பொருளாதாரத்தை ஐரோப்பிய ஒன்றிய, சர்வதேச நாணய நிதியக் கூட்டு பிணையெடுத்தது. அப் பிணையெடுப்பிற்கு இசைவாகச் சிக்கன நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டன. இதனால் மேலும் 4,500 அமெரிக்க டொலர்கள் வருமான இழப்பு ஒவ்வொரு அயர்லாந்து பிரஜைக்கும் ஏற்பட்டது. இவ்வாறு இன்றுவரை அயர்லாந்து மக்கள் மோசமான நிலையில் வாழ்கிறார்கள்.

இந்தப் பின்னணியில், ஆண்டொன்றுக்கு 550 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிகர இலாபமாகப் பெறும் அப்பிள் நிறுவனம், அயர்லாந்தில் 14.5 பில்லியன் அமெரிக்க டொலர் வரிஏய்ப்புச் செய்தமை தெரியவந்துள்ளது. அயர்லாந்து, ஐரோப்பிய ஆணையகத்தின் இம் முடிவை ஏற்க மறுத்ததோடு, அப்பிள் நிறுவனம் அத்தொகையைச் செலுத்தத் தேவையில்லை எனவும் தெரிவித்தமை அதிர்ச்சியளித்துள்ளது. அத்துடன் நில்லாமல், ஆணையை மீளப் பெறுமாறும் அயர்லாந்து அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தைக் கோரியுள்ளது. அப்பிள் நிறுவனத்தின் வரி ஏய்ப்புத் தொகை, அயர்லாந்தில் வாழும் அனைவருக்கும் ஒரு வருடத்திற்கு பொதுச் சுகாதாரத்தை வழங்கப் போதுமானது. நூற்றுக்கணக்கான அயர்லாந்து மக்களின் இலவச சுகாதார வசதிகள் மறுக்கப்படுகையில் ஏய்த்த வரிப்பணத்தை மீளத் தரவேண்டாமென்று அயர்லாந்து அரசாங்கம் சொல்கிறது.

கடந்த 25 ஆண்டுகளாகக் குறைவான வீதத்தில் வரி விதித்தாலேயே அயர்லாந்து பொருளாதார வல்லரசாக வளர்ந்ததெனவும், அதனால் இத்தீர்ப்பை ஐரோப்பிய ஆணையகம் நீக்கவேண்டும் என்றும் அயர்லாந்து அரசாங்கம் வாதிடுகிறது. 1990 களில் தென்கிழக்கு ஆசியாவில் துரித பொருளாதார விருத்தி கண்ட சிங்கப்பூர், தென் கொரியா, தாய்வான், ஹொங்கொங் ஆகியன ‘ஆசியப் புலிகள்’ என அழைக்கப்பட்டதைப் போன்று அயர்லாந்து ‘செல்டிக் புலி’ எனப் புகழப்பட்டது. ஏனைய ஜரோப்பிய நாடுகள் சராசரியாக 30 சதவீத நிறுவன, பெருநிறுவன வரி அறவிடுகையில், அயர்லாந்து 12.5 சதவீத வரியையே அறவிட்டது. இதனால் உலகின் முன்னணி நிறுவனங்களான அப்பிள், மைக்கிரோசொஃப்ட், கூகிள், ஃபேஸ்புக் ஆகியன அயர்லாந்தில் தங்களது தொழிற்சாலைகளையும் அலுவலகங்களையும் நிறுவின.

ஐரோப்பிய ஆணையக விசாரணைகளில் தனது வழமையான வரி விதிப்பு வீதத்தை விட மிகக்குறைந்த வரிவீதத்தையே அயர்லாந்து அறவிட்டமையும் அதைவிட, மிகக் குறைந்த விலையில் மின்சாரம் உள்ளிட்ட பல சேவைகளை வழங்கியமையும் தெரிய வந்தது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அப்பிள் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி டிம் குக், தனது நிறுவனம் எந்த வரிஏய்ப்பும் செய்யவில்லை என்றும் ‘அப்பிள் எப்போதும் சரியானதையே செய்வதாகவும்’ ஐரோப்பிய ஆணையகத்தின் தீர்ப்புத் தவறானதென்றும் தெரிவித்துள்ளார்.

அப்பிள் எல்லாவற்றையும் சரியாகச் செய்வதால் தான், அது தன் தொழிற்சாலைகளை அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு இடம்மாற்றி அங்குள்ள தொழிலாளர் உரிமைகளை மீறி மிகவும் மோசமான தொழில் நிலைமைகளுள் தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிகிறது. சீனாவின் அப்பிள் உற்பத்திச்சாலைகளில் தொழிலாளர்கள் வாரம் 60 மணித்தியாலங்களுக்கு மேல் மேலதிக நேரக் கொடுப்பனவின்றி வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு சட்டரீதியாக உரிய 15 நிமிட இடைவேளை வழங்கப்படுவதில்லை. இதைத்தான் ‘சரியானதைச் செய்தல்’ என டிம் குக் தெரிவிக்கிறார் போலும்.

அப்பிள் நிறுவனத்திற்கெதிரான இத் தீர்ப்பு ஐரோப்பிய ஒன்றியத்திற்குப் பாதகமானது என்று எச்சரிக்கும் டிம் குக், இத்தகைய ‘முறையற்ற செயற்பாடுகள்’ ஐரோப்பாவில் தொழில் வாய்ப்புகள் உருவாவதைத் தடுக்கும் எனவும் பல்தேசியக் கம்பெனிகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகி வேறு நாடுகளுக்குச் செல்ல உந்தப்படுவதால் அதன் மோசமான பலன்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கே கேடானவை எனவும் அதிகாரத் தொனியில் பேசியுள்ளார்.

அப்பிள் நிறுவனத்திற்காக வாதாடும் அயர்லாந்து அரசாங்கம், ஐரோப்பிய ஆணையகம் இத்தகையதொரு தீர்ப்பை வழங்கியதன் ஊடாக, அயர்லாந்தின் இறைமையில் குறுக்கிடுகிறது என்றும் அயர்லாந்தின் உள் விவகாரங்களில் ஐரோப்பிய ஆணையகம் தலையிடலாகாது என்றும் வாதிடுகிறது. ‘அந்நியத் தலையீடு’ எதற்கெல்லாம் பயன்படுகிறது என வியக்க வேண்டுகிறது. ஐரோப்பிய ஆணையகம் ஒன்றும் முழு யோக்கியன் அல்ல. ஆனால் தொழிலாளர் உரிமைகள், வரி அறவீடு போன்றவற்றில் குறைந்தபட்ச ஜனநாயகத்துடன் செயற்படுகிறது எனலாம்.

அப்பிளுக்கு எதிரான இந்தத் தீர்ப்பு நெருக்கடிக்குட்பட்ட உலகப் பொருளாதார நிலைமைகளில் கூர்மையடையும் அமெரிக்க – ஐரோப்பிய ஒன்றிய முரண்பாட்டின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுகிறது. இத் தீர்ப்பையடுத்து அமெரிக்கத் திறைசேரி வெளியிட்ட அறிவிப்பில், ஐரோப்பிய ஆணையகம் தேசம் கடந்த வரிவிதிப்பு தொடர்பாக அதிகாரமாகச் செயற்படுவதை ஏற்க முடியாதென்றும், ஐரோப்பிய ஆணையகம் அமெரிக்க நிறுவனங்களைக் திட்டமிடடுக் குறிவைப்பதாகவும் அதை நிறுத்த வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.

இவ்வெச்சரிக்கை அச்சத்தின் வெளிப்பாடன்றி அதிகாரத்தின் வெளிப்பாடல்ல! கடந்த சில ஆண்டுகளாக நீண்ட ஆழமான விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஆணையகம் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான அப்பிள், அமேசன், ஃபியட்-க்ரைஸ்லர், ஸ்டார்பக்ஸ் ஆகியன ஐரோப்பிய நாடுகளில் செய்த வரிஏய்ப்பைக் கண்டுபிடித்துள்ளதோடு ஏய்த்த தொகையை மீளச் செலுத்துமாறும் கோரி வருகிறது. அப்பிள் அயர்லாந்தில் செய்தது போன்று ஸ்டார்பக்ஸ் நெதர்லாந்திலும் அமேசன், ஃபியட்-க்ரைஸ்லர் ஆகியன லக்ஸ்சம்பேர்க்கிலும் பெருந்தொகை வரி ஏய்ப்பைச் செய்துள்ளன.

இவ்வருடத் தொடக்கத்தில் ஐரோப்பிய ஆணையகம் பெல்ஜியத்தில் இயங்கும் 35 பல்தேசியக் கம்பெனிகள் தாம் செலுத்தவேண்டிய வரியைச் செலுத்தவில்லை எனவும் பெல்ஜியம் அக் கம்பெனிகளிடமிருந்து பெறவேண்டிய தொகை ஆண்டுக்கு 780 மில்லியன் டொலர்கள் எனவும் அத் தொகையை அறவிட பெல்ஜியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தது.

ஐரோப்பிய ஆணையகம் கடந்த சில வருடங்களாகத் தொடர்ச்சியாக அமெரிக்கப் பல்தேசியக் கம்பெனிகளுடன் மல்லுக்கட்டுகிறது. அமேசன், பேஸ்புக், ஃபியட்-கிரைஸ்லர், கூகிள், மக்டொனால்ட்ஸ், வால்மாட், வால்ட் டிஸ்னி ஆகியவற்றை ஆணையம் குற்றவாளிகளாக அறிவித்தது.

இத் தீர்ப்பு மூன்று விடயங்களைத் தெளிவாக அறிவிக்கிறது. முதலாவதாக, அமெரிக்கத் திறைசேரியின் எச்சரிக்கையை கணக்கில் எடுக்க ஐரோப்பிய ஆணையகம் தயாரில்லை. அதன் மூலம் பின்கதவால் எட்டக்கூடிய ஒப்பந்தங்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அப்பிள் நிறுவனம் குறைந்த தொகையொன்றைச் செலுத்திச் சரிக்கட்டுவதை இது இயலாமலாக்கியுள்ளது. வரிஏய்ப்புச் செய்யும் அதேவேளை, குற்றச்சாட்டுக்கள் எழும்போது பின்கதவால் சரிக்கட்டும் நிறுவனங்களுக்கு இது ஓர் அபாய அறிவிப்பாகும்.

இரண்டாவதாக, நாடுகள் எவ்வாறு வரி ஏய்ப்புக்கு உதவுகின்றன என்றும் அவை எவ்வாறு பல்தேசியக் கம்பெனிகளுடன் சல்லாபிக்கின்றன என்றும் இத் தீர்ப்பு வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. இது அரசாங்கங்கள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையில் பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாவதாக, பல்தேசியக் கம்பெனிகளின் கடைவிரிப்பை ஊக்குவிக்க, உகந்த அரசாங்கத்தின் அனுசரணை வரிவிலக்கு அல்ல என ஐரோப்பிய ஆணையகம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. இதனால் அமெரிக்கக் கம்பெனிகளின் இலாபத்தில் பாரிய நட்டம் ஏற்படுகிறது. ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் உற்பத்தியாகும் பொருட்களை ஒன்றியத்துக்குள்ளேயே விற்கும் போது, வரிவிலக்கு இருப்பினும் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான வரியைக் கட்டாயம் செலுத்த வேண்டும். அமெரிக்கக் கம்பெனிகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள தொழிற்சாலைகளையும் நிறுவனங்களையும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே நகரத்தின் கம்பெனிகளின் இறுதி விளைபொருளை ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டுவரும் பொருட்களுக்கு வரி அதிகம். எனவே, ஐரோப்பிய சந்தையில் தமது விளைபொருட்களை அதிக விலைக்கு விற்க நேரும். இது விற்பனையை மோசமாகப் பாதிக்கும். எனவே இறுதியில் நட்டம் பல்தேசியக் கம்பெனிகளுக்கே.

அமெரிக்கா, முன்புபோல அனைத்தையும் அதிகாரத்தால் செய்ய இயலாதபடி காலம் மாறிவிட்டது. ஐரோப்பிய ஒன்றியம் தனது இருப்பிற்குப் போராடுகிறது. எனவே எதற்கும் தயவுதாட்சண்யம் காட்டும் நிலையில் அது இல்லை. இன்று அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதாரத் தளத்திற் போட்டியிடுகின்றன. இத்தீர்ப்பை அப்போட்டியின் ஒரு துணைவிளைவாகவும் கூறலாம்.அரசாங்கங்களோ மக்களுக்கானவையல்ல; பல்தேசியக் கம்பெனிகளை அவை கூவி அழைக்கும் போது, உள்ள சொற்ப உரிமைகளையும் சமூக நலன்களையும் இல்லாமற் செய்யும் அறிவிப்பாகவும் அது இருப்பதை மறக்கவியலாது. பல்தேசியக் கம்பெனிகளின் வருகை வேலைவாய்ப்பை அதிகரிக்கிறது. அந்நிய மூலதனம் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது என்றெல்லாம் எமக்குச் சொல்லப்படுகிறது.

ஆனால், நடப்பது: பட்டுவேட்டி பற்றிய கனவில் இருந்தபோது உடுத்தியிருந்த உள்ளாடையும் களவு போன கதைதான்!