அரசாங்கம் + கொரோனா = மக்கள்

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில், தேவையற்ற விதத்திலான மக்களின் நடமாட்டமும் அது தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளும் கைதுகளும் 2,000க்கும் மேற்பட்டு இருப்பதும் சட்டத்தை மீறியதற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான வாகனங்களின் எண்ணிக்கையும், இவற்றைவிட இச்சட்டத்துக்குள் சிக்காமல் தொடர்ந்து திரியும் வாகனங்களினதும் மக்களினதும் தொகைகள் இவற்றைவிட அதிகம். இச் செயற்பாடுகளும் அதற்கெதிரான இவர்களது செயற்பாடுகளும், இவர்களது அசண்டையீனத்தையும் பொறுப்பற்ற தன்மையையும் வெளிக்காட்டி நிற்கின்றன.

இச்சட்டத்துக்கு மதிப்பளிப்பதுடன் கௌரவமாகவும் தம் உயிர்களைத் துச்சமென மதித்துச் செயற்படும் வைத்தியர்களினதும் வைத்தியசாலை ஊழியர்களினதும் பாதுகாப்புப் படையினரதும் பிரதேச, உள்ளூராட்சி, மாநகர சபை, பணியாளர்களினதும், வங்கிகளின் உத்தியோகத்தர்களினதும் சுகாதார சேவையினரதும் பணி பாராட்டுக்குரியதோடு, அவர்கள் தொடர்பாக இந்நாடும் மக்களும் மிகுந்த நன்றிக்கடன் பட்டவர்களாகவும் உள்ளனர்.

இத்தகைய நிலையில், அன்றாடம் உழைத்து வாழும் மக்களது நிலைமை தொடர்பாக, அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள், அவர்களைச் சென்றடைய காலதாமதமாவது, இம்மக்களை விரக்தி நிலைக்குக் கொண்டுசெல்லும் நிலைமை, பிரிதொரு விடயமாக மேல் கிளம்பியுள்ளது.

இதன் காரணமாக, மக்கள் தமது அன்றாட ஜீவனோபாயத்துக்காக ஏங்கும் நிலை உருவாகி வருகிறது. தினக்கூலிகள், தமது ஜீவனோபாயம் தொடர்பாக அச்சமடைந்து உள்ளனர்.

கூட்டுறவுச் சங்கங்கள், சதோச நிறுவனங்கள் மூலம் நிவாரண உதவிகளை அரசாங்கம் அறிவித்துள்ள போதும், அவை பெரும்பான்மை சமூகத்தை அடைந்துள்ள அளவுக்கு, வடக்கு, கிழக்கு பிரதேசங்களை அடையவில்லை என்று கூறலாம்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் அமைந்துள்ள கூட்டுறவு சங்கங்களினதும் சதோச விற்பனை நிறுவனங்களினதும் தொகையும் இப்பிரதேசத்தில் வாழும் இலட்சக்கணக்கான மக்களின் தேவைகளைப் போதுமான அளவுக்குப் பூர்த்தி செய்யக் கூடியவையாக அமையவில்லை.

மத்திய வர்க்கம், பாமர மக்கள் பரிதவிக்கும் போது, வசதி படைத்தோர் இரண்டு, மூன்று மாதங்களுக்குத் தேவையான பொருள்களைச் சேகரித்து வைத்துள்ளதுடன் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் ஒவ்வொரு பொழுதுகளிலும் பொருள்களை மிதமிஞ்சிய அளவுகளில் சேகரிக்கத் தலைப்படுகின்றனர். நாட்டின் ஒரு பகுதி, உணவுக்கு அல்லற்பட, இன்னொரு பகுதி உணவுகளையும் பொருள்களையும் மிதமிஞ்சிய அளவு களஞ்சியப்படுத்தி வைத்துள்ளது.

இத்தகைய சூழலில், இப்பிரதேசங்களில் அத்தியாவசிய பொருள்களான பருப்பு, மீன்டின் போன்றவை பதுக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறம் சார்ந்த வியாபார நிலையங்களில் இப்பொருள்கள் கையிருப்பில் இல்லை என அறிவிக்கப்படும் வேளையில், கிராமங்களில் இருக்கும் சில்லறை வியாபார நிலையங்களில் இவை அதிக விலையில் விற்கப்படும் நிலை தொடர்கிறது.

மஞ்சள், பெருங்காயம், தேங்காய், பருப்பு, டின் மீன்,வெள்ளைப்பூடு இவற்றின் கட்டுப்பாடு விலைகள் ஒருபுறமிருக்க, ஏற்றுமதி இன்றி இருக்கும் கடல் உணவுகளின் விலை அதிகரிப்பானது, என்றுமில்லாத அளவு காணப்படுகிறது. கடற்கரையில் 300 – 400 ரூபாய்க்கு ஒரு கிலோ இறால், மீன், கணவாய் போன்றவைகள் கொள்வனவு செய்யப்பட்டு, 1,200 – 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலைமையானது நுவரெலியா, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் வவுனியா பிரதேசங்களிலும் காணக்கூடியதாக உள்ளது.

மேலும், மரக்கறி வகைகளின் விலையும் மிக மோசமாக உயர்ந்துள்ளது. பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் 200 ரூபாய்க்கும் சின்னவெங்காயம் 350 – 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல் உருளைக்கிழங்கு 300 ரூபாய்க்கும் 350 ரூபாவுக்கும் ஏனைய மரக்கறிகள் 500 – 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்ற சூழ்நிலையானது, அதிக அளவில் மட்டக்களப்பு பிரதேசத்தில் மேலோங்கிக் காணப்படுகிறது.

நிலைமைகள் இவ்வாறிருக்க, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வேளையில், பணத்தை எடுப்பதற்காக வங்கிக்குச் செல்வோர், பணத்தை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருப்பதும் பொருள்களைக் கொள்வனவு செய்யமுடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் சம்பவங்களும் ஏராளமாக நடந்தேறி வருகின்றன. அந்த வேளையில் வியாபார நிலையங்களில் பொருள் கொள்வனவு தொடர்பான நெரிசலும் பொருள்களை வழங்க முடியாமல் திண்டாடிய வர்த்தக நிலையங்களின் நிலைமைகளும் அதைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் எடுத்த முயற்சிகளும் சொல்லில் அடங்காதவை.

இத்தகைய நிலைவரங்கள், எந்த நோக்கத்துக்காக அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியதோ, அந்த நோக்கத்தைச் சிதைப்பதாகவே ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்தும் போது, நிகழும் சம்பவங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.

மக்களின் பாதுகாப்புக்காக முன்னெடுக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம், அந்த உத்தரவு தளர்த்தப்பட்டதும் அந்த நோக்கம் சிதைவுறும் வகையில், நடந்துகொள்வது, ஊரடங்குச் சட்டத்தின் கால அளவை நீடித்துச் செல்வதற்கு வழிகோலுவதாக அமைந்துள்ளது. இதன் காரணமாக, 10 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பின்னும், பாதுகாப்பான வர்த்தக பரிமாற்றங்கள் செய்யப்படாத இடத்தில், மிக வீரியத்துடனும் முழுவீச்சுடன் பரவும் சந்தர்ப்பத்தைத் திட்டமிடப்படாத செயற்பாடுகள் ஏற்படுத்தி விடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இயல்பு வாழ்க்கை, மக்களின் பாதுகாப்பு தொடர்பாகச் சீர்குலைந்து உள்ள வேளையில், இயல்பு வாழ்க்கைக்குத் திறந்து விடும் போது, மக்கள் ஆர்வத்துடன் உணவு தேடி முண்டியடிக்கும் நிலைமை அபாயமானது.

இவ்வாறானதொரு நிலைமையில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப் பட்ட வேளையில், முகக்கவசம், கையுறை இன்றி வந்தவர்களை, இராணுவம், பொலிஸார் தடுத்து நிறுத்தி, அவற்றை அணியும்படி பணித்த பொழுது, முரண்பட்ட மக்களையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இதேவேளை, நாட்டின் பல பிரதேசங்களில் வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில், பல்வேறு விழிப்புணர்வு செயற்பாட்டாளர்கள், இப்பணியைத் துண்டுப் பிரசுரங்கள் மூலமும் கையுறைகள் முகக் கவசங்கள் மக்களுக்கு இலவசமாக வழங்கியும் வழிப்படுத்தினர்.

கிழக்கில் மாநகர சபைகள், நகரசபை முகக் கவசங்களை மக்களுக்கு இலவசமாக வழங்கியதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அதே போலவே, வேறு பிரதேசங்களின் சபைகளும் இவ் வேலைத் திட்டத்தை முன்னெடுத்திருந்தன.

இத்தகைய சூழலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி, மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேசங்களை மய்யமாகக் கொண்டு, முகக் கவசங்களையும் அறிவுரைகளையும் இப்பிரதேச பொதுச் சந்தைக்கு சென்றவர்களுக்கு கோவிந்தன் கருணாகரன் தலைமையில் வழங்கியதோடு, விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் அங்கு வைத்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இந்த வேளையில், தமிழ் அரசியல் தரப்புகள் இவ்விடங்களில் மௌனம் சாதிப்பது தொடர்பாக, மக்கள் விசனம் தெரிவிப்பதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதற்குக் காரணம், இடைத் தேர்தல் பிரச்சாரமாக மக்கள்கருதி விடுவார்கள் என்ற அச்ச உணர்வும் காரணமாக இருக்கலாம். ஆயினும், மனிதாபிமான அடிப்படையில் தமிழ்த் தலைவர்கள் இப்பணியைப் பிரதேசங்களில் முன்னெடுக்கத் தவறுவது அவ்வளவு ஆரோக்கியமான செயற்பாடாகத் தெரியவில்லை.

ஏனெனில், தமிழ்த் தேசிய அரசியலில் கட்டுண்ட மக்களை இந்த ஆபத்தில் இருந்து மீட்டெடுக்க முறையான செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு ஒத்துழைப்பு, தனியாக முன்னெடுக்க வேண்டிய தார்மீக கடமையும் பொறுப்பும் அவர்களுக்கு உள்ளதாகவே தமிழ் மக்கள் கருதுகின்றனர்.

எனவே, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவதை விட, ஊரடங்கு இருக்கும் வேளையில், இது அத்தியாவசிய பொருள்களைக் குறித்த கிராமசேவகர் பிரிவுகளில் நன்கு திட்டமிட்ட வகையில் ஒரு கிராம சேவகர் பிரிவு குறைந்தது நான்கு வியாபாரத் தொகுதிகளை உருவாக்கி, அந்தந்தக் கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் அங்கத்தவர்களில் ஒருவர் பொருள் கொள்வனவில் நாளைக்கு ஒரு தடவை அல்லது இருதடவைகள் வரையறுக்கப்பட்ட ஒரு நிலையத்துக்குக் குறித்த நேரத்துக்குள் செல்வதன் மூலம், ஒரு கிராம சேவகர் பிரிவில் ஆயிரத்து 500 குடும்பங்கள் இருப்பதாகக் கொண்டால், நான்கு தொகுதிகளாக ஏற்பாடு செய்யப்பட்டு வியாபாரத்தளங்களுக்குச் சென்று, கொள்வனவு செய்வது சிறந்ததாக இருக்கும்.

அவ்வாறான நிலையில், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் கூட, பரிசோதிக்க 300 குடும்பங்கள் 300 பேர் கொள்வனவில் பாதுகாப்பாக ஈடுபட முடியும்.

இதன் மூலம் வீடு வீடாகச் சென்று வழங்கும் எரிபொருள் விரையம் தடுக்கப்படுவதுடன் கொரோனா வைரஸ் தாக்கத்தையும் தடுக்க முடியும். எனவே, ஒரு தினத்துக்கு ஒரு கிராம சேவகர் பிரிவு என்ற அடிப்படையில், சுழற்சி முறையில் இந்தத் தற்காலிக அத்தியாவசிய செயற்பாட்டை முன்னெடுப்பதன் மூலம், மக்கள் ஒன்று கூடுவதையும் குறைக்கலாம்.

இதன்மூலம் மக்களுக்கு முறையாக அத்தியாவசிய சேவை சென்றடையும் என்பதுடன், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வியாபாரிகள் எதிர்நோக்கும் சிக்கல்கள், பாதுகாப்பு படை எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கட்டுப்படுத்த முடியும். இதுவே, கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் கொண்டுள்ள அச்சத்துக்கும் ஆபத்துக்கும் ஓரளவுக்கு முடிவுகளைத் தேடித்தரும்.