அரசியல் தீர்வுகள் கிழித்தெறிதல்களும்…. கொழுத்துதல்களும் ஒப்பந்தங்கள் கைவிடப்படுதலும்… இராஜினமாக்களும்……

(சாகரன்)

இலங்கை அரசியல் வரலாற்றில் கிழித்தெறிதல், கைவிடுதல் இராஜினமாக்கள் ஒன்றும் புதிது அல்ல. ஆனால் இவைகள் நடைபெற்றதற்கு பின்னால் பேரினவாதம் மட்டும் அல்ல குறும் தேசியவாதமும் ஏகபோகவாதங்களும் இருந்திருக்கின்றன. பண்டா – செல்வா ஒப்பந்தம், இலங்கை – இந்திய ஒப்பந்தம் இன்றைய முஸ்லீம் அரசியல்வாதிகளின் இராஜினமா எல்லாவற்றிற்கும் பின்னால் இருப்பவை பேரினவாதத்தின் அழுத்தங்களே. சிங்களப் பேரினவாதம் அது பௌத்த துறவிகளின் வடிவில் முன்னிறுத்தப்பட்டாலும் இங்கு பௌத்த சிங்கள பேரினவாதமே கைகோர்த்து செயற்பட்டிருக்கின்றது. அரச தலமையில் இருப்பவர்களின் ஆசீர்வாதங்களுடன் இன்று நிறைவேற்றப்பட்டிருக்கும் இராஜினமாக்களுக்குள் இந்த பேரினவாதம் தனது கோர முகத்தை காட்டி இந்த நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் பொறி முறையை தவிர்க்கும் ஒரு சூழலையே ஏற்படுத்தியே இருக்கின்றது.