அரவிந்தனின் கேள்விகளுக்கு எனது பதில்கள்

பதில்:-பெரும்பான்மையான தமிழ் மக்களின் வாக்குளைப் பெறுகின்ற பிரதிநிதிகள் அவ்வப்போது இந்திய அரசின் அரமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்திக்கிற போது இலங்கையின் அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தின் படி மாகாண ஆட்சி முறைமைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பகிர்வு விடயத்தை பத்தோடு பதினொன்றாக, அதுவும் ரகசியமாகவே கோரி வந்தார்கள். ஆனால், கடந்த முறை இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வந்தபோது நடைபெற்ற சந்திப்பின் போதும் அவ்வாறாகவே ரகசிய உரையாடல் நடந்திருக்கின்றது. அவ்வேளையில் இந்திய வெளியுறவுச் செயலாளர் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றும்படி இந்திய அரசுதான் தொடர்ந்து வெளிப்படையாகக் கோரி வருகின்றது தமிழர்களின் பிரதானமான கட்சிகள் அது பற்றி வெளிப்படையாகப் பேசுவதுமில்லை – முறையாகக் கோருவதுமில்லை என்று குற்றம் சாட்டிய பின்னரே தமிழர்கள் மத்தியிலுள்ள கட்சிகள் பல அது தொடர்பாக குரலெழுப்பவும் கடிதங்கள் எழுதவும் தொடங்கியிருக்கின்றன. 13வது திருத்தம் தொடர்பாக தமிழர்கள் மத்தியில் உள்ள பிரதானமான கட்சிகள் உறுதியான அக்கறை காட்டவில்லையென்றால் மிக விரைவில் இந்திய அரசு மாகாண சபைகள் மற்றும் அதற்கான அதிகாரங்கள் பற்றிய தனது பேச்சுகளை நிறுத்திவிடும் என்று இந்திய வெளியுறவு செயலாளர் எச்சரித்தாரோ தெரியவில்லை. மேலும், இந்தியா அக்கறை காட்டாவிட்டால் மாகாண சபை அமைப்பு முறையையே ராஜபக்சாக்களின் அரசாங்கம் புதிய அரசியல்; அமைப்பின் மூலம் இல்லாதொழித்து விடுமோ என்ற பயமும் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதிய கட்சிகளின் தலைவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்றும் கூறலாம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளில் முதலமைச்சர்களாவதற்கும், அமைச்சர்களாவதற்கும், சபை உறுப்பினர்களாவதற்கும் அவர்களிற் பலர் இரவு பகலாக கனவகளுடன் இருப்பதுவும் தெரிந்ததே. 


13வது தொடர்பான எதிர்காலச் சாத்தியங்கள் என்பது இந்தியப் பிரதமருக்கென கடிதம் கொடுத்துள்ள கட்சிகள் அது தொடர்பாக எவ்வாறு தொடர்ந்து செயற்படப் போகிறார்கள், இந்திய அரசாங்கம் எந்த அளவுக்கு அக்கறையுடன் இவ்விடயத்தில் ஈடுபாடு காட்டி செயற்படப் போகிறது மேலும் இலங்கை அரசாங்கம் இவ்விடயத்தில் எநதளவுக்கு மனப்பூர்வமாக உடன்படப் போகிறது என்பவற்றைப் பொறுத்தே அமையும்.

2. கேள்வி:-
இலங்கை – இந்திய உடன்படிக்கை செய்யப்பட்டு 35 ஆண்டுகள் ஆகி விட்டன. இன்னும் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது பற்றியே பேசப்படுகிறது. இப்பொழுது இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதப்படுகிறது. இந்தப் பலயீனமான நிலைமைகளுக்குக் காரணம் என்ன?பதில்:-


2009வரை தமிழ்ச் சமூகத்தின் மிக மிகப் பெரும்பான்மையினர் தமிழீழ கனவுலகில் இருந்தார்கள்: 2009லிருந்து 2012ம் ஆண்டு வரை மிகப் பெரும்பான்மையான தமிழ் மக்களின் பிரதிநிதிகள் 13வது திருத்தத்தின்படியான மாகாண சபைகள் தும்புக் கட்டையாலும் கூட தொடக் கூடாத அளவுக்கு தீண்டத் தகாதவைகள் என்றார்கள்: அதற்குப் பின்னர் மாகாண சபைகளின் பதவிகளில் அமர்ந்த போதும் அது பயனற்றது என்பதை எப்படியாயினும் நிரூபிப்பதில் தங்களின் ஆளுமைகளையும் திறமைகளையும் பிரயோகித்தார்கள்:

2015ந்திலிருந்து 2019வரை ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி உடையதாக புதிய அரசியல் யாப்பைத் தாங்கள் கொண்டு வரப் போவதாகக் கூறி கிடைத்த அரிய வாய்ப்பை பயனற்றதாக்கினார்கள். இப்போது ராஜபக்சாக்கள் மாகாண சபை முறையையே இல்லாமற் செய்து விடுவார்களோ என்று அச்சம் கொண்டு இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ள விழித்திருக்கிறார்கள் போல் தெரிகிறது.

3. கேள்வி:- 
1987ல் மாகாண சபை முறைமையை புலிகள் நிராகரித்த சூழலில் நீங்கள் அதனைப் பொறுப்பேற்றிருந்திர்கள், அதனால் பல நெருக்கடிகளையும் சந்தித்திருந்தீர்கள். 35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது மாகாண சபையை வலுப்படுத்துமாறு கேட்கப்படுகிறது. இதில் உங்களுடைய பாத்திரம் என்ன? பதில்:-


இப்பொழுது நான் ஒரு சாமான்யன். சமூக அரசியற் பார்வையாளன், என் ஆத்ம திருப்திக்காக அரசியல் பொருளாதார விடயங்கள் தொடர்பில் எழுதுகிறேன் – பேசுகிறேன். இலங்கையின் மாகாண சபைகள் தொடர்பில் என்னுடைய பாத்திரம் என்ன என்று குறிப்பாகக் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். அந்த விடயத்தில் நான் பெற்றுள்ள அனுபவங்களையும் எனது அரசியல், பொருளாதார மற்றும் அரசியல்யாப்பு தொடர்பான சட்ட அறிவையும் யாராவது என் மீது நம்பிக்கை கொண்டு பகிர்ந்து கொள்ள விரும்பினால் அவர்களோடு உரையாடுவேன். அதற்கு மேல் இவ்விடயத்தில் எனக்கு வேறெந்தவொரு பங்கும் பாத்திரமும் இருப்பதாக நான் உணரவில்லை. அதற்கான சாத்தியங்களும் இல்லை.

4. கேள்வி:-
இலங்கை அரசியலில் 13வது என்பதே சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. சில தரப்புகள் 13வதை நிராகரிக்கின்றன. உங்களுடைய நிலைப்பாடு என்ன? பதில்:-


பல கட்சிகள் கொண்ட ஜனநாயக அமைப்பில் எல்லோரும் எல்லா விடயங்களையும் ஏற்பார்கள் என்றில்லை. பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக் கொள்வதையே மக்கள் அபிப்பிராயம் என்கிறோம். எனினும், பெரும்பான்மை என்ற வகையில் மேற்கொள்ளப்படும் இன மேலாதிக்கம் மற்றும் சாதி மேலாதிக்கங்கள் எதிர்க்கப்பட வேண்டியவை. 

இங்கு தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார சமூக உரிமைகள் என வருகின்ற போது தமிழர்களிற் பெரும்பான்மையானவர்களின் அந்தந்த காலகட்டங்களிற் கொள்கின்ற – வெளிப்படுத்துகின்ற அபிலாஷைகளையே தமிழர்களின் அபிலாஷைகள் எனக் கொள்வதே சரியானதாகும். அதுவும் அந்த அபிலாஷைகள் நடைமுறைச் சூழலுக்கும் சாத்தியங்களுக்கும் பொருத்தமானவையாகவும் அமைய வேண்டும்.

ஒரு சமூகத்தின் விருப்பங்கள் அதி உச்சமானவையாக இருக்கக் கூடாது என்றில்லை. ஆனால் அவை ஏனைய இனத்தவர்களை, சமூகப் பிரிவினர்களை அச்சுறுத்தபவையாகவோ அல்லது ஆபத்துக்கு உள்ளாக்குபவையாகவோ அமையக் கூடாது.

மேலும் அவற்றை அடைவதற்கு எந்தப் பாதைகளின் ஊடாக எத்தனை படி முறைகளினூடாக செல்ல வேண்டும் – செயற்பட வேண்டும் என்பவற்றை கவனத்திற் கொண்டு அரசியல் சமூக செயற் திட்டங்களை முன்னடுப்பதுவும் பிரதானமானதாகும். 

இங்கிருப்பது மக்கள் பிரதிநிதித்துவ ஜனநாயகம்.

எனவே இங்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களை மட்டுமல்ல தமிழ்ப் பேசும் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்துபவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தின்படி அமைந்த அதிகாரப் பகிர்வை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற தமது விருப்பத்தை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். அது அவர்களின் விருப்ப வெளிப்பாடு மட்டும்தானா அல்லது அதை எப்படி சாதிக்கப் போகிறார்கள் என்ற கேள்விகளுக்கான விடைகளை பொறுத்திருந்தே பார்க்கலாம்.

13வது திருத்தத்தை நிராகரிப்பவர்கள் தமிழ் மக்களின் பெரும்பான்மையான பிரதிநிதித்துவத்தைப் பெறுகிற போதே அந்த நிராகரிப்பு தமிழ் மக்களின் நிராகரிப்பாக அமையும். அந்த நிலைமை இப்போது இல்லை. 5. கேள்வி:- 
வடக்கு – கிழக்கு இணைப்பில் முஸ்லிம்களின் நிலைப்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்? பதில்:-


கிழக்கு மாகாணம் தனியாக இருக்கும் போது கிழக்கில் வாழும் தமிழர்களின் வீதாசாரமும் முஸ்லிம்களின் வீதாசாரமும் ஏறத்தாழ சமமாகும். கிழக்கு தனியாக இருக்கின்ற போது ஒரு முஸ்லிம் இனத்தவரும் முதலமைச்சராகலாம். அது இணைந்த வடக்கு கிழக்கில் சாத்தியமாகாது. வடக்கும் கிழக்கும் இணைந்தால் முஸ்லிம் மக்களின் சனத்தொகை 20 சதவீதத்தை அண்மித்ததாகவே இருக்கும். மொத்த இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்கம் எப்படி செயற்படுகிறதோ அவ்வாறாக இணைந்த வடக்கு கிழக்கில் தமிழின மேலாதிக்கம் செயற்படும் எனும் அச்சம் முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவுகின்றமை புரிந்த கொள்ளப்படக் கூடிய ஒன்றே. அந்த அச்சத்தை நீக்குவதற்கு தமிழர்களின் பெருந்தன்மை எனும் வகையிலான வாக்குறுதிகள் பயன்பட மாட்டா. மாறாக முஸ்லிம் மக்களின் அரசியல் பொருளாதார மற்றும் சமூக நலன்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் தமிழர்கள் மத்தியிலுள்ள பெரும்பான்மையான அரசியற் பிரதிநிதிகளுக்கும் முஸ்லிம் மக்களின் மத்தியிலுள்ள பெரும்பான்மையான அரசியற் பிரதிநிதிகளுக்கம் இடையில் ஓர் உறுதியான – வெளிப்படையான உடன்பாடு ஏற்படும் வரை வடக்கு – கிழக்கு இணைப்பை முஸ்லிம் மக்கள் ஏற்க மாட்டார்கள். அவ்வாறான உடன்பாடில்லாத வரை தமிழர்களின் வடக்கு – கிழக்கு இணைப்பு கோரிக்கையை முஸ்லிம் மக்கள் தமது இனத்துக்கு எதிரான கோரிக்கையாகவே பார்ப்பார்கள். 

 


6. கேள்வி:- 
தமிழரின் அரசியற் பிரச்சினைக்கு இந்தியா, இலங்கை, மேற்குலகம், சீனா என்பவற்றில் எதனுடனான உறவு சாதகத்தைத் தரும்? பதில்:-


தமிழரின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுக்கு இந்தியா மட்டுமே உதவும் என்றும் மேற்குலகு நாடுகளும் இந்தியாவின் நிலைப்பாட்டை ஒட்டியே செயற்படுவன என்றுமே தமிழர்களின் பிரதிநிதிகளாக உள்ளவர்களில் பெரும்பான்மையினர் கூறுகின்றனர். எவ்வாறாயினும் இலங்கை அரசாங்கமே தீர்வுக்கான ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். இலங்கை அரசாங்கங்கள் தானாக இதுவரை செயற்பட வில்லை என்பதுவும் அனுபவமாகும். இலங்கை அரசாங்கத்தை செயற்பட வைப்பதற்கு இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் உதவி தேவை என்பதே தமிழர்கள் மத்தியிலுள்ள பொதுவான அபிப்பிராயமும் எதிர்பார்க்கையாகவும் உள்ளது. சீனா இதுகாலவரை தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் ஒன்று – எனவே இவ்விடயத்தில் வெளிநாடுகள் எதுவும் தலையிடக் கூடாது என்ற நிலைப்பாட்டுடன் அது பற்றி இலங்கை அரசுடன் எந்த வகையிலும் பேசுகின்ற நடைமுறைகளைக் கொண்டிருக்கவில்லை. மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியா தொடர்பாக அச்சம் அல்லது விரோதம் கொண்டுள்ள நாடுகளின் அரசுகளுக்கு துணையாக நிற்பதன் வழியாகவே சீனா தனது சர்வதேச உறவுகளை விரிவுபடுத்தி வருகிறது. 

சீனா தமிழர்களுக்கு தமிழர்களுக்கு அரசியல்ரீதியில் சாதகமானதான நிலைப்பாடு கொள்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் சீனாவை தமிழர்கள் பகைமை நாடாகக் கொள்வது அவசியம்தானா என்பது இங்கு விடை காணப்பட வேண்டிய கேள்வியாகவே உள்ளது. 

7. கேள்வி:-

தற்போதைய இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரோடு உங்களுக்கு 30 ஆண்டுகளுக்கு மேலான நட்புறவுண்டு. அவ்வகையில் 13ஐ அமுலாக்கம் செய்வதில் உண்மையாக இந்தியா அக்கறையாக இருக்கிறது என்று கருதுகிறீர்களா? பதில்:-


கௌரவ அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் 1988ம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து 1990ம் ஆண்டு இடைப்பகுதி வரை இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் அரசியற் செயலாளராக இருந்தவர். அத்துடன் அப்போது இலங்கையிலிருந்த இந்திய இராணுவத்தினருக்கு அரசியல் ஆலோசகராகவும் செயற்பட்டவர். வடக்கு-கிழக்கு மாகாண சபை தேர்தலை நடத்த வைப்பதிலும் அந்த மாகாண ஆட்சிக்கான இந்திய அரசின் ஒத்துழைப்புகளை பெற்றுத் தருவதிலும் பிரதானமான பங்காற்றியவர். அவை எல்லாவற்றையும் இங்கு விபரிப்பது பொருத்தமானதுமல்ல சரியானதுமல்ல என்று கருதுகிறேன். அவர் இலங்கையிலிருந்து மாற்றமாகிப் போனதன் பின்னர் அவருக்கும் இந்தியாவின் இலங்கை தொடர்பான விவகாரங்களுக்குமிடையில் உத்தியோகபூர்வமாக எந்த வகையிலும் தொடர்பில்லாமல் போயினும் அவர் இலங்கை தொடர்பாக தொடர்ந்தும் உளப்பூர்வமான ஆர்வத்தைக் கொண்டிருந்தார் என்பதை இந்தியாவில் அவரைச் சந்தித்த பல வேளையில் என்னால் உணர முடிந்தது. 2015ம் ஆண்டு அவர் இந்திய அரசின் வெளிநாட்டு விவகார செயலாளராக ஆனதைத் தொடர்ந்து இலங்கையின் பல்வேறு விவகாரங்களிலும் மிக அக்கறையாக இருந்தார் என்பதை இலங்கையின் அனைத்து அரசியற் தலைவர்களும் நன்கு அறிவர். இப்போது அவர் இந்திய அரசின் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான அரசியல் முடிவுகளை எடுக்கும் இடத்தில் இருக்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மிகுந்த நம்பிக்கைக்கு உரிய அமைச்சராக அவர் இருக்கிறார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. உங்களைப் போன்றவர்களுக்கு இன்னும் சில தகவல்களையும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். இலங்கை விவகாரத்தோடு முன்னர் சம்பந்தப்பட்ட கௌரவ ஜெய்சங்கர் மட்டுமல்ல, 1987ம் ஆண்டு இலங்கை அரசின் ஒப்பரேசன் வடமராட்சியை நிறுத்தும் வகையாக இந்திய மிராஜ் விமானங்கள் உணவுப் பொட்டலங்களைக் போட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அதிகாரியான ஹர்தீப் பூரி அவர்கள் இப்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அரசாங்கத்தின் அமைச்சரவையில் மிகப் பிரதானமானதொரு அமைச்சராக இருக்கிறார். இந்த பூரி அவர்களுக்குத் தான் யாழ்ப்பாணத்து மக்கள் மிகுந்த பூரிப்புடன் மாலையுமிட்டு பொட்டும் வைத்து வரவேற்றார்கள் என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு இன்னுமொரு தகவலையும் அறிந்து கொள்ளுங்கள், அதாவது 1987ம் ஆண்டுக்கும் 1990ம் ஆண்டுக்கும் இடையில் இலங்கையில் இருந்த இந்திய இராணுவத்தில் ஒரு மேஜர் என இருந்து பின்னர் அங்கே இருக்கும் போதே லெப்டினட் கேர்ணல் என பதவி உயர்வு பெற்று கொண்டு கடமையாற்றிக் கொண்டிருந்த வி.கே. சிங் அவர்கள் பின்னர் இந்திய இராணுவத்தின் தளபதி ஆனார். அவரும் இப்போது பிரதமர் நரேந்திய மோடி அவர்களின் அரசாங்கத்தில் மிகப் பிரதானதொரு அமைச்சராக இருக்கிறார்.எனவே இப்படியானவர்களைக் கொண்டிருக்கிற அரசாங்கத்தைக் கொண்டு இலங்கை வாழ் தமிழ் மக்களின் நலன்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்களே இலங்கையில் உள்ள மாகாண சபைகளை சிறப்புற – காத்திரமானவையாக அதாவது 13வதை முழுமையாக – முறையாக நடைமுறைத்துவதற்கான நிலைமைகளை ஏற்படுத்த வேண்டும். 

சாதகமான சூழ்நிலைமைகள் ஏற்பட்டாலும் அதனூடாக தமக்கு உரியவற்றை – தேவையானவற்றை சாத்தியமாக்குவதற்கு ஒரு சமூகத் தலைமைக்கு தெளிவான அறிவும் புத்திபூர்வமான செயற்பாடும் வேண்டும். அதிலிருந்தே இலங்கை வாழ் தமிழர்களின் அபிலாஷைகள் சாத்தியமாக முடியுமா அல்லது முடியாதா என்பதை முடிவு செய்ய முடியும். இதையெல்லாம் எப்படி நீங்கள் கூறுகின்றீர்கள் என்று நீங்கள் கேட்டால் உங்கள் கேள்விலேயே பதிலும் இருக்கிறது என்பேன். கௌரவ இந்திய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் கௌரவ இந்திய மத்திய அமைச்சர் ஹர்தீப் புரி அவர்கள் மட்டுமல்ல, அவர்களின் நெருங்கிய நண்பர்களாகவும் இந்திய வெளிவிவகார கொள்கைகளை தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்துபவர்களாவும் உள்ள பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள், சமூக அரசியல் ஆய்வாளர்கள் என உள்ள பலரோடு எனது நட்பு உள்ளது. அந்த வகையில், இந்திய அரசின் சமகால போக்கை அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பை சந்தர்ப்ப சூழ்நிலைகளால்; பெற்றுள்ளேன் எனலாம்.இந்திய அரசாங்கத்தின் கௌரவ அமைச்சர்களாக திரு ஜெய்சங்கர், திரு ஹர்தீப் பூரி மற்றும் ஜெனரல் வி கே சிங் போன்றவர்கள் இருந்தாலும் அந்த சாதகங்களை எவ்வளவு தூரம் தமிழர்களுக்கான சாதகங்களாக மாற்றிக் கொள்ளப் போகின்றார்கள் என்பதை இலங்கைத் தமிழர்களின் சட்டபூர்வமான பிரதிநிதிகள்தான் கண்டறிந்து செயலாற்ற வேண்டும்.

8. கேள்வி:- 
13 பொருத்தமற்றது: சமஷ்டி அல்லது அதற்கு மேலாக என அ.இ.த.காங்கிரஸ் (கஜேந்திரகுமார கட்சி;) சொல்கிறதே? பதில்:-

ஒற்றையாட்சியை பிடிவாதமாகக் கொண்டு பிரதேச சுயாட்சியையும் எதிர்த்து வந்த தமிழ்க் காங்கிரஸ் கட்சியை சமஷ்டி என்ற கோரிக்கையை வைத்து தமிழரசுக் கட்சியின் தலைமை தமிழர்களிடமிருந்த ஓரம் கட்டியது. இன்று ஜி.ஜி.பொன்னம்பலத்தின் பேரன் அதே சமஸ்டிக் கோரிக்கையை தான் கையில் எடுத்துக் கொண்டு, ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வைக் கோருகிறது தமிழரசுக் கட்சி எனக் கூறி அதனை தமிழ் மக்களிடையே இருந்து ஓரம் கட்டுவதற்கு முயற்சிக்கிறார். இது அடுத்து வரும் தேர்தலுக்கான வாக்கு வங்கியை தக்க வைப்பதற்கும் விரிவுபடுத்துவதற்குமான போட்டி – தேர்தல் அரசியல் போட்டி. அடுத்து வரும் தேர்தலில் பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமது வாக்குகள் மூலமாக என்ன சொல்லப் போகின்றார்கள் என்பது தமிழர்களின் அடுத்த கட்ட பிரதானமான அரசியற் போக்கைத் தீர்மானிக்கும் எனக் கூறலாம்.