அர்ப்பணிப்பும் பிரக்ஞையும் ஜனநாயக மனிதாபிமான சமத்துவ எண்ணமும் கொண்ட தலைமைத்துவத்தின் வரலாற்று அவசியம்

மட்டக்களப்பு சியோன் தேவாலயம் கொச்சிக்கடை அந்தோனியார் கோயில் நீர் கொழும்பு செபஸ்ரியன் தேவாலயம் இவை எல்லாம் இலங்கையின் பாரம்பரிய வாழ்வின் பெறுமாங்களின் குறியீடுகள்.

வுpகாரங்களும் ஆலயங்களும் மசூதிகளும் என வண்ணமயமான கலவை இலங்கை.
மக்களின் ஆன்மீகத் தேடலின் ஆதாரசுருதிகள்.

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் இலங்கையின் பல்கலாச்சார சூழலின் பெருமை மிகு குறியீடு.

கொச்சிக்கடை என்று சொன்னால் அந்த கம்பீரமாக உயர்ந்து நிற்கும் அந்தோனியார் தேவாலயம் தான் மனக்கண் முன் வரும்.

இலங்கையின் இயற்கை உலகத்தாரை கவரும் ரம்மியம் மிக்கது.

மனதை பேரெழுச்சியும் உவகை கொள்ளச் செய்வதும். ஆதனால் தான் உல்லாசப் பிரயாணிகள் இங்கு குவிகிறார்கள்.

காலிமுகத்திடலின் வசீகரம் மனித இரத்தத்தில் காற்றில் சாவு வாடை

இலங்கை மக்களின் வரலாற்று ரீதியான வாழ்வின் பெறுமானங்களை அழிக்கும் செயல்கள் தான் இலங்கையின் அண்மைய வரலாறு. வெறுமனே மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் மாத்திரம் இதற்கு பாத்திரவாளிகள் அல்ல.

இந்த எழிலார்ந்த தீவில் இப்படி ஏன்.

மதவாத அரசியல் சமூக நல்லுறுவிற்கு எதிரான அரசியல் சகிப்புத்தன்மைக்கு எதிரான அரசியல் சக சமூகங்களை நிராகரிக்கும் அரசியல் சாதாரண மக்களின் மனங்களில் நஞ்சூட்டும் அரசியல்
இலங்கையர் சமூகங்களை சில்லம் சில்லமாக சிதறச் செய்துள்ளது.
இந்த பகைமை உணாச்சியின் இடை வெளியில் மானிட விரோத மத அடிப்படைவாத பயங்கரவாதங்கள் வேர் கொள்கின்றன.

“பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்”
நாடும் அப்படித்தான்.

இந்த நாட்டில் மனித உரிமைகள் பற்றி ஜனநாயகம் பற்றி சமூக உறவுகள் பற்றி மானசீகமான பிரக்ஞை எத்தனை தலைவர்களுக்கு இருக்கிறது என்பது துரதிஸ்டமான முக்கியமான கேள்வி.
மத இனவாதங்கள் அடிப்படை வாதங்கள் இராணுவ வாதங்கள் ஊடாகத்தான் இந்த நாட்டின் பிரதான அரசியல் தன்னை தக்கவைத்து வந்திருக்கிறது.

இந்த மாதிரியான வெறுப்புணர்வு உமிழப்படும் நிலம் உலகளாவிய உள்ளுர் பயங்கரவாதங்களுக்கும் விளைநிலமாவதில் ஒன்றும் ஆச்சரியம். கிடையாது.
இங்கு மத சீரேஸ்டர்கள் எனப்படுவோர் சகட்டு மேனிக்கு வாய்க்கு வந்த படி இன மதவாதம் பேசுவோரை வீரர்களாக சித்தரிக்கும் விபரீதம்.

எமது சமூகங்கிளிடையே உறவு நிலை பலமானால் நீதியான பாதுகாப்பான உறவு நிலை நிலை நாட்டப்படுமானால் எந்த வித நாசகார சக்திகளும் இங்கு நுழைந்து விடமுடியாது.
அண்மைக்காலமாக இங்கையின் சிறுபான்மைச் சமூகங்களின் மத கலாச்சார நம்பிக்கைகள் மீதான அச்சுறுத்தல்கள் அதிகமாக இருந்தன. தேவாலயங்கள் மசூதிகள் தாக்கப்படும் சம்பங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்தன.

தற்போது இலங்கையின் இன மத வெறுப்பு சூழல் சர்வதேச பயங்கரவாதிகளின் தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

மத விழுமியங்களுக்கு அப்பால் மத வெறி எத்தகைய மானிட விரோதமானது என்பதை சமூகங்களின் சகவாழ்வை இருப்பை நிர் மூலம் செய்யக் கூடியது என்பதை அண்மைய வரலாற்றில் பல அவல அனுபவங்கள் காணப்படுகின்றன.

இந்த பிராந்தியத்தின் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலைக்கு பங்களித்தவர்கள் இந்த விபரீதங்களை முன்னுணர்ந்து மதசார்பின்மையை தமது நிகழ்ச்சி நிரலில் முதன்மை விடயமாக சேர்த்துக் கொண்டார்கள்.

காந்தியடிகளின் மரணத்திலிருந்து உயிர்த்த ஞாயிறு மரணம் வரை மனித குலத்தின் வண்ணங்களின் கலவையான எழிலை இருப்பை நிராகரிக்கும் சக்திகள் விஸ்வருபம் எடுத்துள்ளன.
இந்த மத அடிப்படை வாத குழுக்கள் கெடுபிடி யுத்தகாலத்தில் ஏகாதிபத்திய நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டவை.

ஆப்கானிஸ்தானில் உருவாக்கப்பட்ட முஜாதீன் குழுக்களே இவற்றின் ஆரம்ப மாதிரிகள்.
எண்ணைக்காக யுத்தம் என்ற மனித உயிரழிப்பு நிகழ்ச்சி நிரலில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இவை வளர்த்தெடுக்கப்பட்டன.

மத்திய கிழக்கு மேற்காசியா அழிவு ஆயுதங்களின் கிட்டங்கியாக மாற்றப்பட்டது.
மேற்காசிய மத்திய கிழக்கு நாகரிகங்கள்அழிக்கபட்டன. ஆழுமை மிக்க முற்போக்கான சமூக சீர் திருத்த எண்ணம் கொண்ட தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.வரலாற்று வழிப்பட்ட அரசியல் சமூக பொருளாதார கட்டமைப்புகள் துவம்சம் செய்ப்பட்டன. உலகளாவிய மரண வியாபாரிகளான நாசகாரக்குழுக்கள் உருவாக்கபட்டன.

கலாச்சார மத பாதுகாவலர்கள் என்ற பெயரில் ஈவிரக்கமற்ற பயங்கரவாதக் குழுக்கள் காளான்கள் போல் முளைவிட்டன.

கலாச்சாரங்களின் யுத்தம் என்ற பெயரில் உலகளாவிய பேரழிவின் சின்னங்களாக இவை உருவெடுத்தன.

மறுபுறம் வெள்ளையர் மேன்மை பயங்கரவாத இயக்கங்கள் உருவாயின.
இவை ஒன்றை ஒன்று போசித்தன.

இன்று உலகளாவிய அளவில் இருபெரும் நாகரிகங்களிடையே யுத்தம் நடைபெறுவதாக சித்தரிப்பொன்று காணப்படுகிறது.

இந்த மனித குல விரோத காட்டுமிராண்டித்தனங்களுக்கு எந்த கொள்கை சித்தாந்த முலாமும் போடமுடியாது.

3 தசாப்தம் நீண்ட யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகளாகிவிட்ட சூழ்நிலையில் உயிர்த்த ஞாயிறு காலைப் படுகொலை இலங்கையின் சமூக பொருளதார தளங்களில் பெரும் ஈடாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன சமூகங்களிடையிலான உறவில் பாரதூரமான விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரத்திற்கான சண்டையில் ஈடுபட்டிருக்கும் இலங்கையின் பிரதான அரசியல் தலைமைகள் இதன் பாரதூரதன்மை பற்றிய பிரக்ஞை குறைந்தவை.

முன் கூட்டியே தெரிந்திருந்தும் தகவல்கள் முறையாக பரிமாறப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் சரமாரியக எழுகின்றன.

இலங்கையின் விரிசல்கண்ட இன உறவுகளையும் உருக்குலைந்த அரசாங்க நிலைமையையும் சர்வதேச பயங்கரவாதிகளும் அவர்களின் உள்ளுர் சகபாடிகளும் பயன்படுத்திக் கொண்டு உயிர்த்த ஞாயிறு மானிட அழிவுகளை நிகழ்த்தினார்கள்.

சமூகத்தில் பெருவாரியானவர்கள் இந்த அழிவு நாசகார செயல்களில் ஈடுபடுவதில்லை.மனித குலம் மீதான வெறுப்பு குரூரவெறி கொண்டவர்களே இதனை நிகழ்த்துகிறார்கள்.

இலங்கையின் உயிரியல் பல்லினப்பாங்கு உலகத்தை ஈர்க்கிறது. ஆனால் சமூக பல்லினபாங்கு இலங்கையில் பேணப்படுவதில்லை. சமூக எதார்த்த இருப்பு அப்படி இருந்தாலும் அதிகாரங்களின் மனங்கள் இதனை உதாசீனம் செய்கின்றன.

இதனால் இலங்கை மேலெழுவதற்கான சந்தர்ப்பங்கள் கை நழுவிப்போகின்றன.
உயிர்த்த ஞாயிறு காலை இலங்கையின் நிலைமையை மீணடும் “0” இற்கு கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையிலிருந்து மீள்வதற்கான மகத்தான வழி சமூகங்களிடையே நல்லுறுவை மீள்கட்டி எழுப்புவது. உடைந்து போன சமூக உறவுகளை மீள் கட்டி எழுப்புவது. சில்லம் சில்லமாகிப்போன சமூ உறவுகளை மீள் கட்டி எழுப்புவது.

1977,1981,1983 எனதமிழர்களுக்கு எதிராகவும் 2014,2018 என முஸ்லீம்களுக்கு எதிராகவும் பேரினவாத வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன.

முதலாவது நேரடி அரச பயங்கரவாதமாகவே அமைந்திருந்தது. மற்றையதில் மென் போக்கு கடைப்பிடிக்கப்பட்டது.

சர்வதேச இஸ்லாமிய அடிப்படைவாத கருத்தியல் இங்கு அண்மை தசாப்தங்களாக ஊடுருவல் நிகழ்த்துகிறது.

மறுபக்கத்தில் கட்டமைப்பு ரீதியான சமூக வெறுப்பு நிகழ்ச்சி நிரல் அரங்கேற்றப்பட்டது
முஸ்லிம் விரோத பிக்குகளின் அராஜகங்கள் செல்லப்பிள்ளைகளின் குழப்படிகளாக கண்டு கொள்ளப்பட்டன.

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு தீவைத்தல் சேதம் விளைவித்தல் போன்ற சம்பவங்களும் பரவலாக நிகழந்துள்ளன.

இங்கு புனித வேசங்களுக்கு இடமில்லை

கோயில்கள் தேவாலயங்கள் மசூதிகளை அழித்தல் இனம் மத பெருமிதங்களின் பேரால் மக்களை படு கொலை செய்தல் இலங்கைக்கு புதிய தொன்றல்ல.

சிறு பான்மையினருக்கு எதிரான பாரிய வன்முறை கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்படும் போது
யுத்தத்தின் போது அரச பயங்கரவாதமாகவும் தமிழ் பாசிச பயங்கரவாதமாகவும் இவை நிகழ்ந்துள்ளன.

அனுரதபுரம் போதி மரத்தின் கீழ் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதான புலிகளின் படுகொலை தாக்குதல.;

நவாலி தேவாலயத்தின் மீதான அரச படைகளின் குண்டு வீச்சு படுகொலைத் தாக்குதல்
காத்தான் குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதான படுகொலைத்தாக்குதல்

இவ்வாறு வகை தொகை அற்ற தாக்குதல்கள் இது இலங்கையின் அண்மைய துயரமான அவலமான அவமானகரமான வரலாற்றின் ஒரு பகுதி.

தற்கொலை குண்டுதாரிகள் மனிதாபிமானம் பற்றி போலித்தனமாக அதிர்ச்சி தமிழ் ஊடகங்களிலும் சமூகத்திலும்.

“போற்றி பாடடி பொண்ணே தேவர் காலடி மண்ணே” என தற் கொலை குண்டுகளின் பிரமாக்களை மோகித்து கிடந்த சமூகம்

சக சமூகங்களின் பெண்கள் குழந்தைகளிலிருந்து பாரதத்தின் பிரதமர் வரை உடல் மீதியின்றி அழிக்கப்படும் வரை

வெட்கக் கேடு இந்த காட்டு மிராண்டித்தனத்தை கொண்டாடி பூசிப்பது.
மீண்டும் வருகிறேன். எங்கோ இருக்கும் சர்வதேச பயங்கரவாதிகளின் நாசகார நலன்களுக்காக இங்குள்ள மக்களிடையேயான பாரம்பரிய உறவுகள் சிதைந்தழிய வேண்டுமா.
இந்த அழகிய ரம்மியமான தீவில் எளிலார்ந்த வாழ்வொன்றை ஸ்தாபித்திட முடியாதா?
ஏத்தனை வருடங்கள் நாட்கள் கடந்து போயின.

ஏல்லாரும் இன்புற்றிருக்கவே இவ்வுலகு.

மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டங்கள் இராணுவவாதம் இதற்கு தீர்வல்ல.
இவற்றின் தாற்பரியங்களை 3 தசாப்தங்களுக்கு மேலாக தமிழர்களும் இலங்கையின் சகல சமூகங்களும் அனுபவித்தன.

அடிப்படையான பாதுகாப்பு ஏற்பாடுகள் புலனாய்வுகள் விழிப்புணர்வுகள் அவசியம்.இந்தியா உட்பட சர்வதேசத்தின் துணை அவசியம்.

ஆனால் வீதித்தடைகளும் துவக்குகளும் சம்பாத்துகளும, இரும்பு தொப்பிகளும் விறைத்த மனிதர்களும் காணமல் போதலும் சித்திரவதைகளும் கருத்து சுதந்திர மறுப்பும் காலவரையறையின்றிய காலத்திற்கு தடுப்பும் என்ற நிலை அந்த நரகத்து நாட்கள் மீள வேண்டாமே.
இவ்வாறன நிலை உருவானால் நிலைமை மேலும் மேலும் பாரதூரமாக மாறும் எத்தனை ஆண்டுகள் என்று தெரியாத அளவிற்கு நீடிக்கும்.

இந்தியா உட்பட ஜனநாயக சர்வதேச நாடுகள் இத்தகைய நிலைமைகளை எவ்வாறு கையாளுகின்றன என்பதிலிருந்து கற்போம்.

சமூகங்களிடையே வெறுப்புணர்வை வளர்ப்பவர்கள் மீதான உறுதியான நடவடிக்கைகள் தேவை.
சமூகங்களிடையே உறவை மீள்கட்டி எழுப்புவதற்கான பாரிய பிரமாண்டமான இயக்கங்கள் தேவை.
சமூகங்களிடயே இடைவெளியை குறைப்பதற்கு ஐக்கியத்தை வலுப்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதே இன்றைய முக்கியமானகேள்வி.

குழந்தைகளின் சிரிப்பை அழித்து விடும் மரண தேசமாக கண்ணீர் துளியாக இந்த நாடு தொடரவேண்டாமே.

இலங்கையின் அமைவிடம் இயற்கை சூழல் பல்கலாச்சார வாழ்கை பாதுகாப்படுமானால்
சமூக பொருளாதார தளங்களில் இலங்கை உலகின் சிகரங்களை தொடமுடியும்.
சுயநலம்மிக்க பேராசை கொண்ட அரசியல் தலைமைத்துவங்கள் இந்த நாட்டை நரகத்திற்கு இழுத்து வந்திருக்கின்றன.

நடந்து முடிந்த சம்பவங்கள் பற்றி இனவாத இராணுவவாத வழிகளில் அன்றி வேறு விதமாக இந்த தலைமைத்துவங்களால் சிந்திக்கமுடியாது .

நிகழ்ந்த சம்பவங்கள் பற்றிய பிரக்ஞைம் அவர்களுக்கு கிiயாது. தமது அதிகாரம் எதிர்காலம் பற்றிய தியானம் மாத்திரம் தான் அவர்களிடம் மண்டியிருக்கிறது. நாடு எக்கேடு கெட்டால் என்ன.
2018 அக்டோபார் தொடர்ந்து 50 நாட்கள் அதன் உச்ச கட்ட காட்சியை இந்த நாடும் உலகமும் கண்டது.

அர்ப்பணிப்பும் பிரக்ஞையும் ஜனநாயக மனிதாபிமான சமத்துவ எண்ணமும் கொண்ட தலைமைத்துவத்தின் வரலாற்று அவசியம் இலங்கை தழுவிய அளவில் எல்லா சமூகங்களிலும் எழுந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறன்று இந்தநாட்டின் அனைத்து மக்களின் மனங்களிலும் துயரக்களை அப்பி இருந்தது. சுனாமி நாட்கள் போல

மானிட ஐக்கியத்திற்கான இந்த இதயங்கள் ஒருமித்த கணங்கள் அணையாத தீபமாக வளர்த்தெடுக்கப்படவேண்டும்.