அலெப்போ பற்றி சில குறிப்புகள்.

சிரியாவின் மிகப்பெரிய நகரமான அலெப்போ கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து அரச படைகளால் விடுவிக்கப் பட்டுள்ளது. சிரிய அரசைப் பொறுத்தவரையில், ஐந்தாண்டு கால உள்நாட்டுப் போரில் இது ஒரு பெரிய திருப்புமுனை. சிரியாவில், குறைந்தது ஒரு டசின் இயக்கங்கள் சிரிய அரசுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடுகின்றன. அவற்றிற்கு அமெரிக்கா, சவூதி அரேபியா, மற்றும் மேற்குலக நாடுகளின் உதவிகள் துருக்கி ஊடாக கிடைத்து வந்தன.

– அனேகமாக எல்லா இயக்கங்களும் ஏதாவதொரு இஸ்லாமிய மத அடிப்படையிலான பெயரைக் கொண்டிருக்கும். தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்த கிறிஸ்தவர்களையும், ஷியா முஸ்லிம்களையும் இனச் சுத்திகரிப்பு செய்து விட்டன.

– மேற்குலகம் ஆதரித்த கிளர்ச்சிக் குழுக்களின் போராளிகள், ஆதரவாளர்கள் அனைவரும் சுன்னி முஸ்லிம் சமூகத்தினர் தான். கடுமையான மதக் கட்டுப்பாடுகளை சுன்னி முஸ்லிம் பிரிவினர் மீது திணித்து வந்தன. அவற்றிற்கும் ஐ.எஸ்.இற்கும் இடையிலான வித்தியாசம் ஒன்று மட்டும் தான். சிரியாவின் சுன்னி முஸ்லிம் சமூகத்தவரின் ஏக பிரதிநிதி தாமே என்று ஐ.எஸ். உரிமை கோருகின்றது.

– சிரிய அரச படைகளினால் அலெப்போ முற்றுகைப் போர் ஆரம்பமான போதே, கிளர்ச்சிக் குழுக்களை காப்பாற்றுவதற்கு மேற்குலக நாடுகள் முயற்சித்தன. ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுத்து பேச்சுவார்த்தைகள், யுத்த நிறுத்தம் என்று காலம் கடத்தி வந்தன. ஆனால், அந்தத் தந்திரம் பலிக்கவில்லை.

– அலெப்போ கைப்பற்றப் பட்ட பின்னர், சிரிய அரச படையினரின் அடுத்த கட்ட படை நடவடிக்கை எதுவாக இருக்கும் என்பதே கேள்விக்குறி. துருக்கி எல்லையோரம் உள்ள நாட்டுப்புறப் பகுதி இன்னமும் கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கே சனத்தொகை குறைவு. ஆனால், துருக்கி ஊடாக கிடைக்கும் உதவிகளை தடுத்து நிறுத்துவதற்கு அந்தப் பகுதியையும் கைப்பற்றுவது அவசியம்.

– கிளர்ச்சிக் குழுக்களில் உள்ள போராளிகள் அலெப்போ வீழ்ச்சியின் பின்னர் மனமுடைந்து காணப்படுகின்றனர். உண்மையில், இறுதியாக நடந்த போரில் அவர்களை வெளியேற்றுவதற்காக போர் நிறுத்தம் கொண்டுவரப் பட்டது. அரச படைகளும் அதற்கு உடன்பட்டன. அல்கைதாவுடன் தொடர்புடைய எண்ணாயிரம் போராளிகளும் மேற்குலக உதவியுடன் வெளியேற்றப் பட்டதாக அரச படைகள் தெரிவிக்கின்றன.

– போருக்குள் அகப்பட்ட பொது மக்களின் நிலை என்ன? நிச்சயமாக பொது மக்களில் கணிசமான அளவு பிரிவினர் கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆதரவாக இருந்தனர். குறிப்பாக போராளிகளின் குடும்பத்தினர் இறுதி வரையில் இயக்கங்களோடு இருந்தனர். அலெப்போ நகரின் பகுதிகளை அரச படைகள் சிறிது சிறிதாக கைப்பற்றிக் கொண்டிருந்த நேரம், இயக்கப் போராளிகள் பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். மக்களும் அவர்களோடு இழுபட்டுச் சென்றனர். தற்போது அனைவரும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்து விட்டனர். பத்தாயிரத்திற்கும் அதிகமான போராளிகள் சரணடைந்துள்ளனர்.

– அலெப்போ கைப்பற்றப் பட்ட பின்னர் நடந்ததாக சொல்லப் படும் படுகொலைகள், பாலியல் பலாத்காரம் பற்றிய தகவல்கள் உண்மையா? போரில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. இருப்பினும் அந்தத் தகவல்கள் இயக்கங்களின் ஆதரவாளர்களிடம் இருந்தே வருகின்றன. சுதந்திரமான அமைப்புகளால் உறுதிப் படுத்தப் படவில்லை. (இது மேற்குலக அணுகுமுறை) இருப்பினும், அதற்கு மேற்குலக ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன.

– கிளர்ச்சிக் குழுக்கள் மட்டுமல்லாது, மேற்குலகமும் எதிர்பார்த்திராத அலெப்போவின் வீழ்ச்சி ஒரு பெரிய அதிர்ச்சி. இறுதி நேரத்தில் முற்றுகையை விலக்கிக் கொள்ளுமாறு ரஷ்யா ஊடாக அழுத்தம் கொடுத்தும் வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை. ஆகையினால், இனி வருங்காலத்தில் ஆசாத் அரசு மீது போர்க்குற்ற விசாரணை கொண்டு வருவதற்காக தற்போதே படுகொலைகள் பற்றிய தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது.

– உண்மையில் சில சரணடைந்த போராளிகளும், இயக்கங்களுக்கு ஆதரவு வழங்கிய மக்களில் சிலரும், அரச படைகளால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப் படலாம். அதற்கான வாய்ப்புகள் உள்ளன. போர்க்குற்றங்கள் நடந்திருக்கலாம். இல்லையென்று மறுக்க முடியாது. ஆனால், இவ்வளவு காலமும், மேற்குலகம் பயங்கரவாதிகளாக சித்தரித்த, மத அடிப்படைவாத வன்முறைக் கும்பல்களின் ஆட்சி நடந்த நேரம், அங்கு நடந்த குற்றங்கள் பற்றி யாரும் கவலைப் படவில்லை. மேற்குலகின் முக்கியமான பிரச்சினை “இஸ்லாமியப் பயங்கரவாதம்” அல்ல.

(Kalai Marx)