ஆனாரூனாவும் நல்லகண்ணுவின் காரும்!

(இளவேனில்)

தமிழ்,தமிழர் நலனோடு தம் வாழ்வைப் பிணைத்துக்கொண்ட நா.அருணாசலம், ‘தமிழ்ச் சான்றோர் பேரவை’, ‘தந்தை பெரியார் தமிழிசை மன்றம்’ உள்ளிட்ட அமைப்புகளை நிறுவியவர். தமிழிசை மன்றத்தின் சார்பாக ஆண்டுதோறும் மார்கழி இசை விழாக்களை நடத்தியவர். ‘நந்தன்’ இதழின் ஆசிரியராக இருந்தவர். இலங்கை தமிழர் விவகாரத்திலும் தமிழ்வழிக்கல்விக்காகவும் தொடர்ந்து பணியாற்றியவர். தமிழறிஞர்களையும் எழுத்தாளர்களையும் ஆதரித்த அருணாசலத்துக்கு இன்னொரு பெயர் இருந்தது. அதன் வாயிலாக அவரைத் தமிழகம் அறிந்திருதிருந்தது. ஆனாரூனா!

அரசியல் என்றால் வியாபாரம்போல் ஆகிவிட்ட இந்நாட்களில் மக்களுக்காகத் தியாகங்கள் செய்பவர்களுக்கு உண்மையாகவே என்ன மதிப்பிருக்கிறது என்ற கேள்வி பொதுச் சமூகத்திடமும் இளைய தலைமுறை அரசியல்வாதிகளிடமும் எழுவது வழக்கம். மக்களுக்காக உழைப்பவர்களுக்குக் கட்சிப் பேதங்களையெல்லாம் தாண்டி எல்லா இடங்களிலும் அவர்களை நேசிப்பவர்கள் இருப்பார்கள் என்பதற்கு ஆனாரூனாவுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கும் இடையிலான உறவை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். பெரிய நட்பு, உறவு என்றெல்லாம் சொல்ல முடியாது, நல்லகண்ணுவைத் தூரத்திலிருந்து பார்த்தவர்களில் ஒருவராகவே ஆனாரூனாவும் இருந்தார்.

‘காரா.. எனக்கா?’

அந்நாட்களில் நெரிசல் மிகுந்த பேருந்திலிருந்து தள்ளுமுள்ளுகளைத் தாங்கிக்கொண்டு இறங்கிக்கொண்டிருந்தார் நல்லகண்ணு. அவர் இரண்டு மூன்று முறை இவ்வாறு சக்கையாய் பிழியப்பட்டதைப் பார்த்த நான், ஆனா ரூனாவிடம் மிகுந்த மனஉளைச்சலுடன் சொன்னேன். “ஒரு மூத்த தலைவர், 80 வயதில் இப்படிப் பிழியப் பிழியப் பயணம் செய்வதைப் பார்த்தால் நமக்கு மனசு வலிக்கிறது, ஐயா…”

தமது நிறுவனத்தின் கிளைகளைப் பார்வையிடச் சென்றுகொண்டிருந்த ஆனாரூனா, “எளிமையாக இருப்பது ஒன்றும் எளிதான காரியமல்ல. ஒரு கம்யூனிஸ்ட் தலைவருக்கு உதவ யார் வருவார்? நாம் செய்வோம். உடனே, ஒரு கார் வாங்கிக் கொடுத்துவிடுவோம்!” என்றார்.

30 விநாடிகளில், சிவப்பு நிறத்தில் ஒரு ‘டவேரா’ கார் வாங்கியாயிற்று. பதிவுசெய்யப்பட்டது. சிறப்பு எண்ணாக ‘6080’ இருக்க வேண்டும் என்று கேட்டு வாங்கினார். 60 – நல்லகண்ணுவின் பொது வாழ்வு ஆண்டாகும். 80 – அவருடைய அன்றைய அகவையைக் குறிக்கும்.

கார் தயார், “நல்லகண்ணுவிடம் எங்கே, எப்போது ஒப்படைக்கலாம் என்று கேளுங்கள்” என்றார் ஆனா ரூனா.

நான் நல்லகண்ணுவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘‘‘நந்தன்’ ஆசிரியர் ஆனா ரூனா உங்களுக்கு ஒரு கார் அன்பளிப்பாகத் தர விரும்பி வாங்கியிருக்கிறார், எங்கே வர வேண்டும்?” என்று கேட்டேன்.

“காரா? அப்படியெல்லாம் எதுவும் செய்துவிடாதீர்கள், பிறகு பேசுகிறேன்” என்று சொல்லிவிட்டுத் தொலைபேசித் தொடர்பைத் துண்டித்தார் நல்லகண்ணு.

எந்த நேரத்திலும் நேரிலோ, தொலைபேசி மூலமோ நல்லகண்ணுவுடன் பேசமுடியும். தொடர்பு கிடைக்காத சமயங்களில் சில நொடிகளில் அவரே தொடர்புகொள்வார். ஆனால் ‘கார் – அன்பளிப்பு’என்று சொன்னதால், அதன்பிறகு என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர், ‘தாமரை’ இதழாசிரியர் சி.மகேந்திரனைத் தொடர்புகொண்டு, ஆனா ரூனாவின் விருப்பத்தைத் தெரிவித்தேன். எப்போதும் என்னிடம் அன்பாகப் பேசும் மகேந்திரன், செய்தி அறிந்ததும் கடுமையான குரலில் சொன்னார், “என்ன, இப்படிச் செய்துவிட்டீர்கள்? உங்களுக்குத் தெரியாதா? ஒரு கம்யூனிஸ்ட் தலைவருக்கு ஒருவர் கார் வாங்கித் தருவது சரியா? அதை நல்லகண்ணு ஏற்றுக்கொள்வார் என்று எப்படி நினைத்தீர்கள்?”

இரண்டு மூன்று நாட்களாக மகேந்திரனிடம் கெஞ்சிப் பார்த்தேன். அவர் மசியவில்லை. பிறகு என்னைச் சமாதானப்படுத்துவதற்காக, “அடுத்த வாரம் திருப்பூரில் கட்சியின் செயற்குழு கூடுகிறது. அங்கே பேசி ஒப்புதல் கிடைத்தால் சொல்கிறேன்” என்றார்.

கைகொடுத்த கருணாநிதி

ஒரு வாரம் கழிந்தது. செயற்குழுவும் கூடி முடிந்தது. மகேந்திரனிடம் தொடர்புகொண்டு, “என்ன முடிவாயிற்று?” என்றேன். “செயற்குழு ஒப்புதல் தரவில்லை!” என்று மூன்றே சொற்களில் முடித்துக்கொண்டார்.

ஆனா ரூனா வருத்தம் கொண்டார்.

“வருத்தப்படாதீர்கள், அடுத்த வாரம் காமராஜர் அரங்கத்தில் நல்லகண்ணுவின் 80-வது பிறந்த நாள் விழா, கருணாநிதி தலைமையில் நடக்கிறது. கருணாநிதியிடம் விஷயத்தைச் சொல்லி, அவர் மூலம் காரை அன்பளிப்பாக வழங்கிவிடலாம்” என்றேன் நான்.

“முடியுமா?”

“கருணாநிதி நினைத்தால் முடித்துவிடலாம்.”

நல்லகண்ணுவின் 80-வது பிறந்த நாள் விழா. விடுதலைப் போராட்ட வீரரை வாழ்த்த வாரீர்! என்று காமராஜர் அரங்கம் கட்டியம் கூறியது. அனைவர் கைகளிலும் நல்லகண்ணுவின் படத்துடன் வெளிவந்திருந்த தமிழ்ச்சான்றோர் பேரவைச் செய்திமடல் சிறப்பு மலர்!

மேடையில் தா.பாண்டியன் பேசிக்கொண்டிருந்தபோது, ஆனா ரூனா கருணாநிதிக்கு அருகில் போய் மெதுவாக, “நல்லகண்ணுவுக்கு ஒரு கார் பரிசு தர விரும்புகிறேன். அவர் அதை வாங்க மறுக்கிறார். நீங்கள் கார் தரப்படுவதை அறிவித்துவிடுங்கள். வேறு வழியில்லாமல் ஏற்றுக்கொள்வார்கள்” என்றார்.

கருணாநிதி புன்சிரிப்புடன், “நல்ல யோசனை, என்ன கார்?” என்றார்.

“டவேரா.”

“என்ன விலை?”

“10 லட்சம் ரூபாய்.”

“கார் தந்துவிடுவீர்கள். ஓட்டுநர் சம்பளம், பெட்ரோல் இதையெல்லாம் யார்தருவார்?”

“நானே தருவேன்.”

கருணாநிதி ஆனா ரூனாவின் கையைச் செல்லமாக அழுத்தியவாறு, “சரி, அறிவித்துவிடுகிறேன்” என்றார்.

தா.பாண்டியன் பேசி முடித்ததும், கருணாநிதி சிறப்புரையாற்றத் தொடங்கினார்.

“கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணு, வயதால் எனக்குத் தம்பி, தொண்டால் எனக்கு அண்ணன். தொண்டால் மூத்த அண்ணனை, வயதால் மூத்த இந்த அண்ணன் வாழ்த்துகிறேன்’’ என்று கருணாநிதி குறிப்பிட்டபோது, அரங்கமே உற்சாகத்தால் ஆரவாரித்தது.

தொடர்ந்து பேசிய கருணாநிதி, “தமிழ்ச்சான்றோர் பேரவை நிறுவனரும் ‘நந்தன்’ இதழ் ஆசிரியருமான அருணாசலம், நல்லகண்ணு அகவை முதிர்ந்த பருவத்தில் பேருந்தில் பயணம் செய்து சிரமப்படக் கூடாது என்கிற நல்லெண்ணத்தில் ஒரு புதிய கார் வாங்கி, அதை நான் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவருடைய விருப்பத்தை என்னால் மறுக்க முடியவில்லை. அதனால், அந்த காரின் சாவியைக் கட்சியின் செயலாளர் தா.பாண்டியனிடம் வழங்க விரும்புகிறேன். என் விருப்பத்தை அவர் மறுக்க மாட்டார் என்று நம்புகிறேன்” என்றார். மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றார்கள். வேறு வழியில்லாமல் தா.பாண்டியன் கருணாநிதியிடமிருந்து கார் சாவியை வாங்கிக்கொண்டார்.

‘என்ன கட்சி இது?’

விழா முடிந்து திரும்பும்போது, “என்ன ஐயா, நல்லகண்ணுவும் அவர் கட்சியும்? அன்பளிப்பாக ஒரு கார் தருவதற்கு இவ்வளவு சிரமமா?” என்றார் ஆனா ரூனா.

“அப்படியில்லை ஐயா, நீங்கள் ஒரு கார் வாங்கித் தருகிறீர்கள். வசதி படைத்த இன்னொருவர் வீடு வாங்கித் தரலாம். இப்படி ஒவ்வொரு தலைவரும் அன்பளிப்பு என்கிற பெயரில் சொத்துகளைச் சேர்த்தால், கம்யூனிஸ்ட் கட்சி என்பது ஒரு `பிரைவேட் லிமிடெட்’ கம்பெனி மாதிரி ஆகிவிடும் அல்லவா? அதனால்தான் கம்யூனிஸ்ட் தலைவர்கள் அன்பளிப்புகளை மறுக்கிறார்கள்.

இதனால் செல்வந்தர்கள் மனம் புண்படுமென்பதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. ஒரு செய்தி, கட்சி மேடைகளில் கட்சித் தொண்டர்கள் வழங்கும் துண்டு, சால்வைகளைக் கூட கட்சியின் முழு நேர ஊழியர்களுக்குப் பகிர்ந்து அளித்துவிடுவார்கள், தெரியுமோ?” என்றேன் நான்.

“நீங்கள் கம்யூனிஸ்ட்டுகளை விட்டுக்கொடுக்க மாட்டீர்களே, ஒன்றுசொல்கிறேன். இங்கே எல்லோரும் கம்யூனிஸ்ட் ஆக விரும்புவதில்லை. எல்லோரும் பணக்காரன் ஆகவே ஆசைப்படுகிறார்கள்.”

“எல்லோரும் பணக்காரர்கள் ஆவது நல்லதுதானே? ஆனால் ‘எல்லோரும்’ என்பது மிகவும் முக்கியம்.”

ஆனா ரூனா சிரித்துவிட்டார்.

“சரி, கார் நல்லகண்ணுவிடம் இருக்குமா? கட்சிக்குப் போய்ச் சேருமா?”

“நிச்சயமாகக் கட்சிக்குத்தான் கார். நல்லகண்ணுவும் அதில் பயணம் செய்யலாம்.”

மறுநாள் கிடைத்த செய்தி – கார் மாத்திரமல்ல, நல்லகண்ணுவுக்கு ‘நலஉதவி’யாகக் கட்சித் தோழர்கள் திரட்டிய ஒரு கோடி ரூபாயையும் அவர் கட்சிக்கே வழங்கிவிட்டார்.

– இளவேனில், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர்